ட்ரிகர் – ரசிகர்களைத் தாக்கும் கமர்ஷியல் ‘விசை’!

ஒரு நல்ல கமர்ஷியல் படம் என்பது ஏற்கனவே நாம் ரசித்த பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்க்கச் செய்யும்.

திரையரங்கினுள் அமர்ந்திருக்கும்போது ‘க்ளிஷே’க்கள் நிறைந்திருக்கின்றனவே என்ற எண்ணம் எழாமல் இருந்தாலே போதும். அது வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும்.

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, அருண் பாண்டியன், தான்யா, சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ட்ரிகர்’ படமும் அவற்றுள் ஒன்றாயிருக்கிறது. அதர்வாவை ‘சோலோ’ ஹீரோவாக கொண்டாட வைக்கும் படமாக அமைந்திருக்கிறது.

’அண்டர்கவர் போலீஸ்’ கதை!

எம்ஜிஆர் நடித்த ‘காவல்காரன்’, கமல்ஹாசனின் ‘காக்கிச் சட்டை’, விஜய்யின் ‘போக்கிரி’ உட்பட ‘அண்டர்கவர் போலீஸ்’ கதைகள் தமிழிலும் கணிசமாக உண்டு.

அவற்றுள் உச்சம் தொட்ட படம் என்று மகிழ் திருமேனி இயக்கிய ‘மீகாமன்’ படத்தைச் சொல்வேன். அதே களத்தில் தற்போது இறங்கியிருக்கிறார் அதர்வா.

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாகச் சொல்லி காவல் துறை பணியில் இருந்து விலக்கப்படுகிறார் சத்தியமூர்த்தி (அருண் பாண்டியன்).

அச்சம்பவத்தின்போது தலையில் ஏற்பட்ட காயத்தால், அவர் மறதி நோய்க்கு ஆளாகிறார். அது ‘அல்சைமர்ஸ்’ நிலையில் கொண்டுபோய்விடுகிறது.

சத்தியமூர்த்தி பட்ட அவமானத்தைக் கண்டு துடிக்கும் மகன் பிரபாகரன் (அதர்வா), காவல் துறையில் சாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் பணியில் சேர்கிறார்.

தலைமை சொல்லும் உத்தரவுகளை ஏற்காமல் தன்னிச்சையாக அவர் மேற்கொள்ளும் முடிவுகள், பணியில் இருந்து நீக்கும் அளவுக்கு நிலைமையை மோசமாக்குகிறது.

அந்த நேரத்தில், பிரபாகரனை ‘அண்டர்கவர் போலீஸ்’ ஆக பணியாற்றுமாறு கூறுகிறார் சென்னை கமிஷனர் (அழகம்பெருமாள்).

சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் பணியாற்றுவோரைக் கண்காணிப்பதுதான் அவரது பணி. அவருடன் சேர்ந்து 4 பேர் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்னையின் வெவ்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஒரே நாளில் அடுத்தடுத்து சில குற்றங்கள் நிகழ்கின்றன. அப்போது, கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவரை மீட்கிறார் பிரபாகரன்.

அதேநேரத்தில், பிரபாகரனின் சகோதரர் தத்தெடுத்த ஒரு சிறுமி சில நபர்களால் கடத்தப்படுகிறார்.

சிசிடிவி கேமிராக்கள் துணை கொண்டு விசாரணை மேற்கொள்கையில், சிறுமியின் கடத்தலுக்காகவே மற்ற குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதை கண்டறிகிறார். அச்சிறுமியை மீட்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் மைக்கேலை (ராகுல்தேவ் ஷெட்டி) நெருங்கும்போது, போலீஸ் குழுவில் உள்ள ஒருவரே அவருக்கு கையாளாகச் செயல்பட்டது தெரிகிறது.

அதோடு, சத்தியமூர்த்திர் இருபதாண்டுகளுக்கு முன் கண்டறிந்த வழக்குக்கும் தான் கையாண்டுவரும் வழக்குக்கும் உள்ள ஒற்றுமையை அறிகிறார்.

