சீனக் கடன் செயலிகளைத் தடை செய்க!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வாடிக்கையாளா்களைத் துன்புறுத்தும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம்  கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “சிறிய அளவிலும், குறுகிய கால அடிப்படையிலும் அதிக வட்டிக்குக் கடன் அளிக்கும் சட்டவிரோத செயலிகள் குறித்து நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த செயலிகள் மூலம் கடன் அளிப்பவா்கள், கடன் பெறுவோரின் கைப்பேசி தொடா்புகள், இருப்பிடம், காணொலி போன்ற அந்தரங்கத் தகவல்களை வைத்து, மிரட்டி பணம் பறிக்கவும் துன்புறுத்தவும் பயன்படுத்துகின்றனா்.

இதனால் நாடு முழுவதும் பலா் தற்கொலை செய்து கொள்வதற்கு வழிவகுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இணையவழி குற்றம் என்பது தெரியவந்தது.

இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதால், இந்த செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

இதுபோன்ற செயலிகளின் ஆபத்துகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்” என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.

You might also like