எதையும் முதல் முறையாக முயற்சிக்கும் போது பயமும் பதற்றமும் நிறைந்திருக்கும். அதுவே வழக்கமானபிறகு மனதில் நிதானம் படரும்.
நாளையும் நாளை மறுநாளும் வருமென்ற நம்பிக்கையால் செயலில் உறுதி தெறிக்கும். ஆனால், கடைசியாக ஒருமுறை என்பது அவற்றில் இருந்து முற்றிலுமாக விலகி நம்மை நாமே அந்நியராக உணரச் செய்யும்.
கடந்து வந்த வெற்றி தோல்விகளையும் தாண்டி நிரந்தரமாக வெறுமை தொற்றிக் கொள்வதைப் போன்ற உணர்வை எதிர்கொள்ளச் செய்யும்.
அதே நேரத்தில், சம்பந்தப்பட்டவர் சாதனையாளராக இருந்தால் அந்த பிரிவு மகிழ்ச்சிகரமான துக்கமாக நோக்கப்படும். கடந்த வாரம் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது அத்தகைய நெகிழ்வைக் கண்டது உலகம்.
பெடரர் குறித்த செய்திகள்!
விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கும் பருவத்தில் டென்னிஸ் குறித்து அறிய தூர்தர்ஷன் உதவியாக இருந்தது. அப்போது பீட் சாம்ப்ராஸ், போரிஸ் பெக்கர், ஆந்த்ரே அகாஸி, மார்ட்டினா நவரத்திலோவா, ஸ்டெபி கிராஃப், மேரி பியர்ஸ், சபாடினி என்று சில பெயர்கள் அறிமுகமாகின.
அந்த காலகட்டத்தில், ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் நுழைந்தார். 2000இல் தொடங்கிய அவரது ஆட்டம் அடுத்த பத்தாண்டுகளில் உச்சம் தொட்டது.
கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்களான பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் நடைபெறும்போதெல்லாம் அவரைக் குறித்த செய்திகளும் விளையாட்டுப் பக்கங்களில் தவறாமல் இடம்பெறும்.
பெடரர் தோற்றம் கண்டபோது எனக்கு அகாஸிதான் நினைவுக்கு வந்தார். அதே நேரத்தில், பீட் சாம்ப்ராஸை முன்மாதிரியாக கொண்டே களத்தில் இறங்கினார் பெடரர்.
2001இல் நடந்த விம்பிள்டனில் தன் ஆதர்ச நாயகன் சாம்ப்ராஸை 4வது சுற்றில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார் பெடரர். அப்போட்டியில் கால் இறுதியோடு வெளியேறினாலும், 2003இல் அதே விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றார். அப்போது தொடங்கி 2018இல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் வரை 20 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார்.
களிமண் தரையில் ஆடப்படும் பிரெஞ்ச் ஓபனில் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார். 4 முறை இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடாலுக்கு எதிராக தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
2019இல் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டி உட்பட செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சுக்கு எதிராகவும் பல முறை தோல்வியடைந்திருக்கிறார்.
2013 வாக்கில் காயம் காரணமாக வெற்றியைச் சுவைக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். ஆனால், அதிலிருந்து மீண்டும் ரஃபேல் நடால், ஜோகோவிச்சுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அதுதான் பெடரரின் சிறப்பு.
மேலே சொன்ன சாதனைகள் மட்டுமல்லாமல், பெடரர் அளிக்கும் பேட்டிகளும் கூட எனக்கு மிகவும் பிடித்தமானவை.
போட்டியின் முடிவில் வெற்றியோ, தோல்வியோ எது கிடைத்தாலும் எதிராளியைப் பற்றி கண்ணியமான வார்த்தைகளையே கூறுவார். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பெடரர் பற்றிய செய்திகள் எனக்கு சுவாரஸ்யத்தை தந்தன.
வெற்றியும் தோல்வியும் சகஜம்!
தொடர்ச்சியாக தொட்டதெல்லாம் வெற்றி என்றிருப்பதும், ஒருகட்டத்தில் சட்டென்று தோல்வியாகப் பெறுவதும் விளையாட்டு உலகில் சகஜம். ஏன், எல்லா துறைகளிலும் அது இயல்பானதுதான்.
ஆனால், வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெறுவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சக திறமையாளர்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதும் கூட அதற்குத் துணை புரியும்.
2000களின் தொடக்கத்தில் வெற்றியைச் சுவைக்கத் தொடங்கிய பெடரர், ஒவ்வொரு ஆண்டும் அதன் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் இருந்தார். ஆனால், அதற்கடுத்த ஐந்தாண்டுகளிலேயே ரஃபேல் நடாலும் ஜோகோவிச்சும் அடுத்தடுத்து வந்து பெடரருக்கு சவாலாகத் திகழ்ந்தனர்.
