எம்.கே.தியாகராஜ பாகவதர்

தமிழ்ப் படவுலகின் ‘முதல் சூப்பர் ஸ்டார்’ என்ற பெருமைக்குரியவர், மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்திலுள்ள ரசிகப் பெருமக்களை 1940-களில் கட்டிப் போட்டவர்.

இசையுலகின் மிகச் சிறந்த பொக்கிஷமாகத் திகழ்ந்த அவர் மறைந்த நாள், நவம்பர் 1.

தங்க நிற மேனி, கந்தர்வ கானக்குரல், தீர்க்கமான பார்வை, வசீகரிக்கும் தோற்றம்… இதுதான் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

மேடை நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்த அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ என்ற படம், அன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்து, தொடர்ந்து மூன்று தீபாவளிப் பண்டிகையைக் கடந்து ஓடி மாபெரும் சாதனை படைத்தது.

புகழின் உச்சியைத் தொட்ட பாகவதர், ஒரு வழக்கில் சிக்கி, பிறகு அதிலிருந்து மீள முடியாமல், உடல்நிலை குன்றி அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இறுதியில் கடுமையான சர்க்கரை நோயின் தாக்கத்தால், தன்னுடைய கண் பார்வையைப் பறிகொடுத்தார்.

அதற்குப் பிறகு சென்னையில் இருக்க முடியாமல், தன் சொந்த ஊருக்குச் சென்று, அங்குள்ள தன் குலதெய்வம் கோவிலில் தங்கினார்.

இந்நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், 1959-ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நவம்பர் 1-ம் தேதியன்று தனது இறுதி மூச்சை பல்வேறு சிரமங்களை எல்லாம் கடந்து வந்து நிறுத்திக்கொண்டார்.

கொடூரமான காலம் ‘ஏழிசை மன்னர்’ எம்.கே.தியாகராஜ பாகவதரை மறந்துவிட்டது. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்டுவிட்டு வந்தவர்கள் யாரும் இல்லை.

தங்கத்தட்டில் உணவருந்திய அவர், இறுதிக்காலத்தில் அன்றாட உணவுக்கே அவதிப்பட்டதாக விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புகழின் உச்சத்தில் இருந்தபோது, தென்மாவட்டம் ஒன்றிற்கு ரயில் ஏற வந்த பாகவதரை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டதால், அவரை தரிசிக்க வந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக, நான்கு மணி நேரம் பாகவதர் தாமதமாகச் சென்றதாகவும் சொல்கிறார்கள்.

தனது காருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த அவரது கையைத் தொட்டு முத்தமிட, மக்கள் திரண்டு வந்ததை ஆச்சரியப்பட்டு சொல்கிறார்கள்.

You might also like