காதல் மன்னன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் பட்டவர் ஜெமினி கணேசன்.
எம்.ஜி.ஆர், சிவாஜி தமிழ்த் திரையுலகில் உயர்ந்திருந்த காலத்தில் தனக்கேற்றபடியான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தவர் ஜெமினி.அதிக கதாநாயகிகளோடு நடித்தவர் என்ற பெயரும் சேர்ந்திருந்தது அவருக்கு.
அப்போது வெண்மையான தாடி படர்ந்த முகத்தோடு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கியிருந்தார்.
கமலுடன், கார்த்திக்குடன் அவர் நடித்த திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சந்திக்கப் போனபோது அப்போதும் பிஸியாகவே இருந்தார்.
பேசும்பொழுது அவருக்குத் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. சிலவற்றிற்கு மென்மை. சிலவற்றிற்குக் கடுமை. இரண்டும் தொனித்தது அவருடைய பேச்சில்.
குமுதம் இதழில் நான் அப்போது எழுதி வந்த “நதிமூலம்’’ தொடரில் கமலைப் பற்றி அவருடைய அனுபவத்தைக் கேட்பதற்காகப் போயிருந்தேன்.
ஏற்கனவே தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லியிருந்தாலும் மென்மையான குரலில் கமலைப் பால்ய வயதில் பார்த்த அனுபவத்தைச் சொல்வதற்கு முன்னால் “களத்தூர் கண்ணம்மா பார்த்திருக்கீங்களா?’’- கேட்டார்.
பார்த்திருப்பதாகச் சொன்னதும் “அதெல்லாம் நல்ல அனுபவம். ஏ.எம்.ராஜா எனக்காகப் பின்னணிப் பாடலைப் பாடியிருப்பார்.
எனக்கும், அவருக்கும் குரல் ஒத்துப் போனது. ரங்காராவ், பாலையான்னு நல்ல டீம்.
பீம்பாய் இயக்குறது தெரியாதபடி இயக்குவார்.
அப்போ படத்தில் எனக்கு மகனா நடிக்க நல்லா துறுதுறுன்னு இருக்கிற பையன் தேவைப்பட்டது. அதுக்குப் பொருத்தமா இருந்தார் கமல்.
அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்பட்டுச்சோ அதைச் சரியாப் பண்ணினார். தேசியவிருதும் கிடைச்சது.
முதல் படத்துலே இது அபூர்வம். அது அவருக்குச் சாத்தியப்பட்டுச்சு..
அப்புறம் இளைஞரா இருந்தப்போ நான் நடிச்ச ‘அன்னை வேளாங்கன்னி’ படத்திலே ஒர்க் பண்ணினார் கமல். ஸ்மார்ட்டா, ஒல்லியா இருப்பார். அப்புறம் எங்கோ உயரத்திற்குப் போயிட்டார்.
அவ்வை சண்முகி படத்திலே மேக்கப் போட அவர் எடுத்துக்கிற சிரத்தை, அளவு கடந்த பொறுமை அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுருக்கேன்…”
“சரி.. அந்தக் கட்டுரையில் நான் சொல்றதை எத்தனை பாரா போடுவீங்கன்னு முதலில் சொல்லுங்க.’’ என்றதும் “குறைஞ்சது ரெண்டு பாரா வரும்’’- பதில் சொன்னதும் பேசிக் கொண்டிருந்த ஹாலை விட்டு எழுந்து உள்ளறைக்குப் போகும்போது சொல்லிவிட்டுப் போனார்.
“கொஞ்சம் இருங்க.. வந்துர்றேன்’’.
சிறிது நேரத்தில் அவர் திரும்பியபோது கையில் ஒரு பேப்பர்.
அவருடைய லெட்டர் பேடில் கமலைப் பற்றிய அவருடைய கருத்தை ஒன்றரை பக்கத்திற்குக் கைப்பட எழுதியிருந்தார். லாவகமான நடை. சொற்களில் சிக்கனம்.
நறுக்கென்று இருந்தன அந்த மூன்று பாராக்களும், “ஐந்து வயதுப் பையனாக கமல் களத்தூர் கண்ணம்மாவில் 1959ல் நடித்தபோதே கமலிடம் ஒரு திறமை. ஒரு சூட்டிகை. முக வசீகரம். எதையும் சட்டென்று புரிந்துகொள்ளும் தன்மை, அதற்கெல்லாம் மேலாகச் சிரத்தையான உழைப்பு எல்லாம் இருந்தன.
ஒரே வார்த்தையில் சொன்னால் அவன் உண்மையிலேயே சகலகலா வல்லவன். டான்ஸ் கற்றுக் கொண்டு ஒரு துடிப்புடன் இருந்த கமலஹாசனை பாலசந்தரிடம் அழைத்துக் கொண்டுபோய் அறிமுகப்படுத்தினேன்’’ – என்று நீண்டிருந்தன அவர் எழுதியிருந்த வரிகள்.
திரையில் பெரும் ஆளுமையாக இருந்தபோதும் பிகு பண்ணுகிற மனநிலை இல்லாமல் இன்னொரு கலைஞனான கமலைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட விதம் பாந்தம்.
கிளம்பும்போது வீட்டில் உள்ள சாமி அறையை அழைத்துக் கொண்டுபோய்க் காட்டினார். நிறைய சிலைகள். அவர்களுடைய முன்னோர்களின் புகைப்படங்கள் எல்லாம் இருந்தன.
விடைபெறும்போது சிறு புன்னகையுடன் சொன்னார்.
“நானும் புதுக்கோட்டையிலிருந்து வந்து சினிமாவில் ஒரு பொஸிஷனுக்கு வர்றதுக்குள்ளே என்ன பாடுபட்டிருக்கேன்.. தெரியுமா?’’
சிக்கனமாக ஒரு வார்த்தை தான்.
கைகூப்பிவிட்டு உள்ளே போய்விட்டார்.
– மணா