ஊர் சுற்றிக் குறிப்புகள் :
நோக்கம் நல்லதாக இருக்கலாம்; எதிர்கால நலனுக்கானதாக இருக்கலாம். ஆனால் நிகழ்காலத்தில் அதற்காக இவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டுமா?
இப்படியொரு கேள்வி பெருநகரச் சென்னையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பலருக்கும் ஒரு கட்டத்தில் தோன்றியிருக்கும்.
அந்த அளவுக்கு இருக்கிறது தமிழ்நாட்டின் தலைநகரின் கதி!
ஒரு புறம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகளுக்காகச் சென்னையின் ஒரு பகுதியில் பள்ளங்களைத் தோண்டி வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு பரவலாகச் சென்னை நகரெங்கும் விதிவிலக்காகச் சில பகுதிகளைத் தவிர, மழை நீர் வடிகால் திட்டப்பணிகளுக்காகப் பள்ளங்களைத் தோண்டி வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு மேல் பல பகுதிகளில் அதற்கான வேலைகள் நடக்கின்றன… நடக்கின்றன.. நடந்து கொண்டே இருக்கின்றன.
முதலில் நீதிமன்றம் இத்திட்டப் பணிகளில் நிகழ்ந்து வரும் தாமதத்தைக் குறிப்பிட்டுக் கண்டித்தது.
தற்போது தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு சென்னையின் சில பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளைக் கடிந்து கொண்டதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
தமிழக முதல்வரும் சில பகுதிகளைப் பார்வையிட்டு, அக்டோபர் மாத இறுதிக்குள் மழை நீர் வடிகால் திட்டப்பணிகளை முடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால் சென்னையில் நிலைமை எந்த அளவில் இருக்கிறது?
பரவலாகச் சென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களைத் தோண்டியதில் ஒப்பந்ததாரர்களுக்கு இருந்த வேகம், பிறகு அந்த வேலைகளை முடித்து, தோண்டிய பள்ளங்களை மூடுவதில் இல்லை.
இதனால் என்ன ஆயிற்று?
சென்னை நகரம் எங்கும் வாகனங்களில் செல்கிறவர்கள் தவித்துப் போனார்கள். சிலர் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் வாகனங்களோடு சறுக்கி விழுந்து அவசர ஊர்திகளில் தூக்கிச் செல்லப்பட்டார்கள்.
மழைக்காலம் ஆரம்பித்து, மாலை நேரங்களில் மின்சாரம் வேறு தடைப்பட்ட நேரங்களில் இப்படி வாகனங்களில் செல்கிறவர்கள் தவறிப் பள்ளங்களில் விழுவது ஆங்காங்கே நடந்திருக்கிறது.
முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் ஒரு மாதம் முன்பு, ஒரு பள்ளத்தில் இரும்புக் கம்பிகள் நீட்டிய நிலையில் இருக்க, அதில் இரு சக்கர வாகனத்தோடு விழுந்து நினைவிழந்த இளைஞரை ஆம்புலன்ஸ் வந்து தூக்கிச் சென்றதை நேரடியாகப் பார்க்க நேர்ந்தது.
இப்படி சென்னை நகரில் எத்தனை பேர் பாதிக்கப் பட்டிருப்பார்கள்?
தோண்டப்படும் பள்ளங்களைத் தடுக்கச் சாலையோரத்தில் எந்த இரும்புத் தடுப்பும் இல்லை. போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறி விழுவது நடக்கிறது.
இவை விபத்துகள் தான்.
ஆனால், இவற்றிற்கு யார் பொறுப்பேற்பார்கள்? மாநகராட்சி பொறுப்பேற்குமா? அல்லது அந்தப் பணியை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர் பொறுப்பேற்பாரா? அல்லது மாநில அரசு பொறுப்பேற்குமா?
பெரும்பாலான சாலைகள் பள்ள மயமாக இருப்பதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல். போக்குவரத்துக் காவலர்கள் கட்டுப்படுத்தத் திணறிப் போகிறார்கள்.
வாகன ஓட்டிகள் சென்னை மாதிரியான பெருநகரத்தில் வசிப்பதை எண்ணிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு தான் மழைக்காலம் துவங்க இருப்பதாக வானிலை அறிக்கை வாசிக்கப்பட்டாலும், இப்போதே சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால், சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மழை நீரால் நிரம்பியிருக்கின்றன. அவை கொசுக்கள் அடரும் குழிகளாகவும் மாறியிருக்கின்றன.
சென்னையில் மட்டும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் இருக்கையில் இவற்றில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது என்பது படு சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.
இதை எந்த மதிப்புமிகு அமைச்சரோ, உயர் அதிகாரியோ இருசக்கர வாகனத்தில் பயணித்தால் தான் நடைமுறை அனுபவத்துடன் அந்தச் சிரமங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
காவல்துறைப் பாதுகாப்போடு பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய்விட்டு வருகிறவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
இதைவிட எந்த வீட்டிற்கு முன்னால் அல்லது எந்தக் கடைக்கு முன்னால் எப்போது பள்ளம் தோண்டப்படுகிறது என்பதே முன்பே தெரியப்படுத்தப்படுவதில்லை.
இதில் சில ஒப்பந்ததாரர்கள் பல கடைகள் அல்லது வியாபார நிறுவனங்களுக்கு முன்னால் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுவதற்குக் கடைக்காரர்களிடமோ, வீட்டு உரிமையாளர்களிடமோ தனியாகப் பணம் கேட்பது தான் கொடுமை.
இந்தப் புகார்களைப் பள்ளங்கள் தோண்டப்பட்ட பகுதிகளில் காதுகளைத் திறந்தாலே கேட்க முடிகிறது.
மழைக் காலத்தில் வெள்ளம் வந்தால் சென்னை நகரம் தவித்துப் போகிறது என்பதை அடுத்தடுத்து உணர்ந்து, அதைத் தடுக்கும் நோக்கில் தான் மழை நீர் வடிகால் திட்டப் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன.
இதற்குப் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நல்ல எதிர்காலத் திட்டம் தான்.
ஆனால், அதை நடைமுறைப்படுத்தப்படும் போது, முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏன் இவ்வளவு இடர்ப்பாடுகள்? பெருநகரத்தில் வசிப்பவர்களுக்கு எத்தனை சிரமங்கள்?
மழைக்காலம் தீவிரமாகும் முன்பு பொறுப்பில் இருப்பவர்கள் மாற்றைப் பற்றி யோசிக்கட்டும்.
– யூகி