கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டவர்!

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிறருக்குக் கொடுக்க கொடுக்க குறையாத ஒரே செல்வம் கல்வி தான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை உருவாக்கியவரை சிறப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை (நவ.11) தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

இவரது முழுப்பெயர் மெளலானா அபுல் கலாம் முகையுதீன் அகமது ஆசாத் ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1947 ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சராக அபுல் கலாம் ஆசாத் பொறுப்பேற்றார்.

உலக நாடுகளுக்குச் சவால் விடும் வகையில், இந்திய கல்வியில் பெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வந்தார்.

தற்போது மிகப்பெரும் கல்வி நிறுவனமாக பேசப்படுகிற இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தொழிலியல் ஆராய்ச்சி மையம் (CSIR), பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உருவாகுவதற்கு அடித்தளமிட்டவரும் இவரே.

1947-ம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற அபுல் கலாம் ஆசாத், 1958 ஆம் ஆண்டு தான் மறையும் வரையில் பணியாற்றினார்.

இந்தியாவில் அதிக காலம் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்த பெருமை (சுமார் 10 ஆண்டுகள்) இவருக்கு உண்டு.

அபுல் கலாம் ஆசாத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், கடந்த 2008-ம் செப்டம்பர் 11-ம் தேதி, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவித்தது.

இதனையடுத்து 2008 முதல் இன்று வரையில், ஒவ்வொரு ஆண்டும் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளான நவம்பர் 11ம் தேதி, தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

கல்விக்கு மட்டுமின்றி இந்திய மக்கள் சாதி, மத வேற்றுமைகளை கலைந்து ஒற்றுமையுடன் இருக்கவும் அபுல் கலாம் ஆசாத் அரும்பாடுபட்டார்.

நாளும் பொழுதும் நாட்டிற்காகவே அர்பணித்தார். நல்ல நினைவாற்றல் கொண்டவர்.

சாகித்திய அகாடமி, லலித் கலா அகாடமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை தோற்றுவித்தார். கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

You might also like