அனல் மேலே பனித்துளி – மானம் எனும் பெருவெளி!

மிகச்சில படங்களே பிரதானக் கதாபாத்திரங்களாக நம்மைக் கற்பனை செய்ய வைக்கும். அவற்றில் சில, அப்பாத்திரங்களின் வலிகளைக் கண்டு யாருக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துவிடக் கூடாது என்று பதற வைக்கும்.

ஆன்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், அழகம்பெருமாள், இளவரசு, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அனல் மேலே பனித்துளி’ அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், புதுமுகம் கெய்சர் ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படம் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

கறையாகப் படிந்த அசம்பாவிதம்!

தன்னோடு பணியாற்றும் அனிதா (லவ்லின்) என்ற பெண்ணின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார் மதி (ஆன்ட்ரியா). திருமணத்தில் பங்கேற்றுவிட்டு மாலை வேளையில் ‘சன்செட்’ பாயிண்ட்டுக்கு செல்கிறார்.

ஹெல்மெட் அணிந்த மூன்று பேர் அவரைக் காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர்.

மயக்கம் தெளிந்து எழுந்ததும் நடந்த விபரீதத்தை உணர்ந்த மதி, மெல்ல நடந்து அருகிலிருக்கும் நகரப் பகுதியில் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.

பெண் மருத்துவர் பணியில் இல்லாத காரணத்தால், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காவல் நிலையத்திற்குச் சென்று பாலியல் அத்துமீறலுக்கு ஆளானது பற்றி எஸ்ஐ தில்லைநாயகத்திடம் (அழகம்பெருமாள்) புகார் தரும் மதி, கடந்த காலத்தில் தன்னோடு மோதிய சிலரைக் கொடைக்கானலில் கண்டது பற்றி சந்தேகம் தெரிவிக்கிறார்.

மிகச்சில மணி நேரத்தில் அவர்களனைவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களின் அலறல் சத்தங்களுக்கு நடுவே தன்னைப் பாதிப்புக்குள்ளாக்கிய ஹெல்மெட் மனிதர்களின் உண்மை முகம் எதுவெனக் கண்டறிகிறார் மதி.

அதன்பின், அவரது வாழ்க்கை என்னவானது எனச் சொல்கிறது ‘அனல் மேலே பனித்துளி’.

தான் எதிர்கொண்ட அசம்பாவிதத்தை தன் மீது படிந்த கறையாக இச்சமூகம் கருதும்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் மனம் எப்படியெல்லாம் காயமுறும் என்பதைக் காட்டிய வகையில் கவனம் பெறுகிறது இப்படம்.

எது மானம்?

தினமும் பல ஆண்களின் எரிச்சலை, கோபத்தை, வக்கிரத்தை, ஏமாற்றுத்தனத்தை ஒரு பெண் எதிர்கொள்கிறார். அப்படிப்பட்ட சூழலில் ஒரு பாதிப்புக்கு உள்ளானால், அப்பெண்ணின் மனதில் பல சந்தேகங்கள் எழும்.

இதுவரை சந்தித்திராத அனுபவத்தால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தவிக்கும். அதையும் மீறி உண்மையின் கீற்று லேசாகத் தென்படும்போது, அந்த குழப்பம் இன்னும் அதிகமாகும்.

இந்த பாதிப்பில் இருந்து மீளவே முடியாதோ என்ற அச்சம் பூதாகரமாகும்போது, அதனை வெற்றிகொள்ள இயலாமல் மனநலம் அதலபாதாளத்திற்குச் செல்லும்.

அப்படியொரு நிலையில் ஒரு பெண் தன் இயல்பு எதுவென்று உணர்வது அசாத்தியமானது. அப்படியொரு பெண்ணாக, ‘அனல் மேலே பனித்துளி’யின் பிரதான பாத்திரமான மதி படைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதியில், ‘மானம் என்பது எனது உடலிலோ, நான் அணிந்திருக்கும் உடையிலோ இல்லை; நான் வாழும் வாழ்க்கையில் இருக்கிறது’ என்று மதி பேசும் வசனம் ‘எது மானம்’ என்ற கேள்விக்குப் பதிலாக பெருவெளியில் எதிரொலிக்கிறது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, நிர்வாணமாகச் சிலரால் படம்பிடிக்கப்பட்டு, சமூகவலைதளங்களில் அக்காட்சி வேறுவிதமாகச் சித்தரிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைக் குறை கூறுபவர்களே அதிகம். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை கணிசம்.

