ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா தாக்கல்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அதன்பின், ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசரச் சட்டத்திற்கு கடந்த 7-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

அதன்படி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார்.

You might also like