இன்றைய காதலைப் பற்றி படமெடுக்க வேண்டுமென்ற ஆசை பல இயக்குனர்களுக்கு இருக்கும். அதற்கு உருவம் கொடுப்பதைப் போல சவாலான விஷயம் வேறில்லை.
ஏனென்றால், 2000களுக்கு பிறகு மொபைல் போன் வருகையால் காதலின் பரிமாணம் நொடிக்கு நொடி மாறி வருகிறது.
அந்த வேகத்துக்கு ஈடு கொடுப்பதோடு, அந்த காதலின் நீள அகலங்களைத் திரையில் புகுத்துவது அசாத்தியமான காரியம்.
அப்படியொரு சவாலை ஏற்று ‘லவ் டுடே’ தந்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் ஒரு காட்சியாவது அமைந்துவிட வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார். அதுவே, இப்படத்தைக் காண்பதற்கான காரணமாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு (?!) காதலன் காதலி கதை
காதல் எல்லா காலத்திலும் ஒன்றுதான். ஆனால், அதனைச் சம்பந்தப்பட்ட இணை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதுதான் காலம்தோறும் வேறுபடுகிறது. ‘லவ் டுடே’ கதையும் அதுதான்.
உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்து இளைஞன். அவரும் நிகிதாவும் (இவானா) ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இந்த விஷயம் நிகிதாவின் தந்தை வேணுவுக்கு (சத்யராஜ்) தெரிய வருகிறது.
பிரதீப்பை வீட்டுக்கு வரவழைத்துப் பேசுகிறார் வேணு. அப்போது, ஒரு நாள் மட்டும் பிரதீப், நிகிதா இருவரும் தத்தமது மொபைல் போன்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நிபந்தனையிடுகிறார். வேறு வழியில்லாமல் இருவரும் அதற்குச் சம்மதிக்கின்றனர்.
பிரதீப்பும் நிகிதாவும் ஒருவர் மொபைலை இன்னொருவர் திறந்து பார்த்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர். அதையும் மீறி, இருவரும் அந்த மொபைல் போன்களை திறந்து பார்க்கையில் பல்வேறு வகையான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
அவை என்னென்ன? அதுநாள்வரை காதலர்களாக இருந்த இருவருக்குள்ளும் புரிதல் ஏதுமில்லையா? இறுதியில் இவர்களது காதல் முறிந்ததா அல்லது மேலும் வலுப்பட்டதா என்று சொல்கிறது ’லவ் டுடே’.
சந்தேகமேயில்லாமல் இது 2கே கிட்ஸ்க்கான படம். மொபைல், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிண்டர், ஹைக் போன்ற நுட்பங்கள் மட்டுமல்லாமல் இன்றைய பெருநகரத்து இளைஞன், இளைஞிகளின் மனநிலையையும் காட்ட முயற்சித்திருப்பது தான்.
காதலர்களுக்கு சமர்ப்பணம்!
பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லவ் டுடே’ தொண்ணூறுகளின் பின்பாதியிலிருந்த தலைமுறையைப் பிரதிபலித்தது. அதிலும் கூட, நாயகன் தரப்பு நியாயங்களைச் சொல்லிவிட்டு நாயகியின் பக்கமிருக்கும் கருத்துகளைப் பகிராமல் விட்ட குறை இருந்தது.
அதே டைட்டிலை கொண்டிருந்தாலும் இன்றைய தலைமுறை ஆண், பெண்களின் பக்கமிருக்கும் நியாயங்களைப் பேசுகிறது பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம். அவரே இயக்கி நடித்த ‘ஆஃப் லாக்’ எனும் குறும்படத்தின் நீளமான பதிப்பு இது.
ஆனாலும், அதையும் தாண்டி முழுப்படமும் பெரிதாகத் தொய்வின்றி ஈடுபாட்டுடன் திரையை நோக்க வைத்திருக்கிறது.
ஒரு ஆணோ, பெண்ணோ தனது இணை வேறொருவருடன் பழகினார் அல்லது பழகுகிறார் என்ற உண்மை தெரிய வந்ததும் உள்ளுக்குள் கோபம் பொங்கும். அந்த பற்றுதலை வைத்துக்கொண்டு மொத்த திரைக்கதையையும் வடித்திருக்கிறார் இயக்குனர்.
ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் தான், பின்னணியில் வரும் சிறு பாத்திரங்களையும் நம் மனதில் பதியச் செய்திருக்கிறது. இந்த உழைப்பைப் பிரதிபலிக்க முடிந்தால், அடிக்கடி இது போன்ற திரைக்கதைகளைக் காண முடியும்.
ஒரு குறும்படம் திரைப்படமாகும்போது காட்சிகளை எழுதுவதிலும் ஆக்குவதிலும் எத்தகைய கவனம் இருக்க வேண்டுமென்பதற்கு இப்படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உதாரணம்.
அதேநேரத்தில், வெறுமனே நகைச்சுவையாக மட்டுமல்லாமல் இன்றைய காதலர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் விதமாகவும் திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது!
