ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இதனை இன்னொரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றியதுண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் அத்திரைக்கதை கொஞ்சம்கூட புரியவில்லை என்று அர்த்தம் அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாகப் புரிதல் உருவாகுமென்ற நம்பிக்கை வலுப்படுவதாக அர்த்தம்.
ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள ‘கந்தாரா’ எனும் கன்னடத் திரைப்படம், அப்படிப் புதிதுபுதிதாக நம்முள் பல சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்யும் காட்சியனுபவம்.
மாயவா.. தூயவா..!
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, துளு நாடு என்றழைக்கப்படும் கர்நாடகத்தின் வடபகுதி, உடுப்பி, கேரளத்தின் காசர்கோடு பகுதிகளை உள்ளடக்கிய பரப்பின் அரசனுக்கு ஒரு மனக்கோளாறு ஏற்படுகிறது.
நிம்மதியின்றி தவிக்கும் அந்த அரசன், கோயில் கோயிலாகத் தரிசித்து பல குருமார்களை வணங்குகிறார்.
அப்போதும் கைவரப்பெறாத நிம்மதி, ஒரு பெரும் வனப்பரப்பில் இருக்கும் நாட்டார் தெய்வத்தின் முன்னர் ஊற்றாகப் பெருக்கெடுக்கிறது.
பழங்குடி மக்கள் வணங்கும் அத்தெய்வத்தின் பெயர் ‘பஞ்சுருளி’. வாழ்ந்து மறைந்தபின்னும் அம்மக்களை காக்கும் முன்னோர் நினைவாக, அங்கு நடுகல் வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த தெய்வத்தை தன் மாளிகைக்கு எடுத்துச் செல்ல விருப்பப்படுகிறார் அரசர். அதற்கு ஈடாக, அவருக்குச் சொந்தமான நிலங்கள் அம்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதன் பிறகு, அரசரின் அடுத்தடுத்த தலைமுறைகளும் பஞ்சுருளியை வணங்கி வருகின்றனர்.
தொண்ணூறுகளில் அந்த அரச பரம்பரையைச் சேர்ந்த வாரிசு ஒருவர் வழிவழியாக அந்த வழக்கத்தை உடைக்கிறார்.
பழங்குடி மக்களிடம் இருந்த நிலங்களை தமக்குச் சொந்தமானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முனைகிறார்.
பஞ்சுருளி வேடமிட்டு சாமியாடுபவரிடம், ‘இனிமேல் இம்மக்களுக்கு இங்கு இடமில்லை’ என்கிறார். அதனைக் கேட்டு, அந்த நபர் சன்னதம் கொள்கிறார்.
‘நான் மாயமாக மறைந்தால் பஞ்சுருளி உண்மையென்று நம்புவாயா’ என்று சொல்லிக்கொண்டே காட்டுக்குள் ஓடுகிறார். மாயமாக மறைந்து போகிறார். அந்த நபரின் மகன் அதனை நேரில் காண்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற வாயிலில் அந்த அரச வாரிசு ரத்தம் கக்கி இறந்து போகிறார். இந்நிகழ்வுகளுக்குப் பிறகு, சரியாக 30 ஆண்டுகள் கழித்து கதை விரிகிறது.
அரச பரம்பரையின் தற்போதைய வாரிசான தேவேந்திர சூத்தரு (அச்யுத் குமார்) பழங்குடி மக்களிடம் பரிவு காட்டுபவராக அம்மக்களால் கொண்டாடப்படுகிறார். நீதிமன்றத்தில் இறந்து போனவரின் மகன் இவர்.
பஞ்சுருளி வேடமிட்டு ஆடியவரின் மகனான சிவா (ரிஷப் ஷெட்டி), தன் தந்தையைப் போல தான் இருக்கக்கூடாது எனும் நோக்குடன் பஞ்சுருளி வழிபாட்டை விட்டு ஒதுங்கி வாழ்கிறார்.
எந்நேரமும் மது, போதை, அடிதடி, என்று பொறுப்பில்லாதவராகவும் தேவேந்திராவின் ஆலைக்கு வனத்தில் இருந்து மரம் கடத்தி கொண்டு வருபவராகவும் இருக்கிறார்.
சீராகச் செல்லும் சிவாவின் வாழ்க்கை, மாவட்ட வன அலுலவர் முரளிதரின் (கிஷோர்) வரவுக்குப் பிறகு தடம் புரள்கிறது. இருவருக்கும் இடையே பகை மூள்கிறது.
சிவாவின் விருப்பத்திற்குரிய பெண்ணான லீலா (சப்தமி கவுடா) பயிற்சி முடித்து வனத்துறையில் காவலராகச் சேர்கிறார்.
பணியில் சேர்ந்த முதல் நாளே, தான் வசிக்கும் கிராமத்தில் வனத்துறை மேற்கொள்ளும் அரசுக்குச் சொந்தமான நில அளவையில் பங்குகொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்.
இதனால் தன் குடும்பத்தினர், கிராமத்தினர் மட்டுமல்லாமல் சிவாவின் கோபத்திற்கும் ஆளாகிறார் லீலா.
ஒருநாள் இரவு சட்டவிரோதமாக சிவா மரம் வெட்டும்போது, முரளிதரின் ஜீப் அந்த இடத்திற்கு வருகிறது.
மரம் சாய்ந்து ஜீப் மீது விழ, சிவாவும் அவரது நண்பர்களும் தேடப்படும் குற்றவாளிகள் ஆகின்றனர்.
இந்த சூழலில், பஞ்சுருளி ஆடும் குருவா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இவர், சிவாவின் சித்தப்பா மகன்.
குருவாவை கொன்றது முரளிதர் என்பதே கிராமத்தில் பேச்சாக இருக்கிறது.
உண்மை என்னவென்பதை சிவா அறியும்போது முரண் முற்றுப் பெறுகிறது.
‘மாயவனாக’ கொண்டாடப்படும் தன் தந்தையைப் போல ஒரு ‘தூயவனாக’ சிவா மாறினாரா இல்லையா என்பதையும் சொல்கிறது. கூடவே சமூகத்தில் நிலவும் சாதீய வேறுபாடுகளையும் உரக்கப் பேசுகிறது.
கதை அரதப்பழசாக இருந்தாலும், அதைத் திரையில் சொன்னவிதத்தில் ‘அடங்கொன்னியா’ என்று நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ரிஷப்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் நடிப்பு!
சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நடிகர்களும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களும் திரையில் நிரம்பியிருக்கும் இத்திரைப்படத்தில் ரிஷப்பின் தாயாராக வரும் மானசியும் நடுத்தரவயது தோழராக வரும் பிரகாஷ் துமிநாடும் மனதில் பதிகின்றனர்.
கே.வி.ஆனந்தின் ‘கோ’, ‘ரஜினி முருகன்’ படங்கள் வழியே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அச்யுத் குமார், இதிலும் கலக்கியிருக்கிறார்.
மாநிற அழகியாக வரும் சப்தமிக்கு அதிக காட்சிகள் இல்லை; ஆனாலும், அவரது இருப்பு ஆங்காங்கே ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கிறது.
இப்படத்தின் நாயகன் ரிஷப், அற்புதமான நடிப்பாற்றலை திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மிகை என்று சொல்வதற்குப் பல காட்சிகள் வாய்ப்பாக அமைந்தாலும், அதற்கெல்லாம் இடமே தராதது ஆச்சர்யம். கிளைமேக்ஸில் அவர் வெளிப்படுத்தும் ‘பெர்பார்மன்ஸ்’ படுபயங்கரம் என்றால், அதன்பிறகு இடம்பெற்றிருக்கும் ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ அற்புதம்.
அக்காட்சியில் ரிஷப் காட்டும் பாவனைகள் ஆகச்சிறந்த நிகழ்த்துகலை நிபுணர்களுக்கே உரியது. மொழி, கலாசாரம், நிலப்பரப்பு கடந்து அனைவராலும் ஆராதிக்கப்படக் கூடியது.
மேடு பள்ளங்களை பொருட்படுத்தாமல் வனப்பகுதியில் உருண்டோடும் அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு, ஒரு புதிய களத்தை கண் முன்னே காட்டுகிறது.
கொட்டப்படும் காட்சித்துணுக்குகளை பெரும் வேட்கையுடன் கோர்த்திருக்கிறது கே.எம்.பிரகாஷ், பிரதீக் ஷெட்டியின் படத்தொகுப்பு.
ஒவ்வொரு நிலப்பரப்புக்குமான நாட்டார் தெய்வங்களும் வழிபாடுகளும் வெவ்வேறானதாயினும், வேறுபாடுகளைக் களைந்து ஒவ்வொருவர் நெஞ்சையும் தொடும் அம்சம் அவற்றில் இருக்கும்.
அது, அஜனீஷ் லோக்நாத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் காணக் கிடைக்கிறது.
ஆச்சர்யமூட்டும் ரிஷப்..!
கவனமாக செதுக்கப்பட்ட திரைக்கதையும் காட்சிகளில் நிரம்பியிருக்கும் நுணுக்கங்களும் ‘கந்தாரா’வின் ஆகப்பெரும் சிறப்பு.
ஒவ்வொரு ஷாட்டும் பெரும் மெனக்கெடலுடன் எடுக்கப்பட்டிருப்பதும் மனிதர்களின் பேருழைப்பு அதில் கலந்திருப்பதும் ஆச்சர்யமூட்டுகிறது.
அந்த வகையில், இக்கதையை எழுதி இயக்கியிருக்கும் ரிஷப் ஷெட்டியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
உளிதவாறு கண்டந்தே, பெல்பாட்டம், கருட காமன விருஷிப வாகன போன்ற படங்களில் ஒரு நடிகராக அசத்தியவர், இதில் ஒரு படி மேலேறியிருக்கிறார்.
இதற்கு முன் ஆறு படங்கள் இயக்கியிருந்தாலும், ‘கந்தாரா’வினால் இந்தியா முழுக்க பேசப்படுபவராக மாறியிருக்கிறார்.
பல நூற்றாண்டுகளாக மலைகளில் வாழ்ந்த பழங்குடிகளை, சமவெளிப் பகுதிகளுக்கு விரட்டும் நிகழ்வுகள் நாடு முழுக்க அரங்கேறி வருகின்றன.
அவர்களை விவசாயக் கூலிகளாகவும் நாடோடிகளாகவும் மாற்றும் முயற்சி தொடர்கிறது. இந்த நிலையில், மண் மீது அம்மக்கள் கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு துளியாக கொண்டாடப்படுகிறது ‘கந்தாரா’.
நாட்டார் தெய்வங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளவராகவோ, சன்னதம் கொண்டு சாமியாடுபவராகவோ அல்லது அது சார்ந்தவர்களை அறிந்தவராகவோ இருந்தால் இன்னும் சிறப்பு.
எளிமையாகச் சொன்னால், இயற்கையோடு இயைந்து வாழும் மனிதராக இருந்தால், உங்களுக்கு இப்படம் பிடித்துப் போகும்.
காலம், சூழல், கதாபாத்திரங்களின் இயல்பு மற்றும் வழக்கமான கிளிஷேக்களின் இருப்பு தாண்டி ஒரு படைப்பாக இப்படம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
இயற்கை வழிபாட்டுடன் இந்துத்துவ அடையாளங்களை இணைக்கும் விஷயங்கள் இதிலும் உண்டு என்றாலும், மிகச்சிறிய அளவில் இருப்பதால் அவற்றைப் புறக்கணித்துவிடலாம்.
போலவே, இன்னும் பல குறைகளையும் காண்பவர்கள் உணரக்கூடும். அது அவரவர் விருப்பங்கள், புரிதல்கள் சார்ந்தது.
கந்தாரா என்றால் மாயக்காடு என்றோ காட்டில் மாயமானவன் என்றோ பொருள் கொள்ளத் தோன்றுகிறது.
இந்தப் படத்தை ரசித்துவிட்டு, இன்னொன்றை பார்த்தால் அதில் கொட்டப்பட்ட உழைப்பு எத்தனை சதவிகிதம் என்று நமக்குப் புரியவரும். அந்த ஒப்பீடுதான் ‘கந்தாரா’வின் மாபெரும் வெற்றி!
– உதய் பாடகலிங்கம்