தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் பலனாக தற்போது அனைவரிடத்திலுமே செல்போன் பயன்பாடு இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற கும்பேசுவரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்களம் என்ற யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
56 வயதான இந்த மங்களம் யானை கடந்த 40 வருடங்களாக கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானையை பார்த்துக் கொள்ள அசோக்குமார் எனும் பாகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வரும் வீடியோவில் மங்களம் யானை, பாகன் அசோக் குமாருடன் போட்டிபோட்டுக்கொண்டு செல்போன் பார்க்கிறது.
மண்டபத்தில் அமர்ந்திருந்த அசோக்குமார் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருக்க, அருகில் நின்றிருந்த மங்களம் யானை அவருடன் போட்டி போட்டுக் கொண்டு செல்போனைப் பார்க்கிறது.
இந்த நிகழ்வை கோவிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது.
முன்னதாக, மங்களம் யானையின் உடல் நலத்தைப் பராமரிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.