ஐஸ்வர்யா ராய்: உலக அழகி டூ திரை உலகம்!

நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21-ம் வயதில் 1994-ம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர்.

முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது ‘இருவர்’ (1997) படத்தில் பிரபல நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பாத்திரத்தில், எம்.ஜி.ஆராக நடித்த மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

அதன் பின்னர் எஸ், தாணுவின் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’, ஷங்கரின் ஜீன்ஸ், ரஜினியுடன் எந்திரன், விக்ரமுடன் ராவணன் போன்ற படங்களில் தன் முத்திரையைப் பதித்திருந்தார். கூடவே இந்தி உட்பட பலமொழிப் படங்களிலும் அவரது நடிப்பாற்றல் வெளிப்பட்டது.

2017-ல் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானாலும் நடிப்பு ஆர்வம் அவரை விடவில்லை.

அது இந்த வருடம் வெளியான மணிரத்னத்தின் ‘பொன்னியில் செல்வன்’ வரைக்கும் அதாவது, அவர் திரைக்கு வந்து சுமார் 25 வருடங்கள் பூர்த்தியான பொன்விழா ஆண்டு வரை அவரை ஒரு சிறந்த நடிகையாக நீடிக்கச் செய்திருக்கிறது.

பல மொழிகளில் ஐஸ்வர்யா நடித்திருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம்தான் தன்னுடைய குரு என்கிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் வாழ்க்கை, கல்கியின் பொன்னியின் செல்வனைப் போலவே ஒரு தொடர்கதை போல நீள்கிறது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, துளுதான் தாய்மொழி. அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

எனவே, அங்குள்ள ஆர்யா வித்யா மந்திரில் பள்ளிப் படிப்பையும், மட்டுங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிகிரியையும் முடித்திருக்கிறார்.

படித்துக் கொண்டே க்ளாசிக்கல் டான்ஸ், மியூஸிக் என ஐந்து வருடங்கள் பயிற்சி பெற்றிருந்தாலும் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதுதான் ஐஸ்வர்யா ராயின் ஆசையாக இருந்திருக்கிறது.

ஆனால் 1991-ல் மாடலிங் துறையில் நுழைந்த பிறகு அவரது வாழ்க்கை ஏறுமுகம்தான்.

ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர்நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வானார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் பிரபலமாகிறது. அடுத்து உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகர் பார்த்திபன் கூறுகையில், “அவர் உலக அழகி மட்டுமல்ல, மிகவும் புத்திசாலிப் பெண்ணும்கூட.. திரையுலகில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

நானும் அவரும் பொன்னியின் செல்வனில் இணைந்து நடித்த போது “கடைசியாக நீங்கள் இயக்கிய படம் என்ன?” என்று என்னிடம் கேட்டார்.

நான் எனது ‘ஒத்த செருப்பு’ படத்தைப் பற்றி சொல்லி, படம் முழுக்க ஒரே கதாபாத்திரம்தான் என்று சொன்னதும் கண்கள் விரிய தன் வியப்பை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் உடனே தன் கணவர் அபிஷேக் பச்சனுக்கு போன் செய்து ‘நெட்பிளிக்ஸில் அந்தப் படம் இருக்கிறதாம், உடனே பாருங்கள்’ என்றார்.

அவரை பார்க்கச் சொன்னது மட்டுமல்லாமல் அதை ஹிந்தியில் அவரையே ஹீரோவாக வைத்து ரீமேக் (single slipper size 7) செய்யவும் காரணமாக இருந்தார். இன்னும் இரண்டு மாதங்களில் அந்தப் படம் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது.

இப்படி ஒரு ஐந்து நிமிட உரையாடலில் ஒரு சினிமா ப்ராஜெக்ட்டையே சுவிட்ச் ஆன் செய்து விட்டார். இது சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலையும் ஈடுபாட்டையுமே வெளிப்படுத்துகிறது” என்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

பொன்னியின் செல்வனில் அவரோடு இணைந்து நடித்த த்ரிஷா, “எனக்கு மிகவும் பிடித்த தோழி ஐஸ்.

அவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது, ஆனால் நான் பயணத்தில் இருப்பதால் இன்று அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை மட்டும் உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்” என்கிறார்.

ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய, அதுவும் பிரபலமான பெண்ணுக்கு வரும் சர்ச்சைக்குரிய செய்திகளையெல்லாம் கடந்து வந்தவர்தான் ஐஸ்வர்யா ராய். ஆரம்பத்தில் சல்மான்கானுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம்.

