பாஞ்சாங்குளம்; இன்னும் நீடிக்கும் தீண்டாமை அவலம்!

நவீனத் தொழில்நுட்பமும், சமூகச் சூழலும் மாறியிருக்கிற இன்றைய நிலையில் ‘’இப்படியா?” என்று கேட்க வைத்திருக்கிறது பாஞ்சாங்குளத்தில் நடந்திருக்கும் நிகழ்வு.

தீண்டாமை இன்னும் எவ்வளவு அடர்த்தியான அழுக்கைப்போல ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அழுத்தமாய் உணர வேண்டியிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாங்குளத்தில் உள்ள தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள கடைகளுக்குப் போய்த் தின்பண்டங்களை வாங்கப் போகும்போது, அவர்களுடைய சாதியைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு விற்பனை செய்ய மறுத்திருக்கிறார் கடைக்காரர்.

அந்தச் சிறுவர்கள் வெகுளித்தனமாய்க் காரணம் கேட்டபோது, ”குறிப்பிட்ட சாதியினருக்குப் பொருட்களை விற்கக்கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு‘’ என்கிறார். அந்தச் சிறுவர்கள் பள்ளியிலும் தாங்கள் மட்டும் தரையில் தனித்து உட்கார வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இவை எல்லாமே பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகள்.

பாதிக்கப்பட்ட  சிறுவர்கள் தங்களுக்கே உரிய குழந்தைத்தன இயல்புகள் மாறாமல் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் மூலம் அந்தக் கிராமத்தில் பழைய நிலபிரபுத்துவக் கால மதிப்பீடுகள் எப்படி உயிர்ப்போடு இருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. பார்க்கிறவர்களை அதிரவும் வைக்கிறது.

இந்தச் சம்பவம் பொதுவெளிக்கு வந்த பிறகு தீண்டாமையைக் கடைப்பிடித்த குற்றச்சாட்டின் பேரில்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரிக்கப் போன பழங்குடியினர் நல அலுவலரோ ‘’ பள்ளியில் எந்தச் சாதியப் பாகுபாடும்’’ இல்லை என்பதாக அறிக்கை கொடுத்திருப்பது விசித்திரம்.

நம் முன்னால் இருக்கிற அழுக்கை எந்தச் சாதியப் போர்வையாலும் மறைத்துவிட முடியாது. பூசி மெழுகவும் முடியாது.

முதலில் இருக்கிற நிலையை உள்ளபடியே ஒப்புக் கொண்டால் மட்டுமே அந்தச் சூழலை அகற்றுவது பற்றி நாம் யோசிக்க முடியும்.

இதே மாதிரியான நிலை இதற்கு அண்மையில் இருக்கிற சேரன்மாதேவியிலும் நடந்து அரசியலில் பெரும் அலையைக் கிளப்பியது.

சேரன்மாதேவியில் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தவர் விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு.ஐயர். பலதரப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்துவந்த அந்தப் பள்ளியில் பல மொழிகள் கற்பிக்கப்பட்டன.

தேசிய உணர்வைப் பிரதானமாகக் கொண்ட அந்த குருகுலத்தில் நடந்த சாதியப் பிரிவினை தான் அப்போதும்  வெளியே தெரியவந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பிராமண மாணவர்கள் சாப்பிடுவதற்குத் தனியிடமும், மற்ற சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிடுவதற்குத் தனியிடமும் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த குடிநீர்ப்பானையில் தண்ணீரைக் குடிக்கக் கூட, பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத்  தடை விதிக்கப்பட்டிருந்தது,

அது தெரியாமல் அந்தக் குடிநீர்ப்பானையில் நீரைக் குடித்த ஒரு சிறுவன் தொட்டதால், அந்தப் பானையே தீட்டுப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது,

அந்தச் சிறுவன் அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூராரின் மகன்.

சொந்த ஊருக்குப் போனதும் அந்தப் பையன் அப்பாவிடம் கேட்ட கேள்வி ‘’தீட்டுன்னா என்னா நைனா?’’

அதன்பிறகு பெரியாருக்கு விஷயம் தெரிந்து பெரும் சலசலப்பு, காங்கிரஸ் அந்தக் குருகுலத்திற்குக் கொடுத்து வந்த நன்கொடையை நிறுத்தச் சொல்லி சர்ச்சை கிளம்பியது.

இருந்தபோதும் தான் நடத்தி வந்த குருகுலத்தில் இருந்து வந்த சாதியப் பிரிவினையை வ.வே.சு. ஐயர் மறுக்கவில்லை. மாணவர்களின் பெற்றோரின்  விருப்பப்படி அவை நடப்பதாகச் சொன்னவர் இன்னொன்றையும் சொன்னார். ‘’வேற்றுமையை ஒழிக்க முடியாது’’

காங்கிரசில் பெரும் பிரச்சினையை உருவாக்கிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நிகழ்ந்த ஆண்டு – 1924.

தற்போது  பாஞ்சாங்குளம் பள்ளியில் சாதியப் பாகுபாட்டுப் பிரச்சினை வெளித் தெரிந்திருக்கிற ஆண்டு – 2022.

98 ஆண்டுகள் ஆகியும், சுற்றியுள்ள அரசியல், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், இன்னும் அதே பழமையான அழுக்கு மட்டும் நீடிக்கிறது கால ஓட்டத்தை மீறி.

வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

– யூகி

You might also like