இதனால், இறுதிப் போட்டிகளில் இம்மூவரில் இருவர் மட்டுமே இடம்பெறுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினர். இந்த போட்டிக்கு நடுவே நடால், ஜோகோவிச், பெடரர் மூவரும் 22, 21, 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றது நிச்சயம் சாதனையே!
அப்படி டென்னிஸ் அரங்கில் பெடரரை கதறவிட்ட ரஃபேல் நடாலும் ஜோகோவிச்சும், அதே பெடரர் தனது இறுதிப் போட்டியில் ஆடி முடித்தபோது கதறி அழுததை என்னவென்று சொல்வது? அதுதான் விளையாட்டின் விளைவு.
எதிரி என்பவன் வெறுப்புக்கு உரியவன் அல்ல; நம்மைப் போன்றே, நமக்கு சமமான, நம்மைவிட தேர்ந்த ஒரு திறமையாளனாக களத்தில் எதிரே நிற்பவன்.
இதனை உணர்ந்தால், அந்த விளையாட்டு அளிக்கும் இன்பத்தை வேறெதுவும் தராது. அதனால்தான் கிரிக்கெட்டில் சச்சின் தன் பந்துகளை துவம்சம் செய்ததைப் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஷேன் வார்னே.
‘நீ திறமைசாலிதான்’ என்று ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் மனோபாவத்தை உருவாக்குவதே ஒரு நல்ல விளையாட்டின், கலையின், தொழிலின் அடிப்படை.
அப்படித்தான் லேவர் கோப்பையில் தோற்று பிரியாவிடை பெற்றபோது நடால் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார். இருவரும் இடம்பெற்ற ஐரோப்பிய அணியைச் சேர்ந்த ஆண்டி முர்ரேவும் ஜோகோவிச்சும் கூட கண் கலங்கினர்.
இருபதாண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் உலகில் தனக்கென்று தனித்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்த பெடரருக்கு இதைவிடச் சிறந்த வழியனுப்புதல் வேறு இருக்க முடியாது.
இறுதிப் போட்டியில் தோல்வி!
முதல் முறை டென்னிஸ் மட்டையைத் தொட்டதோ, போட்டியொன்றில் வெற்றி பெற்றதோ, முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதோ கூட பெடரரின் மனதில் இருக்குமா என்று தெரியவில்லை. கண்டிப்பாக, அவரது இறுதிப் போட்டி இனிவரும் நாட்கள் முழுக்க நிறைந்திருக்கும். ஏனென்றால், அந்த நாள் பத்தோடு பதினொன்றல்ல.
ஆதலால், கடைசிப் போட்டியில் வெற்றியைச் சுவைத்த வண்ணம் விடை பெறுவதையே ரசிகர்களும் விரும்பியிருப்பார்கள். மாறாக, அவர் தோல்வியுடன் அந்த ஆட்டத்தை நிறைவு செய்தார்.
அதேநேரத்தில் நடாலும் பெடரரும் வெற்றிக்காகப் போராடினார்கள் என்பதையும் அந்த செட்கள் சொல்லிவிடும்.
விளையாடி முடித்தபிறகு, ‘எனது இறுதிப்போட்டி இப்படித்தான் முடியுமென்று எதிர்பார்த்தேன்’என்றார் ரோஜர் பெடரர். அந்த வார்த்தைகளை அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரென்று தெரியவில்லை.
எனக்கு, அந்த தோல்வியை அவர் கொண்டாடியதாகவே பட்டது. ‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’ என்றிருந்த ஒருவர் தனது இறுதிப் போட்டியின்போதும் அவ்வாறே எண்ணினார் என்பதை உணர்ந்தபோது கண்ணில் நீர் துளிர்த்தது.
இத்தனைக்கும் சிறுவயதில் ஒரு போட்டியில் தோற்றாலே ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து அழும் குணத்தோடு இருந்தவர் பெடரர்.
காலம் அவரை மாற்றியது என்பதைவிட, விளையாட்டின் வேரைப் பற்றிக் கொண்ட அவரது நேசம்தான் அந்த மாற்றத்திற்கு காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த வார்த்தைகள்தான் இதனை எழுதுவதற்கும் உந்துதலாக இருந்தது.
உறவு, நட்பு, காதல், வாழும் இடம் தொடங்கி மரணம் வரை எல்லாவற்றிலும் கடைசியாக ஒருமுறை என்பதனை எதிர்கொள்ள நேரிடும்.
எப்போதும் பெடரர் போன்ற மனநிலையுடன் அது மாதிரியான தருணங்களை எதிர்கொள்ள வேண்டும். அப்போது நம் வாழ்வில் கடந்துவந்த நடால்களும் ஜோகோவிச்களும் யார் யாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும்!
– உதய் பாடகலிங்கம்