நான் கொஞ்சம் பிடிவாதக்காரன்: இயக்குநர் கே.பாக்யராஜ்!

இயக்குநர் சிவமாதவ் இயக்கியுள்ள 3.6.9. என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும்,  நடிகருமான கே. பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார்.  சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படத்தில் பிளாக் பாண்டி,  அஜய் கண்ணன்,  சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர்.

உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்திமுடிக்கப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில்,  ஒரு களத்தில் 24 கேமராக்கள்,  150க்கும் மேற்பட்ட நடிகர்,  நடிகைள்,  450 தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது.

சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  நடிகர் பாண்டியராஜன்,  இயக்குனர் சுப்பிரமணியம் சிவா,  நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தீனா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும்போது,  “இன்றைய இயக்குனர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் சார்தான்.  அவர்தான் தனது படங்களில் கதை,  திரைக்கதை,  வசனம்,  இயக்கம் என பல பிரிவுகளையும் ஒரு இயக்குனர் கையாள வேண்டும் என்பதை முதன்முதலில் கொண்டுவந்தவர்.  அதுதான் இன்றுவரை அது தொடர்கிறது” என்றார்.

இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன்,  “இளமையான ஒரு கூட்டணியில் இணைந்து பாக்கியராஜ் சார் பணியாற்றியுள்ளார்.  இன்றைய இளைய தலைமுறைக்கு சாதித்த சீனியர்கள் பற்றி தெரிவதில்லை.  தொடர்ந்து வெள்ளிவிழா படங்களாக கொடுத்தவர்.  அவருடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெள்ளிவிழா படங்கள் தான். எனக்கு சோர்வு ஏற்படும் சமயங்களில், கதை சரியாக யோசிக்கமுடியாத நேரங்களில்,  நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் இயக்குனர் பாக்கியராஜின் மாணவன் என்பதை நினைத்துக் கொள்வேன்.  உடனே உற்சாகம் வந்துவிடும்” என்று எதார்த்தமாகப் பேசினார்.

படத்தின் இயக்குனர் சிவ மாதவ், “இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார்.  அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம் என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும்.

அதனால் இதில் அவர்தான் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள்.  அது உண்மைதான்.  நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன்.  நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.  ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது.  அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது.

ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர்,  ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள். அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள்.  அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.

அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.  இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார்.  அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று சுவாரசியமாகப் பேசினார்.

You might also like