பழந்தமிழர் மருத்துவம் பற்றிய ஆவணத் திரட்டு!

நூல் அறிமுகம்:

ஒவ்வொரு சமூகமும் கற்காலத்திலிருந்து சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப விவசாயம், இலக்கியம், கலைகள் என பல்வேறு துறைகளிலும் இன்றிலிருந்து நாளைக்கு, நாளையிலிருந்து எதிர்காலத்துக்கு என வளர்ச்சியை நோக்கியே முன்னோக்கிச் செல்லும்; சென்றிருக்கின்றன.

மருத்துவமும் அவ்வாறே. மனிதன் தோன்றிய காலம் தொட்டே நோய்களும் தோன்றியிருக்கும் என்பதால், தம் அருகில் கைவசமாகும் மூலிகைகள், தாதுக்கள் மற்றும் ஜீவராசிகளைக் கொண்டே நோய்களைக் குணப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்தன.

அக்காலத்தில், சித்த மருத்துவம் என்று தனியாக ஒரு மருத்துவமோ, துறையோ இல்லை. ஆயுளைக் கூட்டுவதால் ஆயுள் வேதம் என்றே இம்மருத்துவ முறை அழைக்கப்பட்டது.

இதுகுறித்த கருத்தாக்கங்கள், நூல்கள் பற்றிய அருமையான தேடல்களின் ஆவணத் தொகுப்பே – இலங்கையைச் சேர்ந்த அறிஞர் முனைவர் பால.சிவகடாட்சம் எழுதியுள்ள ‘தமிழர் மருத்துவம் ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூல்.

சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஏராளமான மருத்துவ அறிவியலை தன்னகத்தே கொண்டிருந்தது நம் நாடு.

வடகலை, தென்கலை என இரண்டாகக் கூறப்பட்டாலும், பொதுவாக அந்நாளில் ஆயுர்வேதம் என்ற பெயரில் தான் மருத்துவம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரம்கூட ‘ஆயுள் வேதம்’ என்றே மருத்துவத்தை அடையாளப் படுத்துகிறது. ‘ஆயுர்வேதர்’ என்றே சமகாலத்து மருத்துவரை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

இளங்கோ அடிகளுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சேக்கிழாரும் சிறுத்தொண்டரை ஆயுர்வேத மருத்துவம் கற்றுத் தேர்ந்தவர் என்றே கூறுகிறார்.

13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரை, தமிழில் மருத்துவ நூல்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

தமிழில் மருத்துவ நூல்கள் இருந்தாலும், அவை யாவும் ஆயர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றே கூறப்படுகின்றன.

ஆயுர்வேத மருத்துவத்தில் சரக சம்ஹிதா மற்றும் சுஸ்ருத சம்ஹிதா போன்ற நூல்கள் மிகப் பழமையான நூல்களாக இருந்து வந்திருக்கின்றன.

உயிர்களின் தோற்றமும் நோய்களின் உற்பத்தியும் என்ற தலைப்பிலான ஒரு கருத்தரங்கு பற்றிய தகவல் சரக சம்ஹிதா நூலில் இடம்பெற்றிருப்பது வியப்பளிக்கிற செய்தியாக இருக்கிறது.

அவற்றிலிருக்கும் சுவாரசியமான தகவல்கள் சில…

1. ஆத்மாவே ஒருவரின் தோற்றுவாய். அனைத்து செயல்களுக்கும் ஆத்மாவே காரணம்.

2. ஆத்மா துன்பத்தை வெறுக்கிறது. அது தனக்குத் தானே துன்பத்தையும் நோய்களையும் ஏற்படுத்திக் கொள்ளாது. நோய்க்கு மனமே காரணம்.

3. உடல் என்று ஒன்று இல்லாமல் உடல் நோய்கள் இருக்க முடியாது. மனம் என்ற ஒன்றும் இருக்க முடியாது.

4. ஒரு மனிதன், மனிதன் மூலமாகவே பிறக்கிறான். பசுவானது ஒரு பசுவிடமிருந்தும், குதிரை ஒரு குதிரையிடமிருந்தும் பிறக்கிறது.

நீரிழிவு போன்ற நோய்கள் பெற்றோரிடமிருந்தே கடத்தப்படுகின்றன. எனவே ஒருவரது தோற்றத்துக்கும் நோய்களுக்கும் பெற்றோரே காரணம்.

5. ஒரு குருட்டுத் தந்தைக்கு குருட்டுப்பிள்ளை பிறப்பதில்லை. அந்த பெற்றோர் நோயாளிகளாகப் பிறந்தது எப்படி? கர்ம வினைதான் காரணம்.

6. இன்னமும் செய்யப்படாத கர்மம் எப்படி ஒருவரது தோற்றத்துக்கும் நோய்களுக்கும் காரணமாக இருக்கும்?. இயற்கையே நோய்களுக்கும் தோற்றத்துக்கும் காரணம்.

7. இயற்கை தானாக எதையும் உருவாக்கவோ சாதிக்கவோ முடியாது. பிரம்மாவின் வழித் தோன்றலாகிய பிரஜாபதியே தனது அளவு கடந்த சக்தி மூலம் உலகில் இன்பத்தையும் துன்பத்தையும் தோற்றுவித்தார்.

தனது படைப்புகளின் நல்வாழ்வையே விரும்பும் பிரஜாபதி, இரக்கமற்ற மனிதனைப்போல எவ்வாறு முடிவில்லாத துன்பத்தில் ஆழ்த்த விரும்புவார்? மனிதன் என்பவன் காலத்தின் படைப்பு.

அவனது நோய்களும் அவ்வாறே. காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

8. முழுமையான உணவே ஆரோக்கியத்துக்கு ஆதாரம்.

மேலே கூறப்பட்ட கருத்துகள் இப்போதும்கூட விவாதிக்கத் தகுந்தவையாகத் தான் இருக்கின்றன.

அறுவை மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவத்தில் பொது மருத்துவமும் அறுவை சிகிச்சையும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நோயின் தன்மைகள், மருந்துகள், அவற்றின் செயல்முறைகள் பற்றிய ஏராளமான தகவல்கள் சரக சம்ஹிதையில் இருக்கின்றன.

அதற்கு சமமாக, சுஸ்ருத சமஹிதையில் அறுவை சிகிச்சைக்கான குறிப்புகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.

உலகிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் உறுப்பு மாற்று சிகிச்சையை விளக்கும் முதல் நூலாக சுஸ்ருத சம்ஹிதா பெருமை பெற்றுள்ளது.

நாசி மறு சீரமைப்பு, காது மறு சீரமைப்பு, தோல் மாற்று சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை போன்றவற்றை விளக்கியவர் அறுவை சிகிச்சையின் தந்தை என மருத்துவ உலகம் போற்றும் சுஸ்ருதரே.

மருத்துவத்தில் சாதியம்

பெருமைகளுக்குரிய ஆயுர்வேத மருத்துவத்தை பிராமணர், ஷத்ரியர், வைசிகர் மட்டுமே படிக்கமுடியும் என்கிறார் சரகர்.

ஆனால் நல்லொழுக்கம் நிறைந்த சூத்திரர்களும் கற்றுக் கொள்ளலாம் என்று சுஸ்ருதர் கருதியதால் குயவர், நாவிதர் போன்றோரும் வைத்தியம் கற்றுக் கொண்டனர்.

புண்களுக்கு மருந்திடுதல், இரத்தம், சீழ் இவற்றை சுத்தம் செய்தல் போன்றவை வேதம் ஓதும் பிராமணர்களுக்கு உரியதல்ல என்று கூறப்பட்டது.

தேவர்களுக்கும் பிதுர்களுக்கும் பலி கொடுக்கும் நிகழ்வுகளில் அவர்கள் அனுமதி மறுக்கப்பட வேண்டியவர்கள் என்று மனு தர்மம் கூறுகிறது.

மருத்துவம் செய்த பிராமணர்கள் அம்பஷ்த் என்னும் தனியொரு சாதியினராக அறியப்பட்டனர்.

