தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா புருவிர்தோவாவும், போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் செக் குடியரசு வீரங்கனை லிண்டா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். 17 வயதான லிண்டா வெல்லும் முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டார் கண்டு ரசித்தனர்.