மின்கம்பி செல்லும் பாதைகள் பராமரிக்கப்பட வேண்டும்!

–  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில் குளிக்க சென்றபோது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவள். கணவரின் வருமானத்தில் இருந்தே நானும், எனது 2 குழந்தைகளும் பிழைப்பு நடத்தி வந்தோம்.

எனது கணவர் இறப்பிற்கு பின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம். மின்வாரியத்தின் கவனக்குறைவால் இறந்துபோன எனது கணவரின் மரணத்திற்கு உரிய இழப்பீடு கொடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

அந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மின் வாரியம் தரப்பில், “இயற்கையின் சீற்றத்தால் தென்னை மரக்கிளை விழுந்ததால் வயர் அறுந்து மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதற்கு மின்வாரியம் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பருவநிலை மாற்றங்கள், மழை காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மரக்கிளைகள் மின் கம்பிகளில் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

இதுபோன்று விபத்துகளுக்கு மின்வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது. மேலும் மின் கம்பியில் தென்னை மரக்கிளைகள் விழுந்து மனுதாரர் கணவர் இறந்ததற்கு இயற்கையை குற்றம் கூறி தப்பிக்க முடியாது.

இதற்கு மின் வாரியம் தான் பொறுப்பு என கூறி மனுதாரரின் கணவர் இறந்ததற்கு மின்வாரியமே முழு பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டு மின்சாரம் தாக்கி இறந்தவரின் வயதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளதால் மின்வாரியம் மனுதாரருக்கு ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.

இழப்பீடு தொகையில் 2013-ம் ஆண்டு முதல் இன்று வரை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். 

You might also like