ஆன்லைன் சூதாட்டத் தடை: அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. நேற்று கூட தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

எனவே உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு வரும் 17ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

You might also like