சிறைச்சாலையா பள்ளிகள்?

சமகாலக் கல்விச் சிந்தனைகள்: சு. உமாமகேஸ்வரி

பள்ளிகளை எப்படி இவ்வாறு சிறைச்சாலையுடன் ஒப்பிடலாம் என இந்த வாக்கியத்தைப் பார்க்கும் எவருக்கும் தோன்றலாம்.

இது குழந்தைகளின் மனவோட்டமேயன்றி வேறில்லை. உண்மையில் குழந்தைகள் என்ன நினைக்கின்றனர்?

பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஓடியிருந்தன. வகுப்பாசிரியர் குழந்தைகளிடம் உரையாடலை ஆரம்பித்தார்.

உங்களுக்கு பாடங்கள் சார்ந்து, என் கற்பித்தல் சார்ந்து ஏதேனும் கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார் ஒரு ஆசிரியர்.

“மிஸ்…. தமிழ் ரொம்பப் பிடிக்குது. ஆனால், எழுத்துப் பிழைதான்…” என்று இழுத்தன பல குரல்கள்.

“ஒவ்வொரு சப்ஜெக்ட் பற்றியும் சொல்லலாமா மிஸ்….”

சற்றே யோசித்த ஆசிரியர், ம்…சரி… சொல்லுங்க… என்றார்.

ஒவ்வொரு பாடம் குறித்தும் பல குரல்கள், பலவிதமான உணர்ச்சிகளுடன் பகிர்ந்து கொண்டபோது சற்றே வருத்தமாகவே இருந்தது.

திடீரென ஒரு குரல். மிஸ் சோசியல் கிளாஸ் (சமூக அறிவியல் பாட வகுப்பு) சிறைச்சாலைபோல் இருக்கு என்று கூறியதுடன் கண்ணீர் கசிய ஆரம்பித்தது அந்தக் குழந்தை முகம்.

வகுப்பாசிரியரால் அந்த தருணத்தில் எதுவுமே செய்ய இயலவில்லை. சமூக அறிவியல் பாடம் இப்படியும் குழந்தைகளை நினைக்க வைக்குமா என்றால், எந்தப் பாடமாக இருந்தாலும் பல காரணங்களால் இந்த மனநிலைக்குத்தான் மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்பது எதார்த்தம்.

ஆமாம், தற்காலத்தின் வகுப்பறைகள் மாற வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்மய வகுப்பறைகளால்தான் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயல்வதில்லை.

இந்த குறிப்பிட்ட வகுப்பறையைப் பொறுத்தவரை ஆசிரியர் மிகவும் திறன்மிக்கவர் தான். தி பெஸ்ட் என்று புகழப்படும் வகையில் சரியாக காணப்பட்டுள்ளார். தவறாமல் வகுப்புக்குச் சென்று பாடம் நடத்திவருபவர் தான்.

ஆனால், குழந்தைகள் மனதில் கொடுமைக்காரராக அடையாளம் காணப்பட்டார் என்பதை கவனிக்கவேண்டும்.

அவரைப் பொறுத்தவரை ஒரு நிமிடம்கூட விரயமாக்காமல் வகுப்பில் பாடம் நடத்தியுள்ளார். பாடங்களின் அளவு எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் கிடைக்கும் நேரத்தில் வேகமாக நடத்திமுடித்துள்ளார்.

அதோடு மாணவிகள் படிக்கவேண்டும் என்று இடைவிடாது கரும்பலகையில் கேள்வி – பதில் எழுதிப்போடுதல், வீட்டுப் பாடம் தருதல் என தொடர்ந்து அழுத்தம் தந்துள்ளார்.

படித்து வரவில்லை என்றால், தண்டனை, திட்டுகள் என பட்டியல் நீள்கிறது. அவரது பார்வையில் மாணவர் நலன் சார்ந்தே இயங்கியுள்ளார். 

ஆனால், மாணவர்கள் பார்வைக்கும் வலிமையும் வலியும் உள்ளது என்பதே ஆசிரியர்கள் இங்கு அறிந்துகொள்ள வேண்டியதாகப் பார்க்கலாம்.

ஆசிரியர்கள் தங்கள் பணியைக் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. பாடங்களை நடத்தி முடிப்பதும் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வதும் மட்டுமே தங்கள் பணி என்ற எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளக்கூடாது என்பது இந்த நிகழ்வின் வழியாக அறியலாம்.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் மனம் விட்டுப் பேச விரும்புகின்றனர்.  தங்கள் பிரச்சனையை ஆசிரியர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தங்களுக்கான பாடம் சார்ந்த பிரச்சனைகளைக்கூட காது கொடுத்து கேட்காமல் விரட்டி அடிக்கும் மனோபாவம்தான் குழந்தைகள் மனதை இப்படிப் பதறவைத்துள்ளது.

சிறைச்சாலைபோல் இருக்கு என்று வகுப்பறையைப் பற்றி விபரீதமாக எண்ண வைத்துள்ளது.

ஒரு‌ வகுப்பறையை ஒரு குழந்தை விரும்புவதும் வெறுப்பதும் அந்த ஆசிரியரைச் சார்ந்தே அமைகின்றது.

அந்த வகையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஒற்றை மயமாக இயங்கும் போக்கு மாறவேண்டும். ஒருபோதும் அது நல்ல விளைவுகளைத் தராது.

உமா

ஆசிரியர் 50 சதவிகிதம் மாணவர்களாக இருக்கவேண்டும். அதேபோல் மாணவர்கள் 50 சதவிகிதம் ஆசிரியர்களாக இருக்கவேண்டும் என்று பவுலா ப்ரேயர் கூறிச் சென்றதை நினைவில்கொண்டால் நல்லது.

குழந்தைகள் ஒன்றும் உயிரற்ற ஜடப்பொருள்கள் அல்லவே. அவர்கள் உணர்வுகளால் நிரம்பி வழியும் உயிருள்ள மனிதர்கள் அல்லவா? அவர்களது அடிப்படை எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் நண்பர்களைக் போல தங்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே.

காலம் மாறிவிட்டது. இன்னும் நான் சொல்வதைத் கேள் என்று கட்டளைகள் வெற்றி வாகை சூடாது. நானும் நீயும் சேர்ந்து கற்போம் என்பதுதான் இன்றைய சூழலில் பொருத்தமானதாக இருக்கும்.

மாற்றங்களுக்கான தளங்களாக வகுப்பறைகள் மாறவேண்டுமெனில், ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இல்லையேல் குழந்தைகள் மனம் வகுப்பறைகளை சிறைச்சாலைகளாகத்தான் சித்தரிக்கும்.

You might also like