உயிர்ப்புள்ள வசனங்களில் உயிர் வாழும் ஆரூர்தாஸ்!

ஏசுதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட ஆரூர்தாஸ் திருவாரூரில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.

தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக இருந்து மேடை நாடகங்களில் பயிற்சி
பெற்று தமிழ்த் திரைப்படங்களுக்கு எழுத வந்தார்.

தமிழ்ப்படங்கள் வசனங்களால் உயிர்வாழ்ந்த காலகட்டத்தில் எழுதிய ஆரூர்தாஸ் பாசமலர், பார் மகளே பார், அன்பே வா, வேட்டைக்காரன் போன்ற 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதிய சாதனையாளர்.

குறிப்பாக அறுபதுகளில் வெற்றிபெற்ற பெரும்பாலான எம்ஜிஆர், சிவாஜி படங்கள் இவர் உழைப்பால் விளைந்தவை என்றால் மிகை இல்லை.

“ஆனந்தா.. நான் என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல எப்பவும் ஆனந்தக் கண்ணீர மட்டும்தான் பார்க்கணும்…” என்று அவர் பாசமலர் சிவாஜிக்கு எழுதிய வசனம் அப்போது மிகவும் பிரபலமாக எல்லோராலும் உச்சரிக்கப்பட்டது.

வசனம் மட்டுமல்ல திரைக்கதை, பாடல் புனைவு, படத்தயாரிப்பு, இயக்கம், தொலைக்காட்சித் தொடருக்கு எழுதியது எனப் பன்முக ஆற்றலை தாஸ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

70 – 80 களில் மெல்ல நிறம் மாறத் தொடங்கிய தமிழ்ப் படங்களிலும் தாஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

கே.விஜயன் இயக்கிய ‘விதி’ படம் இவரெழுதிய கோர்ட் வசனங்களுக்காகவே திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டு பெரிய வெற்றிபெற்றது.

நிறைய மொழிமாற்றுப் படங்களுக்கும் வசனம் எழுதிய ஆரூர்தாஸ் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட ‘பூ ஒன்று புயலானது’ படத்துக்கு காரசார வசனங்கள் எழுதினார்.

அந்தப்படம் நூறுநாட்கள் கடந்து ஓடியது. விஜயசாந்திக்கு இங்கு ஒரு வீராங்கனை இமேஜும் ஏற்பட்டது.

– நன்றி: கீரனூர் ஜாகீர் ராஜா முகநூல் பதிவு

You might also like