அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 நிதியாண்டுகளில் தெரு விளக்குகளை மாற்றுவதற்கு, சந்தை விலையை விட எல்இடி விளக்குகளின் விலையை கூடுதலாக நிர்ணயித்ததால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
சோதனை முடிவில் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூ.32.98 லட்சம் பணமும் 1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 10 நான்கு சக்கர வாகனங்கள், 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேபோல், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கமும், 1.9 கிலோ தங்கமும் 8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது தகவல்கள் வெளியாகியுள்ளன.