விண்வெளி, வேற்றுகிரகவாசிகள், பிரபஞ்ச பயணம் என்று பேச ஆரம்பித்தாலே கண்ணைக் கட்டும்.
அதனாலேயே, அவை பற்றிய திரைப்படங்களில் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அது போதாதென்று விஎஃப்எக்ஸும் மிரட்டும் ரகத்தில் அமைந்திருக்கும்.
’ஏன் வெளிநாடுகளில் மட்டும்தான் ஏலியன் பற்றி படமெடுப்பார்களா, அது நம்மால் முடியாதா’ என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.
’ஓடுங்க அதுங்க வந்துருச்சு’ என்ற வசனங்களை டப்பிங் படங்களில் மட்டும்தான் கேட்க வேண்டுமா என்ற எண்ணத்தில் ‘கேப்டன்’ படத்தைத் தந்திருக்கிறார்.
ஏற்கனவே ஜோம்பிகளையும் விண்வெளி பயணத்தையும் தமிழில் திரைப்படமாக எடுத்தவர் ஆயிற்றே என்று படம் பார்க்க ஆரம்பித்தால், இறுதியில் நாம் மிரண்டு போய் வெளியில் வருகிறோம். அது எத்தகைய மிரட்சி என்பதுதான் மையப்புள்ளி.
பாசக்கார ‘பாய்ஸ்’!
வடகிழக்கு மாநில எல்லையோரத்தில் இருக்கும் ராணுவப்படையொன்றில் கேப்டன் ஆக பணியாற்றுகிறார் வெற்றிச்செல்வன் (ஆர்யா).
சிறுவயதிலேயே பெற்றோரால் ராணுவப் பள்ளியில் விடப்பட்டு ஆதரவற்றவராக வளர்ந்தவர்.
வெற்றியின் குழுவில் கார்த்தி தேவன் (ஹரிஷ் உத்தமன்), கர்ணன் (கோகுல்ராஜ்) மற்றும் இன்னொரு வீரரும் (ராஜ்பரத்) ரேகா (காவ்யா ஷெட்டி) என்றொரு பெண்ணும் இருக்கின்றனர்.
அந்நால்வரையும் தனது நண்பர்களாகவும் உறவுகளாகவும் எண்ணுகிறார். அந்த ‘பாசக்கார பாய்ஸ்’, வெற்றியை ஒரு தெய்வம் போலவே போற்றுகின்றனர்.
சீன, நேபாள எல்லையோரத்தில் இருக்கும் செக்டர்-42 எனும் பரப்பில் வினோத நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்பட, அவ்விடத்தைக் கண்காணிக்கச் சென்ற ஒரு ராணுவக் குழு மர்மமான முறையில் கொல்லப்படுகிறது.
அதில் இடம்பெற்ற ஒரு நபரே மற்றனைவரையும் கொன்றதாகத் தரவுகள் கிடைக்கின்றன.
இதையடுத்து, அந்த இடத்திற்கு வெற்றியின் குழு செல்கிறது. அப்போது, கார்த்தி தவிர மற்ற நால்வரும் மயக்கமுறுகின்றனர். வெற்றி கண் விழிக்கும்போது, அவரை சுட முயல்கிறார் கார்த்தி.
வேண்டுமென்ற குறியைத் தவறவிட்டவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போகிறார். அந்த நிகழ்வு முற்றிலுமாக வெற்றியின் உடலையும் மனதையும் பாதிக்கிறது.
மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று என்ன நடந்தது என்று அறிய விரும்புகிறார் வெற்றி. ஆனால், ராணுவ தலைமை அதற்கு ஒப்புக்கொள்வதாக இல்லை.
இந்த நிலையில், டாக்டர் கீர்த்தி (சிம்ரன்) தலைமையில் ஒரு குழு செக்டர் – 42வில் ஒரு ஆய்வகத்தை அமைக்க முயற்சிக்கிறது.
அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க வெற்றியும் அவரது குழுவினரும் அந்த இடத்திற்கு மீண்டும் செல்கின்றனர்.
அப்போது, ஒரு வினோதமான விலங்கு அங்கு இருப்பதைக் கவனிக்கின்றனர். அது போன்று ஒரு கூட்டமே இருப்பதைக் கண்டு மிரள்கின்றனர்.
அதன்பிறகு, செக்டர்-42வை மீட்க வெற்றியும் அவரது குழுவினரும் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதைச் சொல்கிறது ‘கேப்டன்’.
மிரண்டுதான் போகிறோம்!
என்னதான் கைகளை கட்டிக்கொண்டு, கழுத்தை திருப்பாமல் ஒரு எந்திரம் போல படம் முழுக்க வந்தாலும், சிற்சில இடங்களில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நாயகனை நினைவுபடுத்துகிறார் ஆர்யா. அதுவே, அவருக்கான ஏரியா எதுவென்பதையும் சட்டென்று காட்டுகிறது.
நாயகியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, ஒரு மெலடி பாடல் வீணாகிவிடுமே என்ற நோக்கில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்.
அவரது பாத்திரத்திற்குப் பின்னிருக்கும் ட்விஸ்டை திரையில் காணும்போது ‘யப்பா டேய், இதுதானா உங்க டக்கு’ என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆர்யாவின் குழுவில் இருப்பவர்களில் ஹரிஷ் உத்தமனுக்கு கௌரவ வேடம் தான்.
