சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.

மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் அவர்.

தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும் பரிசளிக்கப்பட்டது.

இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்த்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சம், மூத்த ஓவிய கலைஞர் ராமுவுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன்.

என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன்” என்றார்.

அகரம் ஃபவுன்டேஷன் பொருளாளர் நடிகர் கார்த்தி, “இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளில் மூலம் அறிந்திருக்கிறோம்.

இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளில் 4750 மாணவ மாணவியர்க்கு கல்லூரிக் கல்வி வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

அகரம் தொடங்கப்பட்ட பொழுதும், விதைத் திட்டத்தின் பதிமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய பொழுதும் ஒவ்வொரு பணிகளில் உச்சபட்ச வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறோம்.

கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது அகரம்.

40 ஆண்டுகளாக எங்கள் தந்தை தொடர்ந்து நடத்தி வந்த இந்தக் குடும்ப விழாவை கடத்த இரண்டு ஆண்டுகளாக நடத்த இயலவில்லை.

இருப்பினும், களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது.

அசாதாரண சூழலில் எளிய குடும்பங்கள் எதிர்கொண்ட சிரமங்களை சிறு அளவிலாவது குறைத்திடும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

விழா நிகழ்வை அகரம் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளங்கலை வேளாண் அறிவியல் படித்து வரும் தன்ராஜ், சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்துவரும் ஸ்ரீமதி தொகுத்து வழங்கினர்.

பேராசிரியர் கல்யாணி மற்றும் அகரம் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பா. மகிழ்மதி

You might also like