போதை வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர் குடிபோதையில் இருந்து அவர்களுடன் பயணிப்போர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்படும்.

இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். இதுவரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வாகன ஓட்டுனர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மது குடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரிந்த ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மது குடித்து இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும்.

சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது இந்த விதி பின்பற்றப்படாது.

சென்னை போக்குவரத்துக் காவல்துறை ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும்.

மோட்டார் வாகனச் சட்டம் /s 185 r/w 188 MV Act விதிப்படி 1000 முதல் 10,000 வரை அபராதம் வசூல் செய்யப்படும்” என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ள நிலையில் இந்த அபராதமானது இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

You might also like