தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும்.
அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள் அந்நாட்களில் வெளியாகும்; அவை பெரிய வெற்றியை ஈட்டிய வரலாறும் உண்டு.
அந்த வரிசையில் அனுதீப் கேவி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரிஷபோவா, சத்யராஜ் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படமும் அமையுமென்ற எதிர்பார்ப்பு நிறைந்துள்ளது. அதற்கேற்ப அப்படம் அமைந்திருக்கிறதா?
என்ன மாதிரியான காதல்?
தாத்தா வேலுச்சாமி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்தவர் என்ற நினைவுப் பெருமிதங்களோடு வாழ்ந்து வருகிறார் தேவனகோட்டையைச் சேர்ந்த உலகநாதன் (சத்யராஜ்).
சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி எவரையும் காதல் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற அறிவுரையை ஊர் முழுக்கப் பரப்புவதோடு, அதனைச் சொல்லியே தனது குழந்தைகளையும் வளர்க்கிறார்.
அதனைப் பின்பற்றாமல், சொந்த அத்தை மகனையே காதல் திருமணம் செய்துகொள்கிறார் உலகநாதனின் மகள். இதனால், அவர் ஊராரின் கேலிப் பேச்சுகளுக்கு ஆளாகிறார்.
ஒரு பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் உலகநாதனின் மகன் அன்பு (சிவகார்த்திகேயன்). அங்கு பணியில் புதிதாகச் சேரும் ஆங்கில ஆசிரியை ஜெஸிகாவைப் (மரியா) பார்த்த முதல் நொடியிலேயே, அவருக்குள் காதல் பிறக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, மரியாவின் கவனத்தைக் கவரப் பல முயற்சிகள் செய்கிறார் அன்பு. ஒருவழியாக இருவருக்குள்ளும் காதல் முளைக்கிறது.
மரியாவின் தந்தை இவர்களது காதலை எதிர்க்க, தனது தந்தை நிச்சயம் ஆதரவு தருவார் என்ற பெருங்கனவோடு இருக்கிறார் அன்பு. ஆனால், ஜெஸிகா ஒரு ஆங்கிலேயர் என்ற உண்மை தெரிய வந்ததும் கண்மூடித்தனமாக அவர்களது காதலை எதிர்க்கிறார் உலகநாதன்.
கூடவே, ஜெஸிகா தந்தைக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பூபதியின் (பிரேம்ஜி) குயுக்திகளும் சேர, ஊரே இருவரின் காதலை உடைக்க முனைகிறது. அதன் பிறகு என்னவாகிறது என்பதே கதை.
சாதி, மதம் வேறுபாடுகளைத் தாண்டி நாடு, இனம் கடந்தது காதல் என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் அனுதீப்.
மனிதநேயம் மட்டுமே உலக மக்களை ஒன்றிணைக்கும் என்று கூற விரும்பியிருக்கிறார்.
ஆனால், திரைக்கதை அதற்கு உதவியிருக்கிறதா என்றால் உதட்டைப் பிதுக்க வேண்டியிருக்கிறது.
எங்கே டைமிங்?
நகைச்சுவையைப் பொறுத்தவரை ‘டைமிங்’ என்பது மிக முக்கியம். சில ஜோக்குகளுக்கு துரிதமான பதில்கள், பாவனைகள் வெளியாக வேண்டும்; சிலவற்றுக்கு மவுனத்துடன் பிசைந்த வார்த்தைகள் பதில்களாக இருக்க வேண்டும்.
அனுதீப்பின் பாணி இரண்டாவது வகையைச் சார்ந்தது என்பது சில காட்சிகளிலேயே புரிந்துவிடுகிறது.
‘பிரின்ஸ்’ பொறுத்தவரை நகைச்சுவையல்லாத நகைச்சுவை என்பதனை அவர் முயன்று பார்த்திருக்கிறார். அறுவை ஜோக் போலத் தோன்றினாலும், திரும்பத் திரும்ப சொல்லும்போது சிரிப்பை வரவழைக்கும் பாணியில் அவை இருக்கின்றன.
ஆனால், இப்படத்தில் பல காட்சிகளில் ‘எங்கே டைமிங்’ என்று கேட்கும் வகையிலேயே வசனங்களும் நடிப்பும் அமைந்திருப்பதால் சிரிப்பு சிரிப்பாய்ச் சிரிக்கிறது.
திரையில் ‘ஹெவி எனர்ஜி’யோடு சிவகார்த்திகேயன் காட்சியளித்தாலும், நடனக் காட்சிகளின்போது அவர் ‘வெயிட்’ போட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
சில காட்சிகளில் அவரது முகத்தில் சோர்வு அப்பியிருப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது. கொஞ்சம் அதை கவனிங்க ப்ரோ!
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு ஷாட்டும் செறிவுமிக்கதாக, பல அடுக்குகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
‘பிரின்ஸ்’ படத்தில் எல்லா ஷாட்களுமே பளிச்சென்றும் மிக எளிமையாகவும் அமைந்திருக்கின்றன. அதற்கேற்ப கனமான திரைக்கதையும் நடிப்பதற்கான வாய்ப்பும் அமையவில்லை.
ஜெஸிகாவின் பாட்டி ஆங்கிலேயராக இருந்தபோதும் ஏன் இந்தியாவை நேசிக்கிறார் என்பதற்கான காரணம் இன்னும் அழுத்தமாக திரையில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அது நிகழாததால், கதையின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது.
கூடவே, மரியா – சிவகார்த்திகேயன் காதல் காட்சிகளும் கூட பெரிதாக ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை. அதனாலேயே, அவர்களுக்கிடையேயான காட்சிகள் மட்டுமல்லாமல் நண்பர்களாக வரும் சதீஷ், பிராங்ஸ்டர் ராகுல், பரத் கேங்கோடு சிவகார்த்திகேயன் அடிக்கும் லூட்டிகளும் கூட நம்மைக் கவர்வதாக இல்லை.
அனுதீப்பின் முதல் படமான ‘ஜதி ரத்னாலு’ படம் வழக்கத்திற்கு மாறான நகைச்சுவை என்பதாலேயே தெலுங்கு ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது.
‘பிரின்ஸ்’ஸில் அது சரியாக கைவரப் பெறவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இப்படத்தின் காஸ்ட்டிங் தான் அதற்கு முதல் காரணமென்று நான் சொல்லுவேன்.
தெரியாததை தெரிந்தது போல காட்டிக்கொள்ளும் மனப்பான்மை கொண்ட உலகநாதன் கதாபாத்திரம் நிச்சயம் சத்யராஜுக்கானதல்ல; அவரைப் பார்த்தவுடனேயே ’லொள்ளு டயலாக்’குகளையோ, கம்பீரத்தையோ ரசிகர்கள் எதிர்பார்ப்பது அதற்கொரு காரணம்.
போலவே, நாயகியின் தந்தையாக வரும் வெளிநாட்டவரும் கூட வயதான ‘ஜிம் பாய்’ போலவே வந்து போயிருக்கிறார்.
இது போதாதென்று வில்லன்களாக வரும் பிரேம்ஜி, சுப்பு பஞ்சு பாத்திரங்களுக்கு திரையில் போதுமான இடம் தரப்படவில்லை.
இவர்களுக்கே இடமில்லை எனும்போது சூரியின் ‘சிறப்புத் தோற்றம்’ எல்லாம் ’பப்படம்’ ஆகிவிடுகிறது.
ஒட்டுமொத்தமாக நோக்கினால், அனைவரது நடிப்பும் மேடையின் நடுப்பகுதிக்கு வந்து வசனம் பேசுபவதைப் போன்றே அமைந்திருப்பதை என்னவென்று சொல்வது?
ஏன் இப்படியொரு படம்..?
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் ‘படிகம்’ போல கண்ணில் ஒற்றிக்கொள்ளும் விதமாக இருக்கின்றன. படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் பிரவீன் கே.எல். பெரிய சவாலைச் சந்தித்திருக்கிறார்.
பல காட்சிகளுக்கு உயிரூட்டும் வேலையைச் செய்திருக்கிறார் பின்னணி இசை தந்திருக்கும் தமன்.
‘ஜெஸிகா’, ‘ஹூ ஆம் ஐ’, ‘பிம்பிலிக்கி பிளாப்பி’ பாடல்கள் துள்ளலைத் தந்தாலும், திரைக்கதையோடு பிணைந்தவாறு பாடல்கள் இல்லாதது வருத்தம் தரும் விஷயம். அது மட்டுமல்லாமல், பாடல்கள் இந்த இடங்களில்தான் வரும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் 100% அப்படியே பொருந்திப் போயிருப்பது பெரிய மைனஸ்.
‘மான் கராத்தே’வில் அழுகைக் காட்சிகளில் நடித்தது, ‘வேலைக்காரன்’ படத்தில் பொதுநலக் கருத்துகளை முன்னிறுத்தியது, திரையில் அதுநாள் வரை வெளிப்படுத்திய ப்ளஸ் பாயிண்ட்களான நகைச்சுவை நடிப்பையும் கலகலப்பான குணாதிசயத்தையும் ‘டாக்டரி’ல் துறந்தது உட்பட தனது எல்லைக்குள் நின்றவாறே பல பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.
‘ஹீரோ’வில் முழுமையான ஆக்ஷனில் இறங்கியதும் அதே வகையறாதான். ஆனால், பின்னதைப் போலவே ‘பிரின்ஸ்’ படமும் அவரது பாணி நகைச்சுவையைப் பரீட்சித்து கீழே சரிந்திருக்கிறது.
திரும்பத் திரும்ப ரசிக்க வைக்கும் ரொமான்ஸோ, நினைத்துப் பார்த்து சிரிக்க வைக்கும் காமெடியோ ‘பிரின்ஸ்’ஸில் இருந்திருந்தால் இப்படி விமர்சிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
அதற்கான எல்லா முயற்சிகளும் இயக்குனர் தரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இதன் தாக்கத்தை அதிகமும் அனுதீப் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
முழுமையான ஒரு ‘எண்டர்டெயினர்’ பார்த்த திருப்தியைத் தராவிட்டாலும், ஆனந்தராஜ் மற்றும் ‘காக்காமுட்டை’ பாட்டி வந்துபோகும் காட்சிகள் உட்பட மிகச்சில இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிகிறது.
குடும்பங்கள் படையெடுக்கும் இந்த கொண்டாட்டச் சூழலில் இத்திரைப்படம் தரும் ஆறுதல் அவை மட்டுமே. மற்றபடி, ‘தீபாவளி புஸ்வாணம்’ என்ற அளவிலேயே சிவகார்த்திகேயன் ரசிகர்களது நினைவில் ‘பிரின்ஸ்’ எஞ்சியிருக்கும்!
-உதய் பாடகலிங்கம்