இயக்குநர் சிறுத்தை சிவா நெகிழ்ச்சி
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 12
அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாஸம் என்று ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித்தை முதன் முதலில் அவர் வீட்டில் சந்தித்தைப் பற்றி நம்மிடம் விவரிக்கிறார்.
“முதல் நாள் அவரை சந்தித்தபோது ஒரு கதை சொன்னேன். ஆர்வமாக கேட்டவர், எதுவும் சொல்லாமல், நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வாங்க என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டார்.
கதை திருப்தியா இல்லயோ என்று நைட்டோடு நைட்டாக இன்னொரு லைன் யோசிச்சு வச்சிருந்தேன். காலை ஆறே முக்காலுக்கெல்லாம் அவரது திருவான்மியூர் வீட்டில் நின்றேன். ஏழு மணிக்கு வந்தவர்.
”சிவா… நீங்க நேரா வீட்டுக்குபோய் உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிடுங்க. அடுத்தது அஜித் படம் பண்றேன்னு” என்று அவர் சொன்னதே எனக்கு புதுசாக இருந்துச்சு. அப்பா, அம்மாகிட்ட சொல்லிடுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.
அதிலேயே தனக்கென ஒரு ஸ்டைலுடன் வித்தியாசப்பட்டு தெரிந்தார் அஜித். அவர் வாயிலிருந்து ஓ.கே. என்ற வார்த்தையைக் கேட்டபோதே எனக்கு கண்ணெல்லாம் இருட்டிகிட்டு வந்துடுச்சு.
நடந்து கொண்டிருப்பதெல்லாம் நெஜந்தானா என்று நம்புவதற்கே சில விநாடிகள் தேவைப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கே ரெண்டு நாட்களாகிடுச்சு” என்று தனது ஆரம்ப நாட்களை அழகாக கண்முன் கொண்டுவந்தார் சிவா.
”ஷூட்டிங் நேரத்துல யூனிட்ல யாருக்கு என்ன பிரச்சனைனாலும் முதல் ஆளா வந்து நின்னு உதவுபவர் அஜித் தான்.
ஸ்கூல் ஃபீஸ், மருத்துவ செலவுனு உதவி கேட்டு வர்றவங்களுக்கு சத்தமில்லாம உதவிகள் செய்வார்.
அது வெளியே தெரியக்கூடாது என்று நினைப்பார்.
இப்படி பார்த்துப் பார்த்து உதவிகள் செய்யும் அஜித்துக்கு ஒரு விபத்து ஏற்பட்ட போது என்னால காப்பாத்த முடியாம போச்சு” என்று சஸ்பென்சுடன் பேச்சை தொடர்ந்தார்.
”ஆலுமா டோலுமா… ஸாங் ஷூட் போது நான் ஸ்பாட்ல இல்ல. அஜித் சார் டான்ஸ் பண்ணிட்டு இருக்கும்போது கால் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டார்.
நான் ஸ்பாட்டுக்கு வரும்போது அவர் கால்ல ஐஸ் கட்டிகளை வச்சு அவரே கட்டுப்போட்டுகிட்டு இருந்தார்.
பார்த்தா மூட்டு முழுக்க திரும்பி இருந்துச்சு. எனக்கு பெரிய ஷாக்.
சார்…. உடனே கிளம்புங்க ஹாஸ்பிட்டல் போகலாம்னு கத்தறேன்.
பதட்டப்படாதீங்க சிவா… இன்னும் ஒரு டூ ஹவர்ஸ் தான்… ஸாங் முடிஞ்சிடும். அப்புறம் ஹாஸ்பிடல் போலாம்.
இவ்வளவு நாட்கள் டே அண்ட் நைட்டா கஷ்டப்பட்டு ஷூட் பண்ணிருக்கோம். லாஸ்ட் டே எனக்காக யாரும் மனசு வருத்தத்தோட போகக்கூடாது. பாட்டை கம்ப்ளீட் பண்ணிட்டு சந்தோஷமா போவோம்” என்று முடித்துக் கொடுத்துவிட்டு தான் போனார்.
அடுத்த நாள் அவரிடம் டப்பிங் டேட்ஸ் வாங்கி இருந்தோம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகாம அடிபட்ட காலோட டப்பிங் பேச வந்து நின்றார். மூட்டு முட்டை மாதிரி வீங்கி இருந்துச்சு.
கடுமையான வலியோட டப்பிங் பேசி கொடுத்தார். அன்னைக்கு மட்டும் அவர் வராம இருந்திருந்தா படமே தீபாவளிக்கு வந்திருக்காது. எந்த ஹீரோ செய்வாங்க சொல்லுங்க” என்று உணர்ச்சிவசப்பட்டார் சிவா.
இயக்குநர் சிவா தன் படங்களில் மாஸான பஞ்ச் டயலாக்குகள் வைத்து ‘தல’ ரசிகர்களை தெறிக்கவிடுவார். அந்த பஞ்ச் டயலாக்குகளை எப்படிப் பிடிக்கிறார் என்பதே படுசுவாரஸ்யமானது.
“அஜித் சாரோட ‘வீரம்’ பட ஷூட்டிங்காக சுவிட்சர்லாந்து போயிருந்தோம். ரெண்டு பேரும் காலையில ஒண்னா வாக்கிங் போவோம்.
நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணிட்டே நடப்போம். அந்த சமயத்துல அவர் வீட்டுல வேலை பார்க்குறவங்களுக்கு எல்லாம் சொந்தமா வீடுகட்டிக் கொடுத்திருந்தார்.
அதைப் பத்தி விசாரிச்சேன். அதுக்கு, “நம்மகூட இருக்குறவங்களை நாம நல்லா பார்த்துகிட்டா… நம்மள நமக்கு மேல இருக்கிறவன் நல்லா பார்த்துக்குவான்”னு ஜஸ்ட் லைக் தட் சொன்னார்.
அவர் யதார்த்தமா சொன்னத அப்படியே உருவி படத்துல வச்சுட்டேன். இதமாதிரி, பேச்சுவாக்குல சொல்ற நிறைய விஷயங்களில் இருந்தே பஞ்ச் டயலாக்ஸ் பிடிச்சிருவோம்” என்று சொல்லிவிட்டு, அசிஸ்டென்டுகளோடு அஜித் பட டிஸ்கஷனில் மூழ்கிப்போகிறார் சிவா.
(இன்னும் தெறிக்கும்…)
அருண் சுவாமிநாதன்