எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் அனுபவம்
இந்தப் புத்தகத்தை நான் எழுதுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் மாக்ஸிம் கார்க்கிதான். 13 வருஷங்களுக்கு முன் அவருடைய கட்டுரைத் தொகுதி ஒன்றையும், ‘Days with Lenin’, ‘Fragments from my diary’ என்ற புத்தகங்களையும் ஒன்றையடுத்து ஒன்றாகப் படித்தேன்.
டால்ஸ்டாய், செஹாவ், லெனின் முதலியவர்களைப்பற்றி அவர் எழுதியிருந்த நினைவுக் குறிப்புகள் மிகவும் பிரமாதமாக இருந்தன.
இந்த உலகப் பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தாலும்கூட அறிய முடியாத பல நுட்பங்களை, குணசித்திர அம்சங்களை இந்த நினைவுக் குறிப்புகளில் காண முடிந்தது.
இந்த விஷயத்தை என் அரிய நண்பரும் ‘தமிழ்ப் புத்தகாலய’ உரிமையாளருமான திரு. கண. முத்தையாவிடம் சொன்னேன்; இதேபோல் நாம் பழகிய தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றுகிறது எனவும் கூறினேன்.
உடனே அவர், முதலில் கார்க்கியின் நூல்களைத் தமிழாக்கிக் கொடுத்துவிட்டு, அப்புறம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதுமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். “லெனினுடன் சில நாட்கள்” என்ற புத்தகத்தை முதலில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.
டால்ஸ்டாய், செஹாவ் பற்றிய கட்டுரைகளை மொழிபெயர்த்துப் புத்தக வடிவில் வெளியிடுவதற்கு முன் பத்திரிகையில் வெளியிட்டேன்.
அப்புறம், “விரோதி பணியாவிட்டால் . . .?” என்ற கார்க்கியின் கட்டுரைத் தொகுதியில் அவற்றைச் சேர்த்தேன்.
மொழிபெயர்ப்பு வேலை முடிந்ததும் நான் கண்ட எழுத்தாளர்களைப் பற்றி, கார்க்கியின் முன்னுதாரணத்தை வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். சுமார் இருபது எழுத்தாளர்களைப் பற்றி வெகு சீக்கிரத்திலேயே எழுதி முடித்துவிட்டேன்.
ஆனால் உடனே அச்சுக்குக் கொடுக்க வில்லை; நண்பர் முத்தையாவிடமும் கொடுக்கவில்லை. கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்திருந்தால் பத்து வருஷங்களுக்கு முன்பே இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரைகளை எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் கூறும்போது, என்னைப் பற்றியும் இடையிடையே கூறியிருப்பதைக் கண்டேன்.
“நான்” “நான்” என்று பல இடங்களிலும் இருப்பதைப் பார்த்தேன். திரும்பவும் கார்க்கி நூல்களைப் புரட்டிப் பார்க்கும்போது அவற்றிலும் “நான்” அதிகமாகத்தான் இருந்தது.
ஆனால் ‘கார்க்கி தம்மை எந்த அறிஞரோடும் தொடர்புபடுத்தி எழுதலாம். அவ்வாறு என்னைப் போன்றவர்கள் எழுதினால் மற்றவர்கள் பாராட்டுவார்களா?’ என்ற சந்தேகம் எழுந்தது.
அதற்காக “நான்” அம்சத்தைக் களையவும் முடியவில்லை. இம்மாதிரியான நினைவுக் குறிப்புகளில் அது இன்றியமையாத அம்சம். கார்க்கியே அதை ஒதுக்க முடியவில்லையே!
இதையெல்லாம் யோசித்துக் கையெழுத்துப் பிரதியைப் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துவிட்டேன். நண்பர் முத்தையா கேட்கும்போதெல்லாம் என் தயக்கத்தைச் சொன்னேன். அதைப் பொருட்படுத்தாது அவர் கேட்டுக்கொண்டும் இருந்தார்.
இந்த நிலையில் நான் மலாயாவுக்குத் “தமிழ் நேசன்” பத்திரிகையில் வேலை செய்வதற்காகப் போனேன். போன இடத்தில் பல நண்பர்கள் – இலக்கியப் பிரியர்கள் – தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.
“அவர் எப்படி இருப்பார்? எப்படிப் பேசுவார்? அவருடைய குண விசேஷங்கள் என்ன?” என்றெல்லாம் கேட்டார்கள்.
அவர்கள் கேட்ட எழுத்தாளர்களில் சிலரைப் பற்றியும் கேட்காத எழுத்தாளர்கள் சிலரைப் பற்றியும் நாம் எழுதி மூலையில் போட்டு வைத்திருக்கும் கட்டுரைகளை வெளியிட்டால் என்ன என்று நினைத்தேன்.
அங்கே சென்ற சில மாதங்களுக்குள் டி.கே.சி. பற்றிய கட்டுரையை முதலில் வெளியிட்டேன்.
அப்பொழுது அந்த நாட்டு வாசகர்களின் தேவையை அனுசரித்து ஒவ்வொரு கட்டுரையையும் சற்று விரிவாக்கினேன்.
ஏனென்றால் இங்கே சகஜமாகத் தெரிந்த சில விஷயங்கள் அந்த நாட்டுக்குப் புதியவை. எனவே அவற்றை விரிவாகக் கூற வேண்டியிருந்தது.
டி.கே.சி. பற்றிய கட்டுரை வெளிவந்த சமயத்தில் “ஆனந்த விகடன்” பொறுப்பாசிரியராக இருந்த “தேவன்” மலாயாவுக்கு வந்திருந்தார்.
