– சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று உருவானது.
இது தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து வருகிறது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனையடுத்து மண்டலமாகவும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவும், இதைதொடர்ந்து மண்டலமாகவும் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
ஆனால் அது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.
இன்று (10-ம் தேதி) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமுதல் மிக கனமழை பெய்யும்.
13, 14-ம் தேதிகளிலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை கடற்கரை பகுதி முதல் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை இன்று மாலையில் இருந்து 14-ம் தேதி வரை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமுதல் மிக கன மழையும் பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.