கலகத் தலைவன் – கார்பரேட் கனவுகளைச் சூறையாடுபவன்!

திரைக்கதைக்கும் மூலக்கதைக்குமான இடைவெளி ரொம்பவும் அதிகமாக இருந்துவிடக் கூடாது; அதைப் புரிந்துகொண்டு மையத்தில் ஒரு கதையைப் பொதிந்து அதனைச் சுற்றி நெருப்புக் கோளங்களாய் காட்சிகளை அடுக்குவது ஒரு வகை வித்தை.

இயக்குனர் மகிழ் திருமேனியின் ‘கலகத் தலைவன்’ அப்படியொரு அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறது. அது சரி, படம் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாய், புரிகிற வகையில் அமைந்திருக்கிறதா?

கார்பரேட் நிறுவனச் சரிவு!

ஒரு கார்பரேட் குழுமத்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் புதிதாக ஒரு லாரியை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது.

அதிக டன்கள் ஏற்றும் திறனுடன் வடிவமைத்தாலும், அது வெளியிடும் புகை காற்று மாசு கட்டுப்பாட்டு அளவைக் காட்டிலும் அதிகம்.

இந்தத் தகவல் அந்நிறுவன ஊழியர்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. சில நாட்களில் அது தொலைக்காட்சிகளில் செய்தியாகிறது. அதனால், அந்த லாரி உற்பத்தியே கேள்விக்குறியாகிறது.

அந்த கனரக வாகனம் மட்டுமல்ல, அந்த கார்பரேட் குழுமம் நான்காண்டுகளாக இப்படிப் பல தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிய, ஒரு ஹைடெக் அடியாள் கும்பலின் உதவியை நாடுகிறார் அக்குழுமத் தலைவர்.

வெகு சாதாரணமாக அந்த நபரைப் பிடித்துவிடலாம் என்று அக்கும்பல் களமிறங்க, உடனடியாக அது சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது.

அந்த கார்பரேட் குழுமம் முழுக்க தனக்கென்று ஒரு நெட்வொர்க்கை எதிர்தரப்பு ஏற்படுத்தி வைத்திருப்பது பிடிபடுகிறது.

எதிரே இருப்பது ஒரு நபரா அல்லது ஒரு குழுவா? ஏன் அவர்கள் அந்த கார்பரேட் குழுமச் சரிவை விரும்புகின்றனர்? அது சம்பந்தப்பட்ட உண்மைகளை வெளியிடுவதால் என்ன லாபம்? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தருகிறது ‘கலகத் தலைவன்’.

மேற்சொன்ன கதையை வில்லனை முதன்மையாக வைத்து சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த கார்பரேட் சாம்ராஜ்யத்தின் சரிவுக்கு வித்திடுபவர்தான் இதன் நாயகன்.

இயக்குனர் மகிழ் திருமேனியின் ‘தடம்’, ‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’ மூன்றுமே மையக்கதையை விட்டு வெகுவாக விலகிய திரைக்கதையைக் கொண்டிருக்கும். என்னதான் கதை என்று பிடிபடுவதற்குள் முக்கால்வாசி படம் முடிவடைந்திருக்கும்.

அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘கலகத் தலைவன்’.

இதில் இயக்குனர் காட்டும் கார்பரேட் உலகம் சாதாரண மக்களோடு வெகுவாகத் தொடர்புடையது; அதேநேரத்தில், அவர்கள் கிஞ்சித்தும் அறியாதது.

வித்தியாசமான உதயநிதி!

‘கலகத் தலைவன்’ படத்தில் திருமாறன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவர்தான் நாயகன் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

அதிகம் பேசாதவராக, அதேநேரத்தில் சுற்றத்தை நன்கு கவனிப்பவராக, அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ‘கெத்து’ படத்தில் உதயநிதி ஆக்‌ஷன் ஹீரோவாகியிருந்தாலும் கூட, இதில் அவரது நடிப்பு கனம் கூட்டியிருக்கிறது.

