பபூன் – பெயரில் மட்டும்..?!

பபூன் என்பதற்கு வேடிக்கையான, விநோதமான நபர், நாகரிக கோமாளி என்று பொருள் கொள்ளலாம்.

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன்’ பெஞ்ச்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் வீரப்பன் இயக்கியத்தில் வைபவ் நடித்துள்ள ‘பபூன்’ திரைப்படமும் அப்படியொரு பாத்திரத்தையே முன்வைப்பதாகத் தோன்றியது.

படம் பார்த்து வெளியே வரும்போது அந்த நம்பிக்கை மெய்யானதா அல்லது பொய்யானதா என்பதை அறிய சுமார் இரண்டு மணி நேரத்தை கடக்க வேண்டியிருக்கிறது.

கடத்தலில் கலைஞன்!

தொண்டி வட்டாரத்தில் வள்ளி திருமணம் உட்பட பல நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்த ஒரு நாடகாசிரியரின் மகன் குமரன் (வைபவ்). நாடகங்களில் கோமாளியாக நடித்து வருகிறார். விழாக்கள் இல்லாத நாட்களில் கூலி வேலை செய்து வருகிறார்.

மக்கள் மத்தியில் நாடகங்களுக்கு வரவேற்பு இல்லாத சூழலில், பொதுவெளியிலும் சரியான மரியாதை கிடைக்காமல் போவதால் வருத்தமடைகிறார். வெளிநாடு சென்று பணம் சம்பாதித்தால் மட்டுமே சமூக அந்தஸ்து கிடைக்குமென்று எண்ணுகிறார்.

குமரனும் அவரது நண்பர் முத்தையாவும் (ஆந்தக்குடி இளையராஜா) தினசரி கூலி அடிப்படையில் வாகனம் ஓட்டச் செல்கின்றனர். அதில் ஓரளவுக்கு வருமானமும் கிடைக்கிறது.

ஒருநாள் இவர்கள் ஓட்டிச் சென்ற வாகனத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மறிக்கின்றனர். அதில் இருந்து 25 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்து குமரனையும் முத்தையாவையும் கைது செய்கின்றனர்.

தனபால் என்ற பெயரில் குமரனை நீதிபதி முன் ஆஜர்படுத்துகின்றனர்.

சிறைக்குச் செல்லும் வழியில் இருவரும் தப்பிக்க, அவர்களை வளைத்துப் பிடிக்க முயற்சிக்கின்றனர் போலீசார்.

இன்னொரு புறம் இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட தனபாலை (ஜோஜு ஜார்ஜ்) கைது செய்ய உத்தரவிடுகிறார் முதலமைச்சர் (வ.ஐ.ச.ஜெயபாலன்).

காரணம், தனபாலை ஆட்டுவிக்கும் ரங்கநாதன் (ஆடுகளம் நரேன்) வேறு கட்சிக்கு தனது ஆதரவாளர்களுடன் செல்லப் போவதாக விடுத்த மிரட்டல்.

ரங்கநாதனின் பொருளாதார பலத்தை உடைத்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்ட, எஸ்பி (தமிழரசன்) தலைமையில் ஒரு சிறப்பு படை களத்தில் இறங்குகிறது.

இடைப்பட்ட காலத்தில் கேரளத்தில் இருந்து படகு மூலமாக வெளிநாடு செல்வதற்கு குமரனும் முத்தையாவும் தயாராகின்றனர்.

அது நிறைவேறாமல் போகிறது. இதற்கிடையே குமரனின் தந்தையையும் அவருக்கு உதவும் இளையாளையும் (அனகா) கைது செய்கிறது போலீஸ்.

ஒருபுறம் போலீசாரும் இன்னொரு புறம் ரங்கநாதனின் அடியாட்களும் துரத்த, தான் இழந்த நிம்மதியான வாழ்வை மீட்டெடுக்க குமரன் என்ன செய்தார் என்பதோடு முடிவடைகிறது ‘பபூன்’.

பணம் சம்பாதிப்பதற்காக கேங்க்ஸ்டர், அரசியல்வாதி கனவுகளுடன் திரியும் ஒரு நாடக கலைஞன், திடீரென்று எதிர்கொள்ளும் அசம்பாவிதங்களுக்குப் பிறகு எவ்வாறு மனம் மாறினார் என்பதே கதையின் மையம்.

