காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், 22 ஆண்டுகள் கழித்து நேற்று நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 9,500 கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்களின் கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகளும் கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் சென்று வாக்களித்தார்.
கட்சி தலைமையகத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் 87 பேர் வாக்களித்தனர். இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் சங்கநகளூவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிடும் அக்கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வாக்களித்தார்.
அவரை தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே. சிவக்குமார், கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரும் வாக்களித்தனர்.
மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. மொத்தமுள்ள கமிட்டி உறுப்பினர்கள் 9,900 பேர்களில் 9,500 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் 96 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதே நேரம், சிறிய மாநிலங்களில் 100 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலின் மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.