இந்த நிலையில், நகரின் வெவ்வேறு பகுதிகளில் குழந்தைகள் பொதுவெளியில் கடத்தப்படுகின்றனர். அதேநேரத்தில், ஏற்கனவே காப்பகத்தில் இருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் கடத்தலுக்கு உள்ளாவார்கள் என்ற எண்ணம் வேறு பிரபாகரன் மனதை அரிக்கிறது.

மைக்கேலின் மனதிலுள்ள திட்டம் என்ன? பிரபாகரன் அதை முறியடித்து அக்கும்பலைப் பிடித்தாரா என்பதைச் சொல்கிறது ‘ட்ரிகர்’.

துப்பாக்கியிலுள்ள ட்ரிகரை அழுத்துவதும் அது இலக்கை மிகச்சரியாக தாக்குவதும் தேர்ந்த திறனைக் கைக்கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

அப்படியொரு நபராகவே பிரபாகரன் எனும் நாயக பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டைட்டிலுக்கேற்ப திரைக்கதையும் பரபரவென்றிருக்கிறது. அதனாலேயே, ஏற்கனவே பல படங்களில் பலமுறை பார்த்த நினைவுகள் மேலெழுந்துவிடாமல் நின்றுவிடுகிறது.

அதர்வாவுக்கு கைத்தட்டல்!

கமர்ஷியல் படங்களில் நடிக்கும் நாயகர்களுக்கு ‘பிட்னெஸ்’ மிகவும் அவசியம். விஜய் அதில் கைதேர்ந்தவர். அவரது வரிசையில் ‘பிட் அண்ட் ஹிட்’ நாயகனாகத் தோன்றியிருக்கிறார் அதர்வா.

‘100’ படத்துக்குப் பிறகு இரண்டாம் முறையாக இயக்குனர் சாம் ஆண்டனுடன் கை கோர்த்திருக்கிறார்.

அதற்கேற்ப, காட்சிகளுக்கு தேவையான ஹீரோயிசத்துடன் ஒரு ‘ஸ்மார்ட்’ ஹீரோவாக அதர்வாவை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அக்காட்சிகளில் கைத்தட்டல்கள் அள்ளுகின்றன.

நாயகியாக வரும் தான்யாவுக்குப் பெரிய வேடமில்லை; என்றாலும், சில காட்சிகளில் வந்து திரைக்கதையில் திருப்பங்களுக்கு காரணமாகிறார்.

அதர்வாவின் தந்தையாக வரும் அருண் பாண்டியன் ‘அல்சைமர்ஸ்’ நோயாளியாக அமைதியாக வந்து போகிறார்.

தாயாக வரும் சீதா, சகோதரராக வரும் கிருஷ்ணா, அண்ணியாக வரும் விநோதினி, கமிஷனராக வரும் அழகம்பெருமாள் அனைவரும் மனதில் பதிகின்றனர்.

‘அண்டர்கவர் போலீஸ்’ குழுவைச் சேர்ந்தவர்களாக முனீஸ்காந்த், நிஷா, அன்பு தாசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் இருந்தும் பெரிதாக நகைச்சுவை காட்சிகள் இல்லை.

அதற்குப் பதிலாக ‘சென்டிமெண்ட் டச்’ கொடுக்கிறது சின்னி ஜெயந்தின் பாத்திரம்.

பொய்யான குற்றச்சாட்டால் போலீஸ் பணியில் இருந்து விலகியதற்காக மகனையும் மனைவியையும் பிரிந்து அவதிப்படுவதைச் சொல்லுமிடத்தில் கண்ணீர் வரவழைக்கிறது அவரது நடிப்பு.

வில்லனாக வரும் ராகுல்தேவ் ஷெட்டிக்கு கதிரின் இரவல் குரல் பொருந்தவில்லை. ஆனாலும், மெகா சைஸ் உடலமைப்பினால் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு.

போலவே, இடைவேளைக்கு முன்னதாக வரும் அடுக்குமாடி கட்டட சண்டையிலும் அசத்தியிருக்கிறார்.

அதற்கேற்ப, சண்டை வடிவமைப்பாளர் திலீப் சுப்பராயனின் உழைப்பும் அமைந்திருக்கிறது.