இடையில் புத்த மதத்தின் வளர்ச்சி ஆயுர்வேத்திற்கு புத்துணர்வைக் கொடுத்திருக்கிறது.

பொது மருத்துவத்தையும் அறுவை மருத்துவத்தையும் ஒருங்கிணைத்து அனைவரும் படிக்கும் வகையில் ஆயுர்வேத நூலைத் தொகுத்த வாக்பட்டர் ஒரு பௌத்தர்.

காசி, தட்ச சீலம், மற்றும் நாலந்தா பல்கலைக்கழகங்களில் முக்கியமான இடம் ஆயுர்வேத மருத்துவத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பல்லவர் காலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ்ச்சியுற்று சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. அதனால் அரச குலத்தவரும் அரசின் ஆதரவு பெற்ற பிராமணரும் மட்டுமே மருத்துவம் படிக்கமுடிந்தது.

தற்போது மருத்துவர் என்ற மக்கள் தலித்துகளாக உள்ளனர். அறுவை மருத்துவம் செய்து வந்த அம்பஷ்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு சவரத் தொழில் செய்யும் நாவிதர் உதவியாக இருந்திருக்கிறார்.

நாவிதர் என்று அறியப்பட்ட சவரத் தொழிலாளர் அவர்களது மருத்துவத் தொழிலைக் குறிக்கும் வகையில் அமபஷ்டர் என்று அழைக்கப்பட்டனர். நம் நாட்டின் சாதி ஏற்றத்தாழ்வுகளால் ஆயுர்வேத மருத்துவத் துறை பயன்பாட்டில் இல்லாமல் போனது.

தமிழர் மருத்துவம்

தமிழர் மருத்துவம் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும், அப்போதே மாரடைப்பு பற்றிய சித்தர்களின் மருத்துவ அறிவு குறித்தும் விரிவாகக் கூறுகிறார் நூலாசிரியர்.

ஆயுர்வேத மருத்துவத்தில் இல்லாத நோய்க் கணிப்பு முறைகள், நாடிப் பரிசோதனைகள் குறித்தான தமிழர் மருத்துவ நூல்கள் பற்றிய செய்திகள் இந்நூலில் விரவிக்கிடக்கின்றன.

செம்பு உலோகத்தைத் தங்கமாக்கும் இரசவாதம் பற்றியும், அதன் நம்பகத் தன்மை பற்றியும் விளக்கி இருக்கிறார்.

ஏராளமான சித்தர்கள் குறித்த விவரங்களும், பட்டினத்தார், பத்ரகிரியார் போன்றோர் குறித்த குறிப்புகளும், பல்வேறு சீன யாத்திரிகர்கள் பற்றிய செய்திகளும் நூலில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன.

உலகில் முதன் முறை அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை, கண்புரை அறுவை, செயற்கை உறுப்புகள் பொருத்துதல் இவற்றைப் பற்றிய ஏராளமான குறிப்புகள், நம் நாட்டின் சாபக்கேடான சாதிய ஏற்றத் தாழ்வுகளால் அவை வழக்கில் இல்லாமல் போன வரலாறு.

இவ்வளவு வரலாற்றுக் குறிப்புகளையும் – படிப்பவருக்கு எளிதில் புரியும் வகையில் சுவையான மொழியில் கூறியிருக்கிறார் முனைவர் பால சிவ கடாட்சம் அவர்கள்.

மொத்தத்தில், பழந்தமிழர் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்றவற்றின் வரலாற்றை அறிய வேண்டியவர்கள் படிக்கவேண்டிய இந்தப் புத்தகம் நல்லதோர் ஆவணத் திரட்டு.

*****

தமிழர் மருத்துவம்: ஒரு வரலாற்றுப் பார்வை

முனைவர் பால.சிவகடாட்சம்
வெளியீடு : பட்டினம்
1A, திலகர் வீதி, பாலாஜி நகர், தண்டலம்.
அய்யப்பன்தாங்கல், சென்னை 600 077.
பக்கங்கள் 224.
விலை ரூ.250/-

தொகுப்பு – டாக்டர் அழகு நீலா பொன்னீலன்

You might also like