கோகுல்ராஜ், ராஜ் பரத் இருவருமே கட்டுமஸ்தான உடலமைப்பை காட்ட சண்டைக்காட்சிகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
இவர்களது குழுவில் ஒரே பெண்ணாக இடம்பெற்றிருக்கும் காவ்யா, திரையில் விறைப்பாக நின்று முறைப்பை வெளிக்காட்ட வேண்டுமா அல்லது வசனங்களுக்கு ஏற்றவாறு நடிக்க வேண்டுமா என்ற குழப்பத்திலேயே படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.
விஞ்ஞானியாக வரும் சிம்ரனை மட்டுமல்ல, அவருடன் ஒட்டிக்கொண்டு திரியும் கோகுல் ஆனந்துக்கும் நடிப்பில் ஸ்கோர் செய்ய பெரிதாக ஸ்கோப் இல்லை.
இவர்கள் தான் இப்படி என்றால், ‘என் நிலைமை படுமோசம்’ என்பது போலவே மினோட்டா என்றழைக்கப்படும் அந்த வினோத உயிரினங்கள் திரையில் தோன்றுகின்றன.
அவை துப்பும் எச்சிலால் மனிதர்கள் அனைவரும் மயக்கமுறுகின்றனர். அப்படியே நம்மையும் பார்க்கின்றன. படம் பார்த்து முடிந்ததும் அதன் அர்த்தம் நமக்குப் புரிகிறது.
காடும் காடு சார்ந்த இடங்களிலும் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு சுற்றிச் சுழன்றிருக்கிறது. ஆனால், விஎஃப்எக்ஸ் எல்லை எதுவென்று தெரியாமல் தடுமாறியிருக்கிறது.
படத்தின் நீளத்தை பார்க்கும்போது, அந்த வினோத உயிரினம் போன்றே படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் படத்தில் நடித்தவர்களைப் பார்த்து மிரண்டிருப்பாரோ என்று தோன்றுகிறது.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்ட உணர்வை ஏற்படுத்துகின்றன. அதேநேரத்தில், பின்னணி இசை திரைக்கதை பயங்கர ப்ரெஷ்’ ஆக இருக்குமென்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதை மறுக்க முடியாது.
அது நிகழவே நிகழாது என்று தோன்றும்போதுதான் அவரது இசை குறித்த கவனம் நமக்குள் தோன்றுகிறது. அதுவே அவரது வெற்றி.
மினி பட்ஜெட்டில் பிரமாண்டம்!
மிகக்குறைந்த பட்ஜெட்டில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ’ஜாஸ்’ படத்தை உருவாக்கியதாகச் சொல்வார்கள். கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமல்ல, வினோதமான உயிரிகள், வேற்றுகிரகவாசிகளை வைத்து கூட பல படங்கள் உலகம் முழுவதும் வந்திருக்கின்றன.
அவற்றில் பிரமாண்டம் இருந்தாலும், அதையும் மீறி திரைக்கதையில் சுவாரஸ்யமும் திருப்பங்களும் நிறைந்திருக்கும்.
ஆனால், அப்படிப்பட்ட படங்களில் ‘டெம்ப்ளேட்’ ஆக என்னவெல்லாம் இருக்குமோ அதையெல்லாம் ஒருங்கே கொண்டிருக்கிறது ‘கேப்டன்’.
கிட்டத்தட்ட ‘வானத்தைப் போல’ படத்தில் தன் தம்பிகள் நனையாமலிருக்க இரவு முழுவதும் விஜயகாந்த் குடையைப் பிடிப்பாரே, அப்படி தன் குழுவினரை கண்ணின் இமை போல காக்க முயல்கிறார் கேப்டனாக வரும் ஆர்யா. அவர்தான் தயாரிப்பாளரும் கூட..!
ஆர்னால்டு நடித்த ‘பிரிடேட்டர்’ படத்தில் கூட வேற்றுக்கிரக உயிரினத்தை மிகச்சில காட்சிகளில் மட்டுமே காண்பித்திருப்பார்கள்.
அதுபோல, விஎஃப்எக்ஸை சிக்கனமாகவும் தரமாகவும் பயன்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யாததால், மினோட்டாவைக் கண்டு மிரளவே தோன்றவில்லை.
பழைய படங்களில் சாதாரண மனிதர்களுக்கு நடுவே அனிமேஷன் பாத்திரங்கள் வந்து போவது போலவே அக்காட்சிகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மைனஸ்.
அதிலும் கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்தால் சீன, ஜப்பான் நாடுகளில் எடுக்கப்பட்ட ‘காட்ஸில்லா’ வகையறா திரைப்படங்கள் கண்ணில் வந்து போகின்றன.
ஹாலிவுட் படங்களைப் போலவே தமிழிலும் ஜாம்பி, விண்வெளி, டிராகுலா, வினோத உயிரினங்கள், ஏலியன்களை காட்டுவதில் தவறில்லை.
அதற்கேற்ற வகையில் திரைக்கதையில் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் சேர்ந்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாத காரணத்தால், ஏதோ மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை வேடிக்கை பார்ப்பது போல இப்படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒரு படம் பெருவெற்றி பெற அது கண்டிப்பாக உதவாது. அடுத்த படத்திலாவது என்ன ‘வகைப்பாட்டில்’ கதையை உருவாக்குவது என்று யோசிக்காமல்,
ஒரு கதையை எழுதியபிறகு அதற்கு என்ன ‘ட்ரீட்மெண்ட்’ கொடுக்கலாம் என்று யோசிப்பது இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுக்கும் நமக்கும் நலம் பயக்கும்!
– உதய் பாடகலிங்கம்