மனசுக்குச் சரின்னு பட்டதைத் தைரியமாச் செய்யணும்!

– நடிகை பானுமதி

‘பத்மஸ்ரீ’ டாக்டர்.பானுமதி ராமகிருஷ்ணா – புகழ்பெற்ற நடிகை, திரைப்பட இயக்குநர், சங்கீத இயக்குநர், பாடகி, எழுத்தாளர் 70 வயதாகும் பானுமதிக்கு இந்த வர்ணனைகள் எல்லாம் ஒட்டாமல் நிற்கும் காகிதப் பரிமாணங்கள்.

ஏனென்றால் இத்தனை ஆற்றல்களையும் மிக லேசாகச் சுமந்து அனாயாசமாகச் செயல்பட்டு, தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து வரும் அசாதாரணப் பெண்மணி என்பது அவரது பேச்சில் வெளிப்படுகிறது.

இத்தனை ஆற்றல் கொண்ட ஒரு ஆண் நடிகர் இருந்திருந்தால் அவரை உலகம் நடத்தியிருக்கும் விதமே வேறாக இருந்திருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பழமைவாத சமூகத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து இத்தனை வேலைகளையும் செய்த பெண் நடிகை இந்தியாவிலேயே இவராகத்தான் இருக்கும்.

தேசிய பத்மஸ்ரீ விருது, சாகித்ய அகாடமி விருது, தமிழ் இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது போன்றவை இவருடைய ஆற்றலுக்கு முன் மிக சாமான்யமாகின்றன.

இந்த வயதில் இவர் தனது வேலையில் காட்டும் உற்சாகமும் இவரது பேச்சில் இழையோடும் ஹாஸ்ய உணர்வும் ஆச்சரியமானவை.

சென்னை தியாகராய நகரில் ஆடம்பரம் இல்லாத ஒரு வீட்டில் ஏகாந்தமாக வாழ நினைக்கும் வயதில் இவர் ஒரு நிமிஷம் சும்மா இராமல் டிவி சீரியல் தயாரிப்புகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

சின்னத் திரையில் தான் எடுத்த சுயசரிதையை போட்டுக் காட்டுகையில் அவர் முகத்தில் தோன்றும் ஈடுபாடும் ஆர்வமும் சுவாரசியமானவை.
திரையில் ‘பாவூரம்மா’ என்று சொக்க வைக்கும் பாடும்போது, இப்பவும் பிசிறடிக்காத குரலில் கூடவே பாடுகிறார்.

அடுத்த காட்சியில் நகுமோ-வின் பக்தி ரசத்தில் ஆழ்ந்து விடுகிறார். மாமியாராக, நெற்றியில் திரிசூரணமும் பட்டுப் புடவையுமாக வெகு லட்சணமாக மிக இயல்பான நடிப்பில் வந்து அசத்தும் உருவத்தை மூன்றாம் மனுஷி பார்ப்பது போல ரசிக்கிறார்.

அருகில் அமர்ந்து பழைய நாட்களை அவர் நினைவு கூறுகையில் திரையில் இருக்கும் பானுமதிக்கு இந்திய சினிமா சரித்திரத்தில் நிரந்தர இடம் உண்டு என்பதோடு ஓர் அசாதாரணமான பெண்மணி என்கிற நிறைவு ஏற்படுகிறது.
அசோசியேட் எடிட்டர் வாஸந்தியுடன் இரண்டு நாள் சந்திப்பின்போது அவர் பேசிய பேச்சிலிருந்து – அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு அவரது எண்ணங்களை வெளியிடுகிறோம்.

“ஆசாரக் குடும்பத்தில் பிறந்து சினிமாத் துறைக்கு வந்தது எப்படி?’’
காத்து மழை இந்தப் பக்கம் அடிக்கப் போகுதும்பாங்க. ஆனா அது வேற பக்கம் போயிடும். அது மாதிரி தான் நானும். ஆசார குடும்பத்தில் பிறந்து எதிர்பார்க்காமல் சினிமா உலகத்துக்கு வந்தது. அது ஆண்டவனுடைய பிளான். என்னுடையது இல்லை.

பிறவியிலேயே சங்கீதம், சாகித்யம் இரண்டும் வந்துடுத்து. அப்பா நல்ல சங்கீத வித்வான். தியாகராஜருடைய பரம்பரை சிஷ்யர் கிட்ட அப்பா கத்துக் கிட்டார். அப்பா கிட்ட நான் சங்கீதம் கத்துக்கிட்டேன். எங்க அப்பாவுக்கு என்னை நல்ல சங்கீத மேதையாக்கணும்னு ஆசை.

எம்.எஸ்., டி.கே.பட்டம்மாள் மாதிரி எல்லாம் நான் வரணும்னு அப்பா ஆசைப்பட்டார். அப்ப எனக்கு 13 வயசு. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, ரொம்ப பயந்த பொண்ணா தான் இருந்தேன்.

அப்பாவுக்கு கோவிந்தராஜன்னு ஒரு சினேகிதர். அவருக்கு என்னைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். என்னை சுவீகாரம் பண்ணிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தார். அவருக்கு சி.புல்லையான்னு ஒரு சினேகிதர்.

ப்ரைட் குரூம் ஃபார் சேல் அப்படின்னு ஒரு படம் அவர் பண்ணிட்டு இருந்தார். அதில் ஹீரோயின் வேஷத்துக்கு பாடற ஒரு பொண்ணு தேடிக் கொண்டிருந்தார்.

அப்போ குடும்பத்துப் பெண்கள் யாரும் சினிமாவுக்கு நடிக்க வர மாட்டாங்க.
இந்த கோவிந்தராஜ் என்னை தன்னுடைய சினேகிதருடைய சினிமாவுல நடிக்க அனுமதிக்கும்படி எங்க அப்பா கிட்ட சொன்னாரு.
எங்கப்பா முடியவே முடியாதுன்னு சொன்னார்.

எங்க அம்மாவுக்கு சுத்தமாக இஷ்டமில்லை. எனக்கு பயம். ஆனா அந்த கோவிந்தராஜ் எங்க அப்பாகிட்ட பக்குவமாப் பேசி பயத்தை தெளிவிச்சார்.
இதால குடும்பப் பெயருக்கு எந்த ஆபத்தும் வராது; அவள் நடிக்கவே வேண்டாம். சும்மா வீட்ல இருக்கிற மாதிரி இருந்தா போதும் அப்படின்னு சொன்னார்.

கடைசியில அப்பா என்னை புல்லையாகிட்ட அழைச்சிட்டுப் போனார். எனக்கு அங்க பாடவும் இஷ்டமில்லை. நடிக்கும் இஷ்டம் இல்லை. அவங்க வற்புறுத்தினதால ஒரு ‘சக்குபார்’ பாட்டு பாடினேன்.

அவர் உடனே இந்தக் கேரக்டருக்கு இவ தான் பொருத்தம்னு செலக்ட் பண்ணிட்டார். எனக்கு அய்யோ ஸ்கூலுக்குப் போக முடியாதே, ஃப்ரியா இருக்க முடியாதேனு கவலையாப் போச்சு. அப்பா, நடிக்க இஷ்டