– சிவாஜியின் தொடக்க கால நெகிழ்ச்சியான அனுபவம்
“அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும்.
திருச்சியின் ஒரு பகுதியான சங்கிலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன்.
அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும். நாடகம், கூத்து என்றால் இனிக்கும்.
அந்தச் சமயம் கூத்து நடத்தும் குழு எங்கள் ஊரில் முகாமிட்டிருந்தது. இரவு ஊரடங்கிய பின்னர் கூத்து ஆரம்பித்து நடத்துவார்கள்.
போலீசாருக்குப் பயந்து கட்டபொம்மன் கதையைத் தான் நடத்துவார்கள்.
நாட்டுப்பாடலாக, ஒரே மாதிரியான மெட்டில் பாட்டுக்கள் அமைந்திருக்கும்.
நான் பார்த்த முதல் கூத்து அது தான்.
இரவு கூத்து ஆடியவர்கள் காலையில் தண்டலுக்கு வருவார்கள். அப்போதெல்லாம் காசுக்கு அவ்வளவாக மதிப்பு கிடையாது. அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் – இப்படி எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள், அப்படி வந்தவர்களில் ஒருவரை நான் சிநேகம் பிடித்துக் கொண்டேன்.
அவர்கள் நடத்தி வந்த கூத்தில் எனக்கு ஏதாவது ஒரு வேஷம் வாங்கித் தருமாறு கேட்டேன். அவரும் மனம் இரங்கினார்.
கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளையர் சிப்பாய்களில் ஒருவனாக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அப்போதும் எனக்கு கட்டபொம்மனின் வீரர்களில் ஒருவனாக நடிக்க முடியவில்லையே என்று எனக்கு மனக்குறை தான். இருந்தாலும் நான் முதன் முதலில் மேடையேறிய சந்தர்ப்பம் அது தான். நான் பார்த்த கட்டபொம்மன் கூத்து தான் என்னைக் கலையுலகுக்கு இழுத்து விட்டது என்று சொல்லலாம்”
– 10.1.1960 – தேதியிட்ட ‘குமுதம்’ இதழில் சிவாஜி அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.