‘கிராமிய மேம்பாடு’ – எளிய புரிதலோடு!

டாக்டர் க.பழனித்துரை

ஒரு கிராமத்திற்குச் சென்றேன் பணி நிமித்தமாக. அப்போது ஒரு மாடு, இரண்டு ஆடுகளுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த மாட்டையும் இரண்டு ஆடுகளையும் புல் வளர்ந்திருக்கும் இடத்தில் கயிறுடன் கட்டப்பட்ட முளையை ஆழமாக ஒரு சிறிய கருங்கல்லை எடுத்து அடித்து இறக்கினார்.

அந்த இடத்தில் மாடும் ஆடுகளும் மேய ஆரம்பித்தன. உடனே தன் முண்டாசில் வைத்திருந்த சிறிய புல் அறுக்கும் கத்தியை எடுத்து புல் அறுக்க ஆரம்பித்தார்.

அந்த இடத்தில் நான் செல்ல வேண்டிய இடம் தெரிந்து கொள்ள அவரை அணுகினேன். அந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெளிவாக வழிகாட்டிவிட்டு, தன் பணியான புல் அறுப்பதற்குத் துவங்கினார்.

அவர் தன் பணியைச் செய்யும் நேர்த்தியைப் பார்த்ததும் அவரிடம் பேச வேண்டும் என எனக்கு ஆவல் ஏற்பட்டது. அதற்கு ஒரு காரணம், அவர் வளர்த்த மாடு, ஆடுகள் மற்றும் அவருடன் நின்று கொண்டிருந்த செல்லப்பிராணி நாய் அனைத்தும் நல்ல கொழு, கொழு என்று இருந்தன. அத்தனையும் ஆரோக்யமாக இருந்தன.

அத்தனையும் வணங்கத் தக்கதாக இருந்தன. அந்த அளவுக்கு நேர்த்தியாக அவைகளை வளர்ப்பது எனக்குத் தெரிந்தது.

நான் புறப்படாமல் அங்கே நின்றாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பணியில் கவனமாக ஈடுபட்டிருந்தார்.

‘ஐயா’ என்றேன். என்னைப் பார்க்காமல் குனிந்து அந்த புல்லை அறுத்த வண்ணம் “சொல்லுங்க” என்றார்.

நீங்கள் “இந்த ஊர் தானே” என்றேன்.

“ஆம், அதனால்தான் நீங்கள் போகவேண்டிய இடத்தை உங்களுக்கு சரியாக வழி காண்பித்தேன்” என்றார்.

“நீங்கள்?”

“தெரியவில்லையா?… புல் அறுத்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார்.

“ஐயா அதைத்தான் நான் பார்க்கின்றேனே, உங்கள் தொழில் என்ன?” என்றேன்.

“ஐயா தப்பா எடுத்துக்கிட்டியளா, நான் ஒங்களை நையாண்டி செய்யலை, தப்பா எடுத்துக்கிடாதிய” என்றார்.

“நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை, உங்களிடம் பேசவேண்டும்போல் ஆவலாக இருந்தது, பேசினேன்” என்றேன்.

“ஐயா, எனக்கும் உங்களைப் பார்த்து, நீங்கள் எதற்காக அங்கு செல்கின்றீர்கள் என்று கேட்கத்தான் தோன்றியது, ஆனால் என் வேலை அதற்கு அனுமதிக்கவில்லை” என்றார்.

அடுத்து தொடர்ந்தார். நான் கூலி வேலை செய்யும் தொழிலாளி, விவசாய நாட்களில் விவசாயப் பணிகள் அனைத்தும் தெரியும். வேலை இருக்கின்றபோது செய்வேன். கோடையில் மரம் வெட்டச் செல்வேன். என்னுடன் சிலரையும் அதற்காக பழக்கி வைத்திருக்கிறேன்.

குறிப்பாக தென்னை, பனை மரங்கள் வெட்டி, வீடுகள் கட்டத் தேவையான சிறாய் தயாரித்துக் கொடுப்பேன். சிறாய் என்பது வீட்டின் கூரைக்குப் போடுவது. அதன்மேல் தான் கீற்று மேய்வார்கள், வசதி உள்ளவர்கள் ஓடு போடுவார்கள். அந்த வேலை செய்வோம் என்றார்.

