தமிழ்நாட்டில் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது!

 – இயக்குநர் பேரரசு கவலை

எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல்,

“படத்திற்கு இளையராஜா சாரைத்தான் இசையமைக்க வைக்க இருந்தோம். ஆனால், பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்காததால் என்ன செய்வது என்று யோசித்தோம். ஆடிசன் வைத்து இசையமைப்பாளரைத் தேர்வு செய்ய முடிவு செய்தோம்.

ஏழு இசையமைப்பாளர்கள் வந்தார்கள், அவர்களில் அஷ்வின் மிகச் சிறப்பாக செய்தார். இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது.

சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு பான் இந்தியா படம் தான் ‘ஒன் வே’. சின்ன படம் என்று சொன்னாலும் படம் பார்க்கும் போது சின்ன படமாக தோன்றாது. அந்த அளவுக்கு படம் இருக்கும்” என்றார்.

நடிகை குஷ்பு பேசும்போது, “இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றிபெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

காரணம், என் அண்ணனை நடிக்கவைத்துள்ளனர். அவருக்காகத்தான் நான் இங்கு வந்தேன். ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது படத்தில் மிகப்பெரிய விசயம் இருக்கு என்று தெரிகிறது” என்று பாராட்டினார்.

இயக்குநர் அகத்தியன், “’ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக சிறப்பாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக பாரதியாரின் பாடலை இப்படி ஒரு வடிவத்தில் கொடுக்கமுடியுமா! என்ற ஆச்சரியத்தை இசையமைப்பாளர் அஷ்வின் ஏற்படுத்திவிட்டார். வாழ்த்துகள் அஷ்வின்” என்றார்.

இயக்குநர் பேரரசு, “இன்று தமிழகத்தில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் பலர் தமிழ் பேசுவதில்லை, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிக் கொள்பவர்கள் தமிழை காப்பாற்றுவதில்லை.

பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு தமிழ் தேர்வு பாடமாக தான் இருக்கிறது. அதனால், என்ன செய்கிறார்கள், தமிழை தான் வீட்டில் பேசுகிறோமே, அதற்கு பதில் இந்தி கற்றுக்கொள்ளலாம் என்று இந்தியை தேர்வு செய்கிறார்கள். ஆக, தமிழை காப்பாற்ற வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன், “இன்று பெரிய ஹீரோக்கள் பலர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அதில் அவர்களுக்கு சம்பளமாகவே 70 கோடி வரை வாங்குகிறார்கள்.

அவர்களுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளை புதுமுகங்களாக போடலாம் அல்லவா, அதை செய்யாமல் செலவுகளை அதிகமாக்குகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும் என்று யாரும் நினைப்பதில்லை.

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் பெரிய இயக்குநர்களா? இதுபோன்ற சின்ன படங்களை எடுத்து வெற்றிபெறுவர்கள்தான் உண்மையான இயக்குநர்கள்” என்றார்.

படத்தில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

You might also like