உதயநிதிக்கு ஈடாக இரு பாத்திரங்கள் இப்படத்தில் உள்ளன. நாயகனின் நண்பன் காந்தியாக கலையரசனும் கார்பரேட் கூலிப்படைத் தலைவன் அர்ஜுன் ஆக ஆரவ்வும் நடித்துள்ளனர்.

‘மெட்ராஸ்’ போலவே இதிலும் நண்பன் பாத்திரத்திற்கான மீட்டர் என்னவென்பதை அறிந்து கவுரவமாக வந்து போயிருக்கிறார் கலையரசன்.

வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கும் ஆரவ், தொண்ணூறுகளில் வந்த ஹாலிவுட் ஆக்‌ஷன் படமான ‘யூனிவர்சல் சோல்சியர்’ டால்ப் லண்ட்க்ரெனை நினைவூட்டுகிறார். அதனால், அவரது பாத்திரம் ‘க்ளிஷே’வாக’ பார்க்கப்படும் அபாயமும் உண்டு.

மைதிலி எனும் பாத்திரத்தில் நாயகியாக வந்து போயிருக்கிறார் நிதி அகர்வால். மிகச்சில காட்சிகளில் வந்தாலும், ரசிகர்கள் மனதில் பதியுமளவுக்கு அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர்த்து ஜீவா ரவி, விஜய் ஆதிராஜ், அனுபமா குமார், ஆர்ஜே விக்னேஷ்காந்த் போன்றவர்களும் திரையில் தோன்றுகின்றனர். அங்கனா ராய் என்பவர் அடியாள் கும்பலில் ஒருவராக வருகிறார்.

மற்றபடி பின்னணியில் வந்து போகிறவர்கள், நாயகனிடம் அடி வாங்குபவர்கள் என்று சுமார் மூன்று டஜன் பேர் திரையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

முதல் அரைமணி நேரம் நிற்காமல் தலையாட்டும் கேமிரா, பின்பாதியில் உறுதியாக ஒரு ரிதத்துடன் பாய்ந்தோடுகிறது.

கிட்டத்தட்ட ஒரு அயல்நாட்டு ஆக்‌ஷன் படம் பார்த்த திருப்தியை வெளிப்புறக் காட்சிகளில் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ்.

8 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று, 24 மணி நேரத்திற்கு முன்னர் என்று மூன்று வெவ்வேறு காலகட்டத்தை திரைக்கதை காட்டுகிறது.

கதாபாத்திரங்களின் தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் தென்படாத காரணத்தால், அந்த எழுத்துக்களைக் கவனிக்காவிட்டால் ‘போயே போச்சு’ என்ற வகையில் காட்சிகள் நகர்கின்றன.

ஆனாலும் சலிக்காமல் புகுந்து விளையாடியிருக்கிறார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.

இடைவேளைக்கு முன்னதாக வரும் ரயில்வே ஸ்டேஷன் காட்சி இப்படத்தின் பெரும்பலம். அதில் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கும் அபரிமிதம்.

அரோல் கொரெலியின் இசையின் இரண்டு பாடல்கள் மனதை வருடும் விதமாக இருந்தாலும், சட்டென்று கவரும் வகையில் இல்லை. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

மிகமுக்கியமாக, சேஸிங் காட்சிகளில் அவரது உழைப்பு பிரமாண்டத்தை நம் மனதில் கட்டியெழுப்புகிறது.

போலவே கிளைமேக்ஸ் காட்சியில் கலை இயக்குனர் டி.ராமலிங்கம் குழு அற்புதமாகப் பணியாற்றியுள்ளது.

எல்லா மகிழ் திருமேனியின் படங்களையும் போல இதிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம். அதையும் மீறி சண்டைக்காட்சிகள் ரசிகர்களைக் கவரும்.

மக்களின் ஆர்வலன்!

மகிழ் திருமேனியின் படங்கள் எல்லாமே முதன்முறை பார்க்கும்போது நம்மைக் குழப்பியடிக்கும். இரண்டாம் முறை மட்டுமே என்ன நடந்தது என்று பிடிபடும். ‘கலகத் தலைவன்’ கூட அந்த வகையறா தான்.