கிட்டத்தட்ட முக்கால்வாசி திரைப்படம் நாயகனும் நாயகியும் மாறி மாறி இன்னொருவர் மீதிருக்கும் தவறுகளைக் கண்டறிவதையே காட்டுகிறது; சட்டென்று எவரும் முழுக்க நல்லவர் இல்லை; அதேநேரத்தில் உறவைத் துண்டித்துவிடும் அளவுக்குப் பெரிதாக துரோகமும் செய்யவில்லை என்ற திசை நோக்கி திரைக்கதை பயணிக்கிறது.
அதுவரையிலான காட்சிகளைக் கொண்டாடித் தீர்த்த இளைய தலைமுறைக்கு அக்காட்சிகள் அயர்வைத் தர, முந்தைய தலைமுறைக்கு அந்த இடமே ஆசுவாசம் தருவதாக அமைந்திருக்கிறது.
நடிகர் கம் இயக்குனரின் வருகை!
கொஞ்சம் தனுஷ், கொஞ்சம் எஸ்.ஜே.சூர்யா, கொஞ்சமாய் விஜய் என்று கலந்துகட்டிய நடிப்பைத் தந்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
கண்டிப்பாக இது அவருக்குச் சிறப்பான அறிமுகம். பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் வரிசையில் ஒரு தரமான நடிகர் கம் இயக்குனர் கிடைத்துவிட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
அதேநேரத்தில், நகைச்சுவையை மட்டுமே நம்பி பிரதீப் களமிறங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். ஏனென்றால், அடுத்தடுத்த படங்களில் தலைகாட்ட அது மட்டுமே உதவாது.
இவானா அழகுப் பதுமையாக மட்டுமல்லாமல் அருமையாகவும் நடித்திருக்கிறார். ஆண் நண்பர்களை பற்றி நாயகனிடம் விளக்கும் காட்சியில் அவரது முகபாவனைகள் அவ்வளவு அருமையாக இருக்கின்றன.
நாயகன் நாயகி தாண்டி இப்படத்தில் பெயர் சொல்லும் கலைஞர்களாக ராதிகாவும் சத்யராஜும் இருக்கின்றனர். இருவருமே ஒரு தாய், தந்தையாக அபாரமாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இவானாவின் தங்கை, தோழனாக வரும் ஆஜித் மற்றும் இதர கலைஞர்களும் சரி, பிரதீப்பின் தோழர்களாக வரும் ஆதித்யா கதிர், பரத் உள்ளிட்டவர்களும் சரி, திரையில் வெகுஇயல்பாக வந்து போயிருக்கின்றனர்.
இவர்களைத் தாண்டி யோகிபாபுவும் அவரது ஜோடியாக வரும் ரவீணா ரவியும் நம் மனதைத் தொடுகின்றனர். ‘கோமாளி’யைப் போலவே இதிலும் நகைச்சுவையைத் தாண்டி ஒரு பாத்திரமாக நம்மை மகிழ்வித்திருக்கிறார் யோகிபாபு.
போலவே ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘ராக்கி’ தாண்டி வெகுநாட்கள் கழித்து நல்ல வேடமொன்றில் நடித்திருக்கிறார் ரவீணா.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு ‘ப்ரெஷ்’ உணர்வை திரையில் தர, காட்சிகளின் வேகம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் பிரதீப் ராகவ்.
‘என்னை விட்டு உயிர் போனாலும்’, ‘சாய்ச்சிட்டாளே’ பாடல்களில் ஒரு பாடலாசிரியராகவும் நம்மை ஈர்க்கிறார் பிரதீப்.
சமூகவலைதளங்களில் வைரலான ‘பச்சை இலை’ பாடலின் ஒரு பகுதியை மட்டும் பின்னணியில் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
படம் முழுக்க காட்சிகளில் நிரம்பியிருக்கும் நகைச்சுவை, கலைஞர்களின் சிறப்பான நடிப்பைத் தாண்டி நம்முள் குதூகலம் கொப்பளிக்கச் செய்கிறது யுவனின் பின்னணி இசை.
முன்பாதி முழுக்க அவரது இசையும் ஒரு பாத்திரம் என்றால் மிகையல்ல; அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக, பிற்பாதியில் அவரது இசை காட்சிகளுக்குள் கரைந்து போயிருக்கிறது.
நிச்சயமாகப் பார்க்கலாம்!
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாக இப்படம் பார்ப்பது உறுதி. அதேநேரத்தில், முழுமையாக இதனைப் பார்ப்பார்களா என்பதும் கேள்விக்குறி.
கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான ‘பேச்சலர்’ படம் கூட அத்தகைய விளைவைச் சந்தித்தது. அதற்கேற்ப முன்பாதி ஜாலி, பின்பாதி அறிவுரை என்ற டெம்ப்ளேட்டில் ‘லவ் டுடே’ அமைந்திருக்கிறது.
அதனைத் தவிர்த்துப் பார்த்தால், இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.
ஜோடியாக ‘லவ் டுடே’ பார்த்துவிட்டு, ஒரு காதலனும் காதலியும் இன்னொருவரது மொபைலை நோண்ட வேண்டாம் என்று முடிவெடுத்தால் அதுவே இப்படத்தின் வெற்றி.
அது நிகழுமா என்பது சந்தேகமே. அதையும் மீறி, அப்படியொரு சந்தேகம் வேண்டாம் என்று கூறுபவர்களால் மட்டுமே இப்படம் பெரிய வெற்றியைப் பெறும்!
-உதய் பாடகலிங்கம்