பிரிவு, அது சம்பந்தமாக மீடியாக்களில் வந்த கிசுகிசுக்கள், அதில் இருந்த உண்மைகள் எல்லாம் அப்போது அவருக்கு மன உளச்சலை ஏற்படுத்தி இருக்கலாம்.

ஆனால் அவற்றையெல்லாம் கடந்துவந்து திருமணம். குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார். தன்னம்பிக்கை மிகுந்த அவரைத் தேடி ஒரு நடிகையாக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

அவர் இன்னும் பல வருடங்கள் நடித்துக்கொண்டே இருப்பார்” என்கிறார் பெயர் சொல்லிக்கொள்ள விரும்பாத வட இந்திய மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

இதை ஆமோதிப்பது போல் சொல்லி இருக்கும் இயக்குநர் மணிரத்னம், “கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய பாத்திரம் நந்தினி.

பல லட்சம் வாசகர்கள் ஏற்கனவே படித்து அவர்கள் மனதில் பதிந்து போன ஒரு உருவம்.

அதில் ஒரு வடக்கத்திய நட்சத்திரத்தை நடிக்க வைக்கலாமா என்று என்கிற சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனாலும் அந்தக் கதையை படமாக்குகிற போது இதுவொரு இந்தியப் படமாகவேதான் பதிவு செய்ய நினைத்தேன். அதற்கு ஐஸ்வர்யா பொருத்தமாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.

அதனால்தான் அவரை அந்தப் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தேன். ரசிகர்களும் அந்தப் பாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கூடியிருக்கிறது” என்கிறார். 

உலக அழகியானாலும் முன்னணி நடிகையானாலும் எந்தவிதமான பந்தாவும் இல்லாத அவரது எளிமைதான் அவரை மென்மேலும் உயர்த்தியது” என்கிறார், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு.

“1999-ம் வருட இறுதியில் அவரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் கொடுக்க இயக்குனர் ராஜீவ் மேனனும் நானும் மும்பைக்குப் போகிறோம். அப்போது ஒரு சிறிய அபார்ட்மெண்டில்தான் அப்பா, அம்மாவோடு வசித்து வந்தார்.

அந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட அவர், மதியம் தங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் அந்தப் படத்திற்காக நான் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிய காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அரண்மனையில் படப்பிடிப்பு நடந்தபோது அந்த அரண்மனையின் பிரமாண்டம், அவருக்காக நான் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகளையெல்லாம் பார்த்து விட்டு,

“இவ்வளவு கிராண்டாக படத்தை எடுக்கும் தயாரிப்பாளர், ஒருநாள்கூட இங்கே வரவே இல்லையே? அவர் ஒரு நாளாவது சூட்டிங் ஸ்பாட் வந்து நம்மோடு லஞ்ச் சாப்பிடவில்லையென்றால் நான் சூட்டிங் வர மாட்டேன்'” என்று செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கிறார்.

இதை ராஜீவ்மேனன் போனில் சொல்லி ‘ஒரு தடவை இங்க வந்துட்டு போங்க சார்’ என்று கேட்டுக் கொண்டார். பிறகு ஐஸ்வர்யாவின் விருப்பத்தின் பேரில் காரைக்குடிக்குப் போய் ஒருநாள் அவர்களோடு லஞ்ச் சாப்பிட்டு வந்தேன்.

அதேபோல் அந்தப் படம் முடிவடையும் போது தனக்கு தர வேண்டிய சம்பளம் ரூபாய் பதினோறு லட்சம் பாக்கி இருந்தது. நான் .

நான் அந்த பாக்கியை தருவதாக சொல்லியபோது, “அதை பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி இருந்தார். அவர் நடிக்க வேண்டிய பகுதி முடிந்து படமும் வெளியாகி விட்டது.

அப்போதும் “பிறகு வாங்கி கொள்கிறேன்” என்றே சொன்னார். ஆனாலும் எனக்கு அது சரியாகப்படவில்லை.

அதனால் அந்தப் பணத்திற்கு டி.டி எடுத்துக் கொண்டு ராஜீவ்மேனனோடு மும்பைக்குப் போய் அதை அவரிடம் கொடுத்து வந்தேன்.

அப்போது அவரிடம் “இந்த மாதிரி தயாரிப்பாளர் கிடைத்திருப்பது என் பாக்கியம்” என்று சொல்லி இருக்கிறார்.

அவரது அந்த பழகும் தன்மையும், எளிமையும்தான் அவரது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்” என்கிறார் எஸ்.தாணு.

தொகுப்பு : கல்யாண்குமார்

– நன்றி பி.பி.சி

You might also like