குழந்தைகளின் பசியைப் போக்க எந்தத் தியாகமும் செய்யத் தயார்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பள்ளிகளுக்கு உணவை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், கீழ அண்ணா தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து  காலை உணவை சாப்பிட்டார்.

அப்போது சிறப்பாக படித்து சமுதாயத்தில் பெரியவர்களாக உருவாக வேண்டும் என்று குழந்தைகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,

“தமிழ் சமூகத்திற்கு நல்லதொரு மாற்றத்தை தரும் சிறப்பான தொடக்கமாக பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டம் அமைந்துள்ளது.

இதனை செயல்படுத்தக்கூடிய இன்றைய நாள் எனது வாழ்விலே பொன்னாள் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ளது.

பசித்த வயிறுக்கு உணவும், தவித்த வாய்க்கு தண்ணீரும், திக்கற்றவருக்கு திசை காட்டியாகவும் இருக்க வேண்டும். இன்று செயல்படுத்தப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் காலை உணவு திட்டம் கருணை வடிவிலான திட்டமாகும்.

பசியோடு படிக்க வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்ல வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம்.

தமிழகம் தற்போது நெல் தானிய உற்பத்தியில் உச்சத்தை கண்டுள்ளது. எனவே தான் நெல்பேட்டையில் காலை உணவுக்கான சமையல் கூடத்தை அமைத்து தயாரிக்கின்ற இந்த உணவு பள்ளி குழந்தைகளை தேடிச் செல்கிறது.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகாண வேண்டும் என்பதன் தொடக்கமாகத்தான் ஆதிமூலம் பள்ளியில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளி அமைந்துள்ள இடம் கீழ அண்ணா தோப்பு. எவ்வளவு பொருத்தம் பாருங்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைத்திட வழிவகை செய்தவர் பேரறிஞர் அண்ணா.

அவரது பிறந்த நன்னாளில் காலை உணவுக்கான தயாரிப்பு கூடத்துக்கு உள்ளே சென்று பார்த்ததுடன் உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளேன்.

102 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதி கட்சியின் தலைவர் பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது ஆயிரம் விளக்கு பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக தூங்கா நகரான மதுரையில் அந்த திட்டம் வளர்ச்சி அடைந்துள்ளது.

குழந்தைகள் பசியை போக்கினால் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளின் வருகையும் அதிகரிக்கும்.

கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு காலை உணவின் தேவை அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகள் காலை உணவை ருசித்து சாப்பிடுவதை பார்க்கும்போது என் மனம் நிறைந்தது. இதயம் மகிழ்ச்சியால் திளைத்தது.

ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் எந்த காரணத்திற்காகவும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது.

குழந்தைகள் படிக்க வறுமை, சாதி தடையாக இருக்கக்கூடாது என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் நினைத்தார்கள். அவர்கள் வழியில் நான் செயல்படுத்தி வருகிறேன்.

நம் கையில் உள்ள இந்த ஆட்சியில் காப்பியத்தில் வருகின்ற மணிமேகலை கையில் உள்ள அமுதசுரபியாக நினைத்து கடும் நிதி சுமையிலும் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம்” என்று கூறினார்.

You might also like