அதற்கேற்ற வகையில் ஒரு நாவல் போல விரிய வேண்டிய திரைக்கதை வெறுமனே பரபரப்பூட்டும் அம்சங்களை தேடுவதோடு நின்றுவிட்டிருக்கிறது.

ஏன் இலங்கை தொடர்பு?

தமிழகத்தின் நீண்ட நெடிய கடலோரப் பரப்பில் நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி இடையிலான ‘பாக் ஜலசந்தி’ பகுதியை மட்டும் கடல்வழி கடத்தல் நடைபெறும் இடமாகச் சித்தரிக்கிறது ‘பபூன்’.

மிக முக்கியமாக, பல ஆண்டுகளாக அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறும் வழியாகச் இதுவே சொல்லப்படுகிறது.

அதாவது தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வட பகுதிக்கும் இடையே அதிகளவில் கடத்தல் நிகழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இடையே ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாம், கல்லூரியில் படிக்கும் இளம் அகதிகள், மீனவ கிராமங்களில் செல்வாக்கு செலுத்தும் தனபால் எனும் தனிநபர்,

அவரை ஆட்டுவிக்கும் தென்மாவட்ட அரசியல்வாதிகள் என்று ஒரு வரைபடத்தைக் காட்டுகிறது இயக்குனர் அருண் வீரப்பன் வடித்துள்ள திரைக்கதை.

அதனை ‘கேங்ஸ்டர் டிராமா’ என்ற வகையில் அடக்காமல் நாயகனின் ‘ஆக்‌ஷன் டிராமா’வாக வடித்ததுதான் நம்மைக் கதற விடுகிறது.

தனபால் பாத்திரத்தில் வரும் ஜோஜு ஜார்ஜ் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? திரைக்கதையில் அவருக்கான இடம் என்ன என்பதெல்லாம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

அதனால், ‘ஜகமே தந்திரம்’ படத்தில் அவர் ஏற்ற லண்டன் தமிழ் கேங்க்ஸ்டர் பாத்திரமே உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது.

அகதிகள் படும் கஷ்டங்கள், அவர்களை தமிழ்நாட்டு போலீசார் கையாளும் விதம் குறித்த விமர்சனங்கள் நாயகி அனகா ஏற்றிருக்கும் இளையாள் பாத்திரத்தின் வழியே வசன்ங்களாக வெளிப்படுகின்றன.

ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிய நாயகனுக்கு அவர் பதிலுதவி செய்கிறார் என்கிற வகையில் அப்பாத்திரத்தின் பின்னணி உதவுகிறது. மற்றபடி, இப்படம் அகதிகளின் வலிகளை உரக்கப் பேசவில்லை.

தமிழ்நாட்டின் தெற்கு கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களை கடத்தலில் ஈடுபடுபவர்களாகச் சித்தரிக்கிறது ‘பபூன்’.

இது சர்ச்சையாகும் என்று தெரிந்திருந்தும் அதற்கு முட்டு கொடுக்கும் அளவுக்கு, இத்திரைக்கதையில் அவர்களது வாழ்வியல் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

இதன் விளைவாக, மேலோட்டமாக ஒரு பத்திரிகைச் செய்தியைப் படிக்கும் உணர்வையே திரைக்கதை தருகிறது.

வைபவ் கேட்டுக்கொள்வாரா?

‘மலேசியா டூ அம்னிஷியா’ போன்ற படங்களில் நகைச்சுவை நாயகனாக நடிப்பதற்கும் இப்படத்தில் பபூனாக தோன்றுவதற்கும் இடையே நிறைய வித்தியாசங்களை உணர வைக்கிறார் வைபவ்.

நாடக மேடை காட்சிகளில் வசனம் பேசி நடிக்கையில் குமரன் எனும் பாத்திரம் உயிர் பெறவே இல்லை.

இம்மாதிரி வேடங்களை ஏற்பதற்கு முன், தனது சகோதரர் சுனிலிடம் வைபவ் ஆலோசனைகள் கேட்பது நல்லது.