ஆனால், இப்படத்தை முதன்முறை பார்க்கும்போதே இரண்டாம் முறை பார்க்க வேண்டுமென்று தோன்றுமா என்று கேட்டால் புருவத்தை உயர்த்தி யோசிக்க வேண்டியிருக்கிறது.

காரணம், ‘அப்போதும் புரியாதோ’ என்று பயமுறுத்தும் வகையிலேயே சில காட்சிகள் அமைந்திருப்பது.

நாட்டின் அரசியலில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு, கட்சிகளுக்கு அவை அளிக்கும் நன்கொடை, கார்பரேட் நிதியாக்கம், அவற்றின் கணக்கு வழக்குகளில் உள்ள மோசடி, அந்நிறுவனங்களைச் சூறையாடத் துடிக்கும் மக்கள் ஆர்வலர்கள் என்று பல விஷயங்கள் இத்திரைக்கதையில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, விசில்ப்ளோயர்கள் எனப்படும் மக்கள் ஆர்வலர்களைப் பற்றிய தகவல்களோ, செய்திகளோ நம்மில் பலரும் அறியாதது.

தினசரியில் பொருளாதாரச் செய்திகள் நிறைந்த பக்கத்தை சட்டென்று புரட்டும் குணமுடையவர்களுக்கு இந்த விஷயங்கள் நிச்சயம் ஒவ்வாதது தான்.

படத்தில் நாயகனுக்கான பிளாஷ்பேக் முழுமையானதாக இல்லை. அதனால் என்ன பிரச்சனை என்றே புரியவில்லை என்ற வாதமும் ரசிகர்களிடம் எழக்கூடும்.

இடைவேளைக்குப் பின்னரும் கூட இதுதான் மையப் பிரச்சனை என்று சொல்லாமல் விட்டிருப்பது இத்திரைக்கதையின் பெரிய மைனஸ்.

அதுவரை படம் புரியாதவர்கள் ‘என்னப்பா ஹீரோவுக்கு என்னதான் பிராப்ளம்’ என்று கேட்கவும் வாய்ப்புகள் அதிகம். அதனால் பரபரப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் நகர்ந்தாலும், திரைக்கதையில் இடைவேளைக்குப் பின் ஒருவித தொய்வு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

போலவே, முதல் 20 நிமிடங்கள் நகரும் விதம் அயர்வைத் தரவும் வாய்ப்பிருக்கிறது. அதையெல்லாம் தாண்டி நிமிர்ந்து உட்கார்ந்தால், நிச்சயம் ‘கலகத் தலைவன்’ உங்களை ஏமாற்றாது.

வெறுமனே ஒரு கார்பரேட் நிறுவனத்தின் சரிவுக்கு வித்திடுகிறார் என்பதைத் தாண்டி, நாயக பாத்திரத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார் மகிழ் திருமேனி. அதனாலேயே நாயகி நிதி உடன் அவர் இடம்பெறும் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

‘என்னதான் தற்காப்புக் கலையில் வல்லவராக இருந்தாலும், ஒரேநேரத்தில் மூன்று பேருக்கு மேல் அடிக்க முடியாது’ என்ற வசனம் வழியாக கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின் வீரியத்திற்கு அடிக்கோடிட்டிருக்கிறார்.

கூடவே, ப்ரூஸ் லீயின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றையும் பயன்படுத்தியிருக்கிறார். அது போன்ற சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் படம் முழுக்க நாயகன் மவுனமாக எடுக்கும் பாடத்தை ஏற்றுக்கொள்ள வைக்கின்றன.

முதல் படம் தவிர்த்து ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ படங்கள் சாதாரண ரசிகர்களையும் ஈர்த்தன.

அவற்றைப் போலவே அபார உழைப்பைக் கொட்டியிருந்தாலும் கூட, ‘கலகத் தலைவன்’ மகிழ் திருமேனியின் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்தமானதாகவே இருக்கும்.

அதுவே, எந்தவிதச் சலசலப்பும் இல்லாமல் தனது தனித்துவத்தால் ஒரு இயக்குனராக எவ்வளவு பேரை ஈர்த்திருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தும்!

-உதய் பாடகலிங்கம்

You might also like