டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறி இருந்தார்.

இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 11 ரன்களை கடந்த போது டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை படைத்தார்.

அப்போது இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ஜெயவர்தனே சாதனையை முறியடித்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1065 ரன்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் ஜெயவர்தனே (1016 ரன்கள்- 31 போட்டிகள்) உள்ளார். 

You might also like