ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்,
ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால் இழந்துள்ளனர் எனவும்,
இந்த வகை விதைகளின் தனித்துவமான ஊட்டச்சத்து மற்றும் சூழலியல் குணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சுமார் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன்,
இந்த பாரம்பரிய நெல் ரகங்களால் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர்,
தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விருப்பமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து இந்த சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர் எனவும்,
பாரம்பரிய நெல் விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000 வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.