டெங்கு காய்ச்சலைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும்!

– தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்நோய் போன்ற நோய்களும் பரவி வருகின்றன. அதில் குறிப்பாக தற்போது டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருகிறது.

மழைக்கு பிறகு கடந்த 2 வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மழைக்கு முன்பு 10 குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதில் 2 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது.

ஆனால் தற்போது 10 குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அதில் 6 அல்லது 7 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மழையின்போது வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. 

தமிழகம் முழுவதும் இதுவரை 5182 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் சமீப காலமாக கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

இதுகுறித்து அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், “வீடு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்து கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

வீட்டில் யாருக்காவது காய்ச்சல் பரவினால் 84383 53355 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்க வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இதேபோல் சென்னை மாநகராட்சியும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. ஆனாலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தினமும் பதிவாகும் காய்ச்சல் தொடர்பான தகவல்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அல்லது வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உடனடியாக தெரியபடுத்த வேண்டும்.

இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த முடியும்.

அதன்மூலம் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். இதை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

You might also like