– கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது.
அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராதது கண்டறியப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் அறியப்பட்டது.
இவ்வாறு தொடர்பு கொண்டதன் விளைவாக 1,531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர்.
மீதமுள்ள 6 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, தேர்வில் தோல்வி, உயர்படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் அனுமதிக்காதது, தேர்வு எழுதாதது, உடல் நலமின்மை, தொழில் புரிதல், கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது,
அருகாமையில் கல்லூரி இல்லாதது, மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடர இயலாத நிலை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதுதவிர, 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலைபேசி இணைப்பு பெறாததாலும், சில காரணங்களினாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
அந்தவகையில் மொத்தம் 10 ஆயிரத்து 725 பேர் உயர்கல்வியை தொடர முடியாமல் போய் இருக்கின்றனர்.
இவர்களில் 2 ஆயிரத்து 711 பேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது.
இதுகுறித்து கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “வரும் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முகாம் நடத்தப்பட வேண்டும்.
அந்த முகாமில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக 2 நாட்களுக்கு முன்னதாக அழைத்து பெற்றோருடன் தவறாமல் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதில் ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளையும் பங்கேற்க செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை உயர்கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும்.
பிற துறையின் ஒத்துழைப்பு தேவை ஏற்பட்டால், அவர்களையும் அழைத்து மாணவர்கள் பயன்பெற மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.