இயக்குநர் சற்குணம் மனந்திறந்த பேட்டி!
லைக்கா தயாரிப்பில் இயக்குநர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைபடம் பட்டத்து அரசன்.
படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர். கே. சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த படைப்பாக இந்த பட்டத்து அரசன் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தைப் பற்றிச் செய்தியாளர்களுக்கு இயக்குனர் சற்குணம் பேட்டி அளித்தார்.
தஞ்சை மாவட்டம் ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா, பேரன், மாமன், மச்சான் என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றிக் கேள்விப்பட்டேன்.
அது என்னை பாதித்தது உடனே நேரடியாகச் சென்று அவர்களிடம் பேசி அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டேன்.
இருப்பினும் அவர்கள் சொன்ன விஷயம் ஒரு படம் எடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் அதனுடன் என் கற்பனை கதையை சேர்த்து திரைக்கதையை உருவாக்கினேன்.
அதேபோல் தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அவரைப் பற்றி அந்த பகுதியில் தெரியாதவர்களே இருக்கமுடியாது.
அந்த பெயரை இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமான ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்துள்ளேன்.
எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி விளையாட்டு வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளேன்.
கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் பேக்காக வந்துள்ளது. ராஜ்கிரண், அதர்வா கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளது.
அவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக அமையும்.
மேலும் இந்த படத்தின் கதாநாயகியாகக் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகை ஆஷிகா ரங்கநாத், முதல் முறையாக தமிழில் கதாநாயகி போல் இல்லாமல் ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெற்றிலை தோட்டம் என்பது இதுவரை சினிமாவில் அவ்வளவாக காட்டப்படாத பேக்ட்ராப். அதை அழகாக தனது கேமராவில் லோகநாதன் படம்பிடித்துள்ளார்.
அதேபோல் லைக்கா நிறுவனம் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தேவையான பட்ஜெட்டையும் கொடுத்து இந்த படத்தை ஒரு பிரமாண்ட படமாக உருவாக்கித் தந்துள்ளனர்” என்றார்.