அவர் கட்டுரையைப் பாராட்டியதோடு, இன்னும் விரிவாகவே எழுத வேண்டுமென்றும், மேலும் பல எழுத்தாளர்களைப் பற்றியும் எழுத வேண்டுமென்றும் சொல்லி ஊக்கம் கொடுத்தார்.
மலாயா வாசகர்களும் கட்டுரையை விரும்பினார்கள். டி.கே.சி.க்கு அவரைப்பற்றிய கட்டுரையைப் பத்திரிகையிலிருந்து கத்திரித்து அனுப்பினேன். அவர் எனக்கு அன்போடு தாம் பதிப்பித்த ராமாயணத்தை அனுப்பிவைத்தார்.
வையாபுரிப் பிள்ளை, ‘என் சாதனைகளை ஒரேயடியாகப் புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம்’ என்று எனக்கு எழுதினார்.
வெ. சாமிநாத சர்மா சில செய்திகளில் காணப்பட்ட தவறான தேதி மாற்றங்களையும் பெயர் மாற்றங்களையும் சுட்டிக்காட்டிச் சரியான விவரங்களையும் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.
இப்படி அநேகமாக ஒவ்வொருவருக்குமே அவரவர்பற்றிய கட்டுரையைப் பிரசுரமானதும் முதல் வேலையாக அனுப்பி விட்டேன்.
சென்னைக்குத் திரும்பிய “தேவன்” நான் இந்தக் கட்டுரைகளைத் “தமிழ் நேச”னில் வெளியிட்டு வருவதை “விகட”னிலும் ஒருவரி குறிப்பிட்டிருந்தார்.
நான் எழுதியவற்றுள் சில கட்டுரைகளே இந்த நூலில் இடம்பெறுகின்றன.
மலாயாப் பத்திரிகையில் வெளியிடுவதற்காக அதிகப்படியாய் எழுதிச் சேர்த்ததையும், இந்நாட்டு வாசகர்களுக்குத் தேவைப்படாதவையுமான பகுதிகளை எடுத்துவிட்டுக் கட்டுரைகளை அசல் உருவத்துக்குக் கொண்டுவந்து, சில புதிய செய்திகளையும் சேர்த்து இப்போது புத்தகமாக வெளியிடுகிறேன்.
டி.எஸ். சொக்கலிங்கம் பற்றிய ஒரு கட்டுரைதான் இந்தப் புத்தகத்துக்காகப் புதிதாய் எழுதிச் சேர்க்கப்பட்டது. ஏனென்றால், முதலில் இந்தப் புத்தகம் எழுதிய காலத்தில் அவர் “நான் கண்ட எழுத்தாள”ராக இல்லை.
இப்போது அவரிடம் வேலை செய்யும் நான், கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படி? “நான் கண்ட எழுத்தாளர்” ஆன பின்பும் அவரைப் பற்றி எழுதாமல் விட்டால், புத்தகம் குறையுடையதாகவே இருக்கும்.
டி.எஸ். சொக்கலிங்கத்தைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாகவே எழுதும்படி நேர்ந்தது. “ரொம்பப் புகழ்ந்து விட்டாய்” என்று அவர் கோபித்துக் கொள்ளக் கூடுமோ என்ற பயம்தான்.
நான் அவருக்குக் கீழ் உதவியாசிரியனாக வேலை செய்யாமல் இருந்திருந்தால் அவருடைய சாதனைகளை இன்னும் எவ்வளவோ புகழ்ந்து கூறியிருப்பேன் என்பது நிச்சயம்.
இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளின் அளவு, அந்தந்த எழுத்தாளரின் பெருமைக்கு அளவாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.
நான் பழகிய அளவையும், மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை எழுதும்போது இருந்த மன எழுச்சியையும் பொறுத்தே ஒவ்வொரு கட்டுரையின் வாசகமும் அளவும் அமைந்துள்ளன.
சிலரைப் பற்றிய கட்டுரைகளை எழுதுவதற்கு என்னைவிடப் பன்மடங்கு தகுதியும் உரிமையும் உடைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்கள் எழுதவில்லை. ஒருவேளை அவர்களுக்குக் கார்க்கியைப் பின்பற்றும் விருப்பம் இல்லைபோலும்!
சிலருடைய சாதனைகளை அதிகமாகப் பாராட்டியிருப்பேன். சிலருடைய சாதனைகளை அப்படிப் பாராட்ட வேண்டியது அவசியமேயானாலும், எழுதும்போது தோன்றியிராது.
தவிரவும், சாதனைகளைப் பாராட்டவோ வாழ்க்கை வரலாற்றை விவரிக்கவோ எழுதப்பட்ட நூல் அல்ல இது. இது வெறுங் குறிப்புகள் அடங்கிய புத்தகமே.
இடையிடையே தவிர்க்க முடியாதவாறு விமர்சனங்கள் முதலியன புகுந்திருக்கும். அவ்வளவுதானே ஒழிய, நான் யார் விஷயத்திலும் பாரபட்சம் காட்டவில்லை.
இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டிய மாக்ஸிம் கார்க்கிக்கும், புத்தகமாக வெளியிடுவதற்குமுன் வாரந்தோறும் அச்சிட்டு மலாயா வாசகர்களுக்கு முதலில் படைத்த “தமிழ் நேச”னுக்கும், எடுத்த எடுப்பிலேயே எனக்கு ஊக்கம் கொடுத்துத் தயக்கத்தைப் போக்கிய “தேவ”னுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(நான் கண்ட எழுத்தாளர்கள் நூலின் முன்னுரை)
நூலின் தலைப்பு: நான் கண்ட எழுத்தாளர்கள்
ஆசிரியர்: கு. அழகிரிசாமி
பதிப்பாசிரியர்: பழ. அதியமான்
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ. 275
நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு