– கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.
அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், நடப்புக் கல்வி ஆண்டில் படிப்பைத் தொடர்கின்றனரா என ஆய்வு செய்யப்பட்டது.
இதில், தென்காசி, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் ஆறாம் வகுப்பில் சேராமல், படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.
சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலுார் மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், பல மாணவர்கள் இடைநிற்றல் ஆவதாக தெரியவந்துள்ளது.
இதேபோல், தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், எட்டாம் வகுப்புடன், படிப்பைக் கைவிடுவதும் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல், வேலுார், கரூர் மாவட்டங்களில், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேராமல் படிப்பைக் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
சென்னை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், முந்தைய ஆண்டுகளைவிட குறைந்திருக்கிறது.
திருப்பத்துார், பெரம்பலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையே நடக்கவில்லை. அதனால், பல அரசு பள்ளிகளில், சில வகுப்புகள் மாணவர்கள் இன்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வுத் தகவல்கள் அனைத்தும், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவுப்படி, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.