“இந்த வேலைகளைப் பார்த்து கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருக்கிறதா?” என்றேன்.

“இந்த வேலைகள் செய்து வரும் வருமானம் எங்கள் தேவைகளை நிறைவு செய்ய போதுமானதுதான். காலமாற்றம் பல மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வருகின்றது.

அதைப் புரிந்துகொண்டு நாமும் மாறிக்கொண்டால் தேவைக்கு வாழ்ந்து கொள்ளலாம். போதுமானது என்பது மனம் கூறுவதுதானே. தேவைகள் என்பது நாம் வரையறுத்துக் கொள்வதுதானே” என்றார்.

“நான் குறுக்கிட்டு அப்ப நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்” என்றேன்.

“அதில் என்ன குறைவு, மகிழ்ச்சியை ரேஷன் கடையிலா வாங்க முடியும், பசிக்கும்போது கஞ்சி கிடைக்கிறது, தேவைகளைப் பூர்த்தி செய்ய சம்பாதிக்க வேண்டும், அதற்கு வேலை கிடைத்துவிட்டால், சம்பார்த்தியம் கிட்டிவிடும்.

வாழ்வாதாரம் பாதிப்பு இருக்காது, என்ன, உடல் ஆரோக்யமாக இருக்க வேண்டும். இருந்தால் கவலை இல்லை, ஒரு வேலை ஆசையைக் கூட்டிவிட்டால் அப்போதுதான் சிக்கல் வருகிறது” என்ற தத்துவத்தை உதிர்த்தார்.

“நீங்கள் புறப்படவில்லையா? என்னிடமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

“உங்களிடம் பேசும்போது நீங்கள் நிறைய செய்திகளைக் கூறுகிறீர்கள், எனவேதான் என்னால் புறப்பட முடியவில்லை” என்றேன்.

“நான் படிக்காதவன், எங்களுக்கு எப்படி அறிவு இருக்கும், எதாவது கூறினால் அது அனுபவம்தான். புத்தகத்தில் படித்தது அல்ல, எங்களை எங்கள் ஊரிலேயே யாரும் சீண்டுவது கிடையாது.

நீங்கள் படித்தவர், என்னைப் பார்த்து நிறைய செய்திகளை கூறுனீர் என்று கூறுகிறீர்கள். பரவாயில்லை, என்னையும் மதித்து இவ்வளவு நேரம் பேசியது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எனக்கு நேரம் ஆகிவிட்டது, புல் அறுப்பதும் முடிந்துவிட்டது, நான் புறப்படப் போகிறேன்” என்றார்.

“உடனே நான் உங்களிடம் ஒருசில கேள்விகளைக் கேட்கலாம் என்று நினைத்தேன், நீங்கள் நேரம் ஆகிவிட்டது, புறப்படுகிறேன் என்று கூறுகிறீர்கள்” என்றேன்.

அதற்கு அவர், “ஐயா நீங்கள் எங்கோ செல்ல வேண்டியவர், என்னுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

“நான் உங்களை சந்தித்தது, நான் செல்லும் இடத்திற்கு வழி கேட்கத்தான், ஆனால் உங்களிடமிருந்து வந்த பதில் உங்களுடன் உரையாட வைத்துவிட்டது” என்றேன்.

“என்னையும் பொருட்டாக மதித்து கேள்வி கேட்கும்போது, அதைவிட எனக்கு பெருமை என்ன, கேளுங்கள் சொல்கிறேன்” என்றார்.

“நீங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்களா” என்றேன்.

அதற்கு ஒன்றும் குறைவே இல்லை. காரணம் அவைகளை உருவாக்குவது நாம்தானே. என் அமைதியையும், மகிழ்ச்சியையும் உங்களால் உருவாக்க முடியாது, அவைகள் என்னால்தான் உருவாக்க முடியும்.

என் தேவைகள் மிகக் குறைவு. அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு வேலை கிடைத்துவிடுகிறது.

