அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார்!

மனம் திறந்த ரமேஷ் கண்ணா

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 13

***

எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில், ஒரு இயக்குநரின் முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதோடு முடிந்தது அவர் எதிர்காலம். அவருக்கு அடுத்த வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட கிடைக்காமலே கூட போய்விடலாம்.

ஆனால் இவரின் முதல் படம் ரிலீஸ் ஆகவில்லை. ரெண்டாவது படம் பாதியில் டிராப் ஆனது. அதன்பிறகும் அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ‘அஜித்’. அவர் தான் இயக்குநர் ரமேஷ் கண்ணா.

அஜித்தின் தனித்துவமான குணங்களைப் பற்றி ரசிகர்களிடம் ரமேஷ் கண்ணா பகிர்ந்து கொண்டவை.

‘‘பல வருஷங்கள் முன்னாடி நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தபோது, தனியா ஒரு படம் டைரக்ட் பண்ற சான்ஸ் கிடைத்தது. ஆனா அந்தப் படம் ரிலீஸ் ஆகல. அதுக்கப்புறம் எப்படியோ முட்டிமோதி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட அசிஸ்டென்டா சேரந்தேன்.

அவர் இயக்கிய ‘பெரிய குடும்பம்’ படத்தில் வசனம் எழுத வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது.

அந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தார். ஜெயராமை ஹீரோவா போட்டு படத்தை ஆரம்பிச்சேன்.

ஷூட்டிங் தொடங்கி மூணாவது நாளே ஃபெப்சி ஸ்டைரக். அதோட ஷூட்டிங் நின்னுப்போச்சு.

ஒரு வருஷம் கழிச்சு படத்தை தொடங்கலாம்னு பார்த்தா ஜெயராம் பிஸியாகிட்டார். அவரால தேதி கொடுக்க முடியல. பலபேர்கிட்ட கதையை சொன்னேன்.

எல்லாரும் பயந்தாங்க. அந்தக் கதையில நடிக்க யாருக்கும் தைரியம் இல்ல. என்ன செய்யுறதுன்னு தெரியாம குழப்பத்துல நின்னுட்டிருந்தேன். அந்த நேரத்துல தான் ‘காதல் கோட்டை’ பெரிய ஹிட் ஆகி இருந்தது.

இந்த கேரக்ரடர்ல அஜித் நடிச்சா நல்லா இருக்கும் என்றார் ஜெயராம்.

‘என்ன சார் விளையாடுறீங்களா? ஒரு பெரிய ஸ்டாரா வளர்ந்து வந்துகிட்டு இருக்கார். என் கதையோட ஹீரோ ஒரு குழந்தைக்கு அப்பா. எப்படி சார் ஒத்துப்பார்’ என்று கேட்டேன்.

அதோட என்னோட ராசி பத்தி தெரிஞ்சா தெறிச்சு ஓடிடுவார்னு சொன்னேன்.

நான் அஜித்கிட்ட பேசுறேன். நீங்க போய் பாருங்கனு சொன்னார். நானும் பார்த்து கதை சொல்லிட்டு வந்தேன்.

அதுக்கு அப்புறம் என்னைப் பற்றி ஜெயராமிடம் விசாரிச்சிருக்கார்.

முதல் படம் ரிலீஸ் ஆகாதது. ரெண்டாவது படம் டிராப் ஆன கதையெல்லாம் சொல்லி, பாவம் எந்த சப்போர்ட்டும் இல்லாததால பெரிசா வரமுடியலனு சொல்லி இருக்கார் ஜெயராம்.

அதைக் கேட்டவர், ”அப்படியா… நான் அவர் படம் பண்றேன்”னு அடுத்த செகண்டே சொல்லி இருக்கார். அந்த மனசு தான் சார் அஜித்.

அவரோட அந்த துணிச்சலான முடிவு தான் என்னை ஒரு டைரக்டர் ஆக்கியது என்பதை சொல்லிக்குறதுல எப்பவும் எனக்கு பெருமை தான்.

(தொடரும்…)

You might also like