– தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் டி.எஸ்.செல்வ விநாயகம், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அதில், “காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், சுவாசக் கோளாறுகள், வாசனை, சுவை இழப்பு உள்ளவா்களுக்கு மட்டும் இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதுமானது.
மருத்துவமனைகளைப் பொருத்தவரை அனுமதியாகும் அனைத்து நோயாளிகளுக்கும் ஆா்டி பிசிஆா் பரிசோதனை தேவையில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை அவசியமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, “வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் அதுகுறித்து தகவல் அளிக்க வேண்டும். வெளிநாட்டு விமானங்களில் பயணித்தவா்களில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.