அதனைக் கேள்விக்குட்படுத்துவதோடு, நடந்த கொடுமையை எதிர்த்து ஒரு பெண் போராடத் துணிந்தால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் மேலும் நிகழாமல் தடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் கெய்சர் ஆனந்த்.

ஆன்ட்ரியாவின் முதிர்ச்சி!

படம் முழுக்க ஆன்ட்ரியா நிறைந்திருக்கிறார். அழகான, தீரமான, தன் வாழ்வு மீது தெளிவு கொண்ட பெண்ணாக முற்பாதி காட்சிகளில் தோன்றியிருப்பது, பின்பாதியில் நலிவுற்று ஒடுங்கும் அனுபவத்தைக் கடத்த உதவியிருக்கிறது.

எதிர்கொண்ட அவலத்தை முகத்திலும் கண்களிலும் தேக்கி வைத்துக் கொண்டிருப்பது போன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அழகு.

அதேநேரத்தில், பதின்பருவப் பெண்ணாகச் சில இடங்களில் காட்டியதைத் தவிர்த்திருக்கலாமோ என்று சொல்ல வைக்கிறது அவரது முதிர்ச்சி.

மதியைத் திருமணம் செய்யவிருக்கும் சரண் எனும் பாத்திரத்தில் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார். அவலத்திற்கு முன், அவலத்திற்குப் பின் என்று திரைக்கதையை இரண்டாகப் பிரித்தால் அவரது நடிப்பில் உள்ள வேறுபாட்டை உணரலாம்.

அழகம்பெருமாளும் இளவரசுவும் இதுவரை ஏற்காத பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பலமே அவர்களின் இருப்புதான். அதேபோல, இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் அனுபமா குமாரும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.

நான்கைந்து காட்சிகளில் தோன்றினாலும், அனிதா எனும் சாதாரண பெண்ணாக நம் மனதில் பதிகிறார் லவ்லின் சந்திரசேகர். இவரது தாய் விஜியும் கூட நீதிபதியாக ஒரேயொரு காட்சியில் தோன்றியிருக்கிறார்.

லவ்லின் காதலராக வருபவர், பணியிடத்தில் ஆன்ட்ரியாவால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர் இருவரும் சட்டென்று நம் மனதை ஆக்கிரமிக்க அப்பாத்திரங்களின் வடிவமைப்பே காரணம்.

இவர்கள் தவிர்த்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் திரையில் தோன்றி வசனம் பேசியிருந்தாலும், ஆன்ட்ரியாவின் அத்தையாக நடித்த பெண் ஓரிரு பிரேம்களே வந்தாலும் பார்வையாளர்களின் கவனத்தைப் பெறுகிறார்.

இன்றைய பெண்கள் சந்திக்கும் பழமைப் பெண்களின் ஓருருவாகத் தோன்றியிருக்கிறார்.

சென்னையில் ஆன்ட்ரியா பணியாற்றும் இடம், வீடு, ஆதவ் உறவினர் வீடுகளை அழகுறக் காட்டியது போலவே, கொடைக்கானல் வனப்பகுதியில் நடந்துவரும் ஆன்ட்ரியாவின் மனதில் பெருகும் அச்சத்தையும் நமக்கு கடத்தியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு.

ராஜா முகமதுவின் படத்தொகுப்பு வெகுசீராக ஒரு திரைக்கதையை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது.

பாலியல் வல்லுறவை காட்சிகளாகக் காட்டும் சாத்தியம் இருந்தும் வெகுசில ஷாட்களில் நடந்த கொடுமையை உணர்த்தியிருப்பது அருமை.

யூடியூபில் கவனம் பெற்ற ‘மிட்டாய் மிட்டாய்’ பாடல் படத்தில் இடம்பெறவில்லை. திரைக்கதை நகர்வுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று படக்குழு கருதியிருக்கலாம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெனக்கெடலில் ‘கீச்சே கீச்சே’ பாடல் ஒரு மலைப்பிரதேசத்தில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என்றால், ‘தீயோடு போராடும்’ பாடல் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலாக உள்ளது.

சவுண்ட் எபெக்ட்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல இடங்களில் பின்னணி இசையே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன.

குற்றவாளிகளைத் தேடுதல், பயத்தை உணர்தல், உண்மையறிந்து உழல்தல் என்று குறிப்பிட்ட உணர்வுகளுக்கேற்ப பின்னணி இசையைப் பயன்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

இன்றைய பெண்களுக்கானது!

இயக்குனர் கெய்சர் ஆனந்த் எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயம் செய்யும் விதமாக ஒவ்வொரு காட்சியையும் ஷாட்டையும் அமைத்திருக்கிறார்.

பாலியல் வல்லுறவை காட்சிகளாகச் சித்தரித்துவிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணின் துயரங்களையோ பழிவாங்கும் உணர்வையோ முக்கியத்துவப்படுத்துவதைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.

இதில், சம்பந்தப்பட்ட பெண் அந்நிகழ்வுக்குப் பிறகு என்ன செய்தார், சிந்தித்தார் என்பதைக் காட்டியிருப்பது சிறப்பு.

குறிப்பாக மருத்துவமனைக்கும் காவல் நிலையத்திற்கும் அடுத்தடுத்து செல்வதை நுணுக்கமாக காட்டியிருக்கிறது இப்படம்.

ஒரு பொழுதுபோக்கு படம் வேண்டுமென்பவர்களுக்கு இத்திரைக்கதை தள்ளுவண்டியில் ஏறிய உணர்வையே தரும்.

ஆனால், இதுதான் கதை என்று தெரிந்தே படம் பார்க்க முனைபவர்களை கெய்சர் ஆனந்தின் திரைக்கதை ஏமாற்றவில்லை.

குற்றம் செய்தவர்களை நாயகி கண்டறிந்தபிறகு என்ன நடக்கிறது என்பதே இக்கதையில் முதன்மை பெறுகிறது.

குற்றவாளிகளுக்கு குடும்பத்தினரே உதவுகின்றனர். குறிப்பாக, பெண் கொடுத்த மாமனார் இந்த விவகாரத்தில் இருந்து தனது மருமகனைக் காப்பாற்றத் துடிக்கிறார் என்பதே சமூகத்தில் பெண்களை ஆண்கள் எவ்வாறு நோக்குகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

அதனாலேயே பெண்களின் கொடுமைகள் பற்றி அனுபமாவும் விஜியும் கேமிரா நோக்கிப் பேசுவது வெற்றுப் பிரச்சாரமாகத் தோன்றவில்லை.

‘விசாரணை’க்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்திலும் சரி, அவர் வெளியிட்ட ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்திலும் சரி, போலீஸ் அத்துமீறல்கள் காட்டப்பட்டிருக்கும். அது, இப்படத்திலும் தொடர்கிறது.

‘அனல் மேலே பனித்துளி’யின் அச்சாரமாக ‘நம்மூர் பொண்ணுங்க துப்பாக்கிய காட்டுனா கூட நெஞ்சை நிமிர்த்திட்டு நிப்பாளுங்க, துணிய அவுத்துட்டா பயந்துருவாளுங்க’ என்ற வசனம் வருகிறது.

அந்த வார்த்தைகளை மதி எனும் பாத்திரம் எப்படி உடைத்தெறிகிறது என்று சொன்ன வகையில் இந்த படம் இன்றைய பெண்களுக்கானதாக மாறுகிறது.

அதற்காகவே கெய்சர் ஆனந்த், ஆன்ட்ரியா உட்பட மொத்தப் படக்குழுவையும் கொண்டாடலாம்!

-உதய் பாடகலிங்கம்

You might also like