ரூபனின் படத்தொகுப்பு இடைவேளைக்குப் பிறகான காட்சிகளை அடுக்குவதில் ‘ஜித்து வேலை’ காட்டியிருக்கிறது. அதனை ஒப்பிடுகையில், முதல் 20 நிமிடங்களை பற்களை கடித்துக்கொண்டு கடக்க வேண்டியிருக்கிறது.

அதனால் முதல் பாதி சுமாராகவும் இரண்டாம் பாதி சூப்பராகவும் அமைந்திருக்கிறது.

கிப்ரான் பின்னணி இசை திரைக்கதையை விறுவிறுப்பாக்க உதவியிருக்கிறது. அதர்வா குழுவில் சின்னி ஜெயந்த் உட்பட நால்வர் இணைவதைச் சொல்ல ‘ஸ்கூபி டூப்பா’ பாடல் பயன்பட்டிருக்கிறது. அவ்வளவே!

பி.எஸ்.மித்ரன், சவரிமுத்து, சாம் ஆண்டன் கூட்டணியின் வசனங்கள் ஆங்காங்கே ஈர்க்கின்றன.

‘நீ சொல்லிட்டுப் போறதை 10 நிமிஷத்துல மறந்துருவேன் என்னை போய் நம்புறியேப்பா’ என்று அருண் பாண்டியன் அதர்வாவிடம் பேசுவது அவற்றில் ஒன்று.

டெரர் இயக்குனர்!

டார்லிங் முதல் கூர்கா வரையிலான நான்கு படங்களிலும் ‘டெரர்’ இயக்குனராக அறியப்பட்டவர் சாம் ஆண்டன். அவரது படைப்புகளில் ரத்தம் தெறிக்கும்; குழந்தைகள் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல்ரீதியான குற்றங்கள் நிறைந்திருக்கும்.

‘100’ படத்தில் இளம்பெண்கள் கடத்தலை காட்டியவர் குழந்தைகள் கடத்தலை எப்படி காட்டியிருக்கிறாரோ என்று பயந்துபோய் படத்தைப் பார்க்க உட்கார்ந்தால், இதுவரை இல்லாத அளவுக்கு ‘நல்ல எண்டர்டெயினர்’ தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இது போன்று நிஜ வாழ்வில் நடக்குமா என்ற கேள்விகள் எழுந்தாலும், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் வளர்ந்து பெரிதாவதைக் கண்காணிக்க முறையான சட்ட திட்டங்கள் இல்லை என்ற உண்மையை உணர்த்தியிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

திரைக்கதையில் ஹீரோ வில்லன் இருக்குமிடத்தையும் வில்லன் ஹீரோ மறைந்திருக்கும் இடத்தையும் சட்டென்று அறியுமிடம் ’லாஜிக் மீறலை’ காட்டுகிறது.

இப்படத்தின் சிறப்பே அருண் பாண்டியன் மற்றும் அதர்வாவின் பாசப் பிணைப்பு. அது இன்னும் கொஞ்சம் விலாவாரியாக சொல்லப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

வில்லன் மற்றும் அவரது மகனுக்கு திரைக்கதையில் போதுமான இடம் அளிக்கப்படவில்லை.

இது மாதிரியான படங்களில் வில்லனுக்கு பில்டப் மட்டுமல்லாமல் உண்மையிலேயே முக்கியத்துவமும் தரப்பட வேண்டும்.

போலவே, அதர்வாவுடன் சின்னி ஜெயந்தும் மற்றவர்களும் இணைந்து பணியாற்றும் காட்சிகள் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் மக்கள் பின்னணியுடன் அமைக்கப்பட்டிருக்கலாம்.

இது போன்ற ‘இருந்திருக்கலாம்’ வகையறா குறைகளை மீறியும் படம் நல்ல பொழுதுபோக்காக.

ரசிகர்களைத் தாக்கும் கமர்ஷியல் ‘விசை’யாக அமைந்திருக்கிறது. அது மட்டுமே இந்த ‘ட்ரிகர்’ரின் சிறப்பு!

-உதய் பாடகலிங்கம்

You might also like