நாயகியாக வரும் அனகா, தனது உடல்மொழியில் வழியும் கிளாமரை ஒதுக்கிவிட்டு ‘ஒரு இலங்கை தமிழ் பெண்’ ஆக தோன்ற முயற்சித்திருக்கிறார். அவ்வளவுதான் அவரது பணி.

பெரும்பாலான காட்சிகளில் வைபவ் உடன் தோன்றுகிறார் அவரது நண்பராக நடித்துள்ள ஆந்தக்குடி இளையராஜா. அவர் மட்டும் வட்டார மொழி பேசுவது வைபவை தனித்து காட்டுகிறது.

முதலமைச்சராக வரும் ஜெயபாலன், ரங்கநாதனாக வரும் நரேன், எஸ்பியாக நடித்த தமிழரசன், தனபாலாக வரும் ஜோஜு ஜார்ஜ் அனைவருமே கமர்ஷியல் படத்திற்கு தேவையான பாத்திரங்களாகத் தோன்றியிருக்கின்றனர்.

நரேன் மற்றும் ஜோஜு ஜார்ஜின் கையாள்களாக நடித்தவர்கள், வைபவ் மற்றும் இளையராஜாவின் பெற்றோராக நடித்தவர்கள், போலீசார் உட்பட சுமார் இரண்டு டஜன் பேர் திரையில் முகம் காட்டியிருக்கின்றனர்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும் வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பும் குமார் கங்கப்பனின் கலை வடிவமைப்பும் நாம் இதுவரை திரும்பி பார்க்காத உலகமொன்றை காட்ட உதவியிருக்கின்றன.

பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், காட்சிகளுடன் பினைந்த பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஏன் இந்த டைட்டில்?

அரசியல் உலகத்தில் நிகழும் அதிகாரப் போரில் சாமான்யர்கள் நசுக்கப்படுவதுதான் இக்கதையின் மையம். அதனைச் சொல்லும்போது அதிகார பீடங்களை முடிந்தவரை தோலுரிக்க வேண்டும்.

கீழ்மட்டத்தில் நிகழும் குற்றங்களின் பின்னணியை விவரித்திருக்க வேண்டும்.

இரண்டுமே இப்படத்தில் இல்லை. குறைந்தபட்சமாக, இந்த அரசியல் போரின் போக்கு அறியாது அதனை தினசரிச் செய்திகள் வடிவில் அசைபோடும் சாதாரண மக்களின் மனநிலையும் கூட திரைக்கதையில் விளக்கப்படவில்லை.

‘பபூன்’ என்ற டைட்டிலை கேட்டதும் ஒரு கோமாளியின் ஆக்‌ஷன் அவதாரம் என்று ஒரு கதை ரசிகர்கள் மனதில் தோன்றும்.

அதற்கேற்ப நாடக கலைஞர்களின் துன்ப வாழ்வோ, கோமாளியாக நடிப்பவர்களின் மனக் கிலேசங்களோ இக்கதையில் வெளிப்படவில்லை.

இது போன்ற பாத்திரங்களுக்கான ‘ரெபரென்ஸ்’ ஆக பல நாயக பாத்திரங்களை படைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். இயக்குனர் அசோக் வீரப்பன் அவற்றை கொஞ்சம் பார்த்திருக்கலாம்.

இயக்குனர் தான் அறிந்த அல்லது கேள்விப்பட்ட சில நிகழ்வுகளின் அடிப்படையில் இத்திரைக்கதையை உருவாக்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த விவரங்களும் விவரணைகளும் அப்படியே திரையில் தென்பட வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், திரைக்கதையில் நிரம்பியிருக்கும் சம்பவங்களுக்கு, பாத்திரங்களுக்கு, அதனூடே பாயும் வாழ்வோட்டத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் திரைக்கதையின் வழியே முழுமை உணரப்பட வேண்டும்.

அது நிகழாத காரணத்தால், ரசிகர்களின் மனதோடு ஒட்டிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கதை வெகுசாதாரணமான திரைப்படமாக நம் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது.

கோமாளி என்பவர் வேடிக்கைக்குரியவர் மட்டுமல்ல; நம்மைச் சிரிப்பூட்டி சிந்திக்கவும் வைப்பவர். ‘பபூன்’ அப்படி அமையாததில் வருத்தமே!

– உதய் பாடகலிங்கம்

You might also like