வீட்டில் மாடு, ஆடு, கோழி வளர்க்கின்றோம். அவைகள் நமக்கு குறைந்த அளவுக்கு ஒரு வருமானத்தைத் தருகிறது.

குடியிருக்க ஒரு இடம் இருக்கிறது. அதில் ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறேன். அது தென்னைக்கீற்று வேய்ந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டும்.

இரண்டு கைலி வைத்திருக்கிறேன். நான்கு துண்டு, நான்கு பனியன்கள், இரண்டு வேஷ்டி வைத்திருக்கிறேன்.

இரண்டு வேஷ்டியும், இரண்டு துண்டும் வெளியில் செல்லும்போது உடுத்திக் கொள்வேன், மற்ற நேரங்களில் கையிலியில்தான் இருப்பேன்.

உணவுக்கு ரேஷன் அரிசி கிடைக்கிறது. அது போதும், போதவில்லை என்றால் அரிசி கடைகளில் வாங்கிக் கொள்வேன். அதற்கு எனக்குத் தேவையான பணம் என் கூலி வேலையிலிருந்து கிடைத்துவிடும்.

மாடு கறக்கும் பாலில் சிறிது எடுத்துக் கொண்டு, மீதத்தை வீடுகளுக்கு என் மனைவி கொடுத்துவிடும். தீபாவளி, பொங்கலுக்கு வளர்க்கின்ற ஆடுகளில் ஒன்றை விற்றுவிட்டு தீபாவளிச் செலவை பார்த்துக் கொள்வேன்.

தினமும் இரண்டு வேளை உணவுதான். காலை வேலைக்குச் செல்லுமுன் ஒரு வேளை சாப்பிடுவேன். மாலை வேலை முடிந்து வந்த பிறகு புதிதாக செய்த சாப்பாடு இருக்கும். அதைச் சாப்பிட்டுவிட்டு கடைத்தெருவுக்குச் சென்று பேசிவிட்டு இரவு தூங்கிவிடுவேன்.

காலையில் பால்கறந்து எனக்கு என் மனைவி சிறிது பால் ஊற்றி டீ போட்டுத் தருவார். ஆடு குட்டி போட்டிருந்தால் ஆட்டுப்பாலில் டீ போட்டுக் கொண்டு மாட்டுப்பால் முழுவதையும் விற்றுவிடுவோம். நாட்டுமாடு அதிகம் நவீன தீவனம் தேவையில்லை.

எனவே சிறிது புல்லும், வைக்கோலும் இருந்தால் போதும். அத்துடன் சிறிது கடலைப் பிண்ணாக்கு, தவிடு போட்டால் போதும். பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. காலையில் புல் இருக்கும் இடத்தில் மேய்த்து வீட்டில் கட்டிவிட்டு வேலைக்குச் செல்வேன்.

என் மனைவி பக்கத்தில் இருக்கும் இரண்டு வீடுகளில் வேலை செய்கின்றார். அதில் ஒரு வருமானம் இருக்கும்.

அந்த வேலை பார்த்த நேரம் போக, வீட்டிற்கு தேவையான குடிநீர் பிடிப்பது மற்ற தேவைகளுக்கு தண்ணீர் பிடித்துக்கொண்டு வைப்பது போன்ற வேலைகளைச் செய்து விடுவார்.

நாட்டுக்கோழி வளர்க்கின்றோம். அது நமக்கு ஒரு வகையில் வருமானம் தரும். இவை அனைத்தும் எங்கள் தேவைபோக மீதமாகவே எங்களிடம் பணம் இருக்கும்.

வருடத்தில் ஓரிருமுறை உடல்நிலை சரியில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பார்த்துக் கொள்வோம். பெரும் செலவு ஒன்றுமில்லை.

எங்களிடமிருக்கும் பணத்தையோ என் பேரன் பேத்திக்கு நாங்கள் துணி எடுத்துக் கொடுப்போம், திண்பண்டம் வாங்கிக் கொடுப்போம்” என்றார். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்றேன்.

“ஒரு பையன், படிக்கவில்லை, அவனை கார் ஓட்டப்பழக்கி, பக்கத்தில் இருக்கும் நகரத்தில் ஒரு கடையில் இருக்கும் மினி லாரி ஓட்டும் வேலையில் சேர்த்துவிட்டேன்.

அவனுக்கு ஒரு பெண் பார்த்து எங்கள் குல தெய்வம் கோவிலில் செலவில்லாமல் சிக்கனமாக கல்யாணம் செய்து, அவர்களை அந்த நகரத்திலேயே சிறிய வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து குடிவைத்தேன்.

அந்தப் பெண் இரண்டு மூன்று வீடுகளில் வீட்டு வேலை பார்த்து சம்பாதிக்கிறது. அவர்களுக்கும் எதோ அமைதியாக காலம் ஓடுகிறது.

எனக்கு ஒரு பேரன், ஒரு பேத்தி. இருவரும் பள்ளியில் படிக்கின்றார்கள். அவர்களை அவ்வப்போது நானும் என் மனைவியும் சென்று பார்த்து வருவோம்.

என் மருமகளும் சிக்கனமாக குடும்பம் நடத்தும். தேவையில்லாமல் செலவழிக்காது. நகரத்தில் உள்ள நல்ல அரசுப்பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கின்றார்கள்.

மாலையில் அந்தக் குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியரிடம் டியூஷன் சொல்லிக் கொடுக்கின்றார்கள். பொழுது முழுவதும் என் மகனும் மருமகளும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். காலம் ஓடுகிறது” என்றார்.

அப்போது தவறாக நினைக்காதீர்கள் என்று கூறிவிட்டு, “நீங்கள் மது அருந்துவீர்களா?” என்றேன்.

ஐயா, இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேணும். குடிக்காதவனை கிராமத்தில் பார்க்க முடியாது. ஆனால் நான் குடிப்பதில்லை.

என் மகனும் குடிக்கமாட்டான். சிக்கனமாக இருப்பான், கடினமாக உழைப்பான். அதனால்தான் அவனுக்கு அவன் கடைக்காரர் நிறைய சலுகைகள் செய்கிறார். நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அதுதான் முதல் காரணம்” என்றார்.

இவ்வளவு கூறுகிறீர்கள், இன்னொரு கேள்விக்கு ஒரு பதில் மட்டும் கூறிவிட்டுச் செல்லுங்கள்” என்றேன்.

“என்ன கேள்வி?” என்றார்.

“கிராமங்கள் தற்போது எப்படி உள்ளன. மாற்றங்கள் அடைந்து பெருமளவில் முன்னேற்றம் அடைந்து விட்டனவா?” என்றேன்.

“நான் என்ற மிகப்பெரிய அறிவாளியா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்” என்றார்.

‘நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படியே கூறுங்கள்’ என்றேன்.

உடனே கூறினார் “கிராமங்கள் மாறிவிட்டன. மக்களின் சிந்தனைப் போக்கும் மாறிவிட்டது. கிராமத்தில் நாங்கள் வாழ்கிறோம்.

கிராமத்தில் இருந்த உணவுப் பழக்கம், உழைக்கும் பழக்கம், எளிமையாக வாழும் பழக்கம், ஒருவரையொருவர் உதவி வாழும் சமூக வாழ்க்கையை மக்கள் மறந்து விட்டனர். பொதுச் சொத்துக்கள் எல்லாம் ஊரில் வசதி படைத்தவர்களாலும், கட்சிக்காரர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன, ஊரில் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பற்று பல காய்ந்து கிடக்கின்றன.

வீட்டில் குப்பைகளை குழிதோண்டி புதைத்து எருவாக்கும் பழக்கம் போய் வீதியில் வைத்திருக்கும் பெரும் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு பஞ்சாயத்தை அதை அள்ளச் சொல்லுகின்றார்கள் பொதுமக்கள்.

குடிப்பதை கலாச்சாரமாக்கிக் கொண்டனர் ஆண்கள். சுய உதவிக் குழுப் பெண்கள் கடன்வாங்கி குடும்பச் சுமையை கடினமாக சுமக்கின்றனர். அனைவரும் அடுத்தவரைப் பார்த்து வாழ்ந்து கிராம வாழ்வை சிதைத்து வாழ்கின்றனர்.

ஒருவரையொருவர் பார்த்து போட்டி போட்டு கடினமாக உழைத்து சம்பாதித்ததை செலவு செய்கின்றனர். பலர் விவசாயத்தை மறந்து வாழ்கின்றனர்.

வயல்களில் கருவேலம் முள் முளைக்கின்றது. அதை பிளாட் போட்டு விற்று பணம் பார்த்து விடலாம் என பலர் கனவுடன் வாழ்கின்றனர்.

மாடுகள் பராமரிக்க இயலாமல் விற்றுவிட்டனர். கிராமங்களில் மாட்டுச்சாணம் இல்லாமல் போய்விட்டது. கிராமத்தில் குடிப்பதற்கு பஞ்சாயத்து தண்ணீரை ஏழைகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மற்றவர்கள் குடிதண்ணீர் வாங்கிக் கொள்கின்றனர். அரசாங்கம் நிறைய வசதிகளை உருவாக்குகின்றது.

சாலைகள் போடுகின்றது, பள்ளிக்கூடம் கட்டுகின்றது, சமுதாயக்கூடம் கட்டுகின்றது, சுயஉதவிக் குழுவுக்கு கட்டிடம் கட்டியுள்ளது, பொதுப்பயன்பாட்டிற்கு கழிப்பிடங்கள் கட்டித் தந்துள்ளது, ரேஷன்கடை கட்டித் தந்துள்ளது.

இதுபோன்று பல வசதிகளைச் செய்துள்ளது அரசாங்கம். இவைகள் அனைத்தும் எதை மையப்படுத்தியுள்ளன என்று பார்த்தால் அந்த ஊரில் எங்கு தாய் கிராமம் இருக்கின்றதோ அங்கு எல்லா வசதிகளும் இருக்கும்.

கிராமங்களுக்குள்ளேயே ஒதுக்கப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இந்த பொது வசதிகளிலிருந்து தூரத்தில் இருப்பார்கள்.

சாதிக்கு ஒரு கோவில் வந்துவிட்டது. கிராமத்தில் வசதி படைத்தவர்கள் குழந்தைகள் படித்து வேலைக்குச் சென்ற காரணத்தால் மாடிவீடு கட்ட ஆரம்பித்தனர்.

அப்படி வீடுகள் கட்டும்போது உயர்வேலைகளை எடுத்துவிட்டு காம்பவுண்டு அதாவது சுற்றுப்புற சுவர் எழுப்பி தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

கிராமங்களில் குடும்பங்களிலும் மற்றும் சமூகத்திலும் நடக்கின்ற எல்லாச் செயல்பாடுகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் உடல் உழைப்பைத் தந்தனர்.

இன்று அனைத்தும் ஆள்பிடித்து செய்ய வைக்க வேண்டிய சூழலுக்கு கிராம சமுதாயமே தள்ளப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் எல்லாச் சடங்குகளுக்கும் உணவு அனைவரும் கூடி சமைத்துக் கொள்வார்கள்.

இன்று நகரத்திலிருந்து தருவிக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது உணவு. முன்பு வெளிநாடு சென்று வருபவர்கள் நிலம் வாங்குவார்கள், அதை சாகுபடி செய்வார்கள்.

இன்று பெரிய வீடு கட்டுகின்றனர், கார் வாங்குகின்றனர், பணத்தை நகரத்திற்குப் பக்கத்தில் வீட்டுமனை வாங்கி போட்டுவிட்டு பெரும் லாபம் பார்க்க காரில் பவனி வருகின்றனர். அடுத்து உணவுப் பழக்கம்.

இப்படி உணவு எடுத்து நான் பார்த்ததே இல்லை. கிராமத்தில்கூட மிட்டாய்க்கடை, ரொட்டிக்கடை திறந்து விட்டனர்.

விதவிதமான இனிப்பு, காரம், கேக், ஐஸ்கிரிம் என அனைத்தும் உண்ண ஆரம்பித்து, ஒவ்வொரு கடைக்கும் பக்கத்தில் கொட்டிக்கிடக்கின்ற குப்பை கூளம் ஒரு வண்டி கதையை கூறுகின்றன நமக்கு. எல்லோரும் கடன் வாங்கி மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளனர்.

எவரும் நடந்து செல்ல விரும்பவில்லை. இன்று மிகவும் ஏழ்மையில் உள்ளோர் மட்டுமே சைக்கிள் வைத்துள்ளனர். சைக்கிள் ரிப்பேர் செய்ய ஆட்கள் கிடையாது. எவரும் அந்த ஊரில் விளைந்த நெல்லை உண்பது கிடையாது.

மாறாக அவற்றை விற்றுவிட்டு எங்கோ பெரிய அரிசி ஆலையில் அறைத்து கோணிப்பையில் தைத்து அதற்கு பெயரிட்டு நகரில் விற்பனை செய்யும் அரிசியை வாங்கி வந்து சமைத்து சாப்பிடுவதில் பெருமிதம் கொள்கின்றனர்“ என்றபடியே ஆர்வத்துடன் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் மற்றொரு கேள்வியைக் கேட்டேன்.

ஒரு கிராமத்திற்கு என்னென்ன வசதிகள் அடிப்படையாக மக்களுக்குத் தேவை என்றேன்.

அதற்கும் உடனே பதில் கூற ஆரம்பித்தார். பொதுவாக கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களை அழிக்காமல் பாதுகாக்க முதலில் ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும்.

கிராமத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், பெரிய ஏரிகள், கண்மாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும். அந்த ஏரி குளங்கள், கண்மாய்க் கரைகள் வலுவிழக்காமல் பாதுகாக்க வேண்டும்.

இந்த நீர்நிலைகளுக்கு வரத்துக் கால்வாய் உபரிநீர் போக்குக் கால்வாய் அனைத்தும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். அந்த கண்மாய்களையும் தூர்வாரிட வேண்டும்.

ஆண்டு முழுவதும் நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தால் அந்த ஊர் பசுமையாக இருக்கும். ஆடு மாடு மிக எளிதாக வளர்க்க முடியும்.

அடுத்து கிராமத்தில் உள்ள பொதுச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். அந்த பொதுச் சொத்து என்பது பலவிதமான பொறம்போக்கு நிலங்களாக இருக்கலாம், சமூகக் காடாக இருக்கலாம், மேய்ச்சல் நிலமாக இருக்கலாம், அனைத்தையும் ஆக்கிரமிப்பு இல்லாமல், பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் தரமான கல்வியைக் கொடுங்கள், அங்கு உணவு கொடுக்காதீர்கள். ஏழைகளை ஏழ்மையிலிருந்து வெளியேற்ற குடும்பக் கட்டுப்பாடுபோல் குடும்ப மேம்பாட்டுத் திட்டத்தை போட்டு அந்தக் குடும்பங்களை மட்டும் கண்காணித்து வறுமையிலிருந்து வெளியேற்றி விடுங்கள்.

அவரவர் குடும்பங்களிலிருந்து செல்லும் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிலேயே உணவு தயாரித்து கொடுத்து விடுவார்கள்.

குறைந்தது, குழந்தைகளுக்கு தருகின்ற உணவிற்கான தானியங்களை ரேஷன் கடை மூலம் கொடுத்து குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்க குடும்பத்தை பொறுப்பேற்கச் செய்யுங்கள். பள்ளிகள் இன்று அன்னதானக் கூடமாக மாறிவிட்டது.

அங்கு சத்துணவு என்பது பலருக்கு பயனளிக்கிறது. தரமான கல்வி கிடைக்கவில்லை. தரமான கல்வியைக் கொடுத்துவிட்டால் அந்தக் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள்.

அடுத்து கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரை பாதுகாத்து உபயோகப்படுத்தவும், பஞ்சாயத்து தரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தவும் மக்களை தயார் செய்துவிட்டால் பல வியாதிகள் கிராமத்து மக்களை அண்டாமல் செய்துவிடலாம்.

அதேபோல் கிராமங்களுக்குள் குப்பைகளை தெருவில் யாரும் கொட்டக்கூடாது, அவரவர் வீட்டிலேயே கொட்டி உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்து மக்காக் குப்பையை மட்டும் வாரத்திற்கு ஒருமுறை பஞ்சாயத்து தூய்மைப் பணியாளரிடம் தந்துவிடலாம் என செயல்பட்டு கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்.

தற்போது எங்கு பார்த்தாலும் கழிப்பிடம் கட்டிக் கொடுத்துவிட்டார்கள் மக்கள் பயன்பாட்டிற்கு.

கட்டியவர்கள் எப்போதாவது எப்படி கழிப்பிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார்களா? அதன் விளைவு கட்டிய கழிப்பிடம் பராமரிப்பற்று பாழ்பட்டுக் கிடக்கின்றது.

அதே நேரத்தில் கழிப்பிடம் கட்டமுடியாதவர்கள் இன்னும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர். எங்கள் வீட்டில் கழிப்பிடம் இல்லை. வெகுதூரத்தில் உள்ள கருவேலமரம் நிறைந்த இடத்தில்தான் மலம் கழிக்கின்றோம்.

கிராமத் தூய்மை பற்றி கிராம மக்களிடம் எப்போதாவது எவரும் பேசியது உண்டா? கிராமசபையில் எவ்வளவு அரசியல் பேசுகின்றார்கள், இதை ஏன் பேசக் கூடாது.

கிராமத்தில் வரும் வியாதிகள் தண்ணீர் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது, அடுத்து கிராமம் சுத்தமாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்பதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.

பொதுமக்கள் அரசாங்கம் என்றால் அது ஊழல் நிறைந்தது, வீணாப்போனது என்ற பார்வையில் செயல்படுகின்றனர். எதாவது உடல்நலக் குறைவு என்றால் உடனே தனியார் மருத்துவமனைக்குச் சென்று அதிக பணம் செலவழித்து மருத்துவம் பார்த்து பழகிக் கொண்டனர். அதைப் பெருமையாகவும் பேசிக் கொள்கின்றனர்.

நானோ என் மனைவியோ, அரசு மருத்துவமனைக்குச் சென்றுதான் பார்த்து வருகின்றோம். ஒரு பைசா செலவு கிடையாது, நம் அரசு மருத்துவமனைகள் நன்றாகவே இருக்கின்றன.

அந்தக் கலாச்சாரத்தை மக்களிடம் உருவாக்கினால் பல ஏழைக் குடும்பங்கள் மருத்துவச் செலவிலிருந்து தப்பித்துக்கொள்ளும்.

கிராமத்தின் தேவை குறைவு, அரசு தேவையற்றதையெல்லாம் கிராமத்திற்கு கொண்டுவந்து தருகின்றது.

க.பழனித்துரை

அரசுப்பள்ளி அரசு மருத்துவமனை, வாழ்வாதாரம், இயற்கைவளப் பாதுகாப்பும், மேம்பாடும், செய்துவிட்டால் கிராமம் மேம்படும்.

இதற்கு மக்கள் மத்தியில் எளிய வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதும், தூய்மையான வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுத்துவிட்டால் போதுமானது, அதையார் செய்யப்போகிறார்கள் என்று கூறியபடி தன் புல்மூடையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு என்னிடமிருந்து விடை பெற்றார்.

அவரிடமிருந்து விடைபெற்று நான் செல்லக்கூடிய இடம் நோக்கி என் பயணத்தை தொடர்ந்தேன். என் மகிழுந்தில் சென்றபோதே அவர் உரையாடலை என் டைரியில் பதிவு செய்து கொண்டே சென்றேன்.

அவரின் கருத்துக்களையும், பார்வையையும் தெளிவையும் அசைபோட்டுப் பார்த்துக் கொண்டே சென்றேன். இவரைவிட கிராமிய மேம்பாடு பற்றிக்கூற யாரால் முடியும் என வியந்த வண்ணம் சென்று கொண்டிருந்தேன்.

You might also like