ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!

டிஜிபி சைலேந்திரபாபு

கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

“சட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் ராக்கிங் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஆணையில் ராகவன் கமிட்டியின் பல பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டும் என்று தாமதம் செய்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ராக்கிங் நிகழ்வுகளை தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்கள் செயல்படுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராக்கிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையவழி காவல் உதவி, இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like