– தொல்.திருமாவளவன் கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதியக் பாகுபாடு தொடர்வதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இந்தியாவிலேயே அதிகமாக சாதிய வன்கொடுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது.
இது காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். பதிவாகாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலை குனிவு. இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் எடுத்துச் சொல்வோம்.
அகில இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான அரசியல் இப்போது தலை தூக்கி இருக்கிறது. தமிழகத்தில் அது வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார்.
கிறிஸ்தவர்களை திட்டமிட்டு திருக்குறளை தவறாக மொழி பெயர்த்து விட்டார் என சொல்லுவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதான வெறுப்பை அவர் வெளிப்படுத்துகிறார்.
இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
அவை தனித்தனியே இயங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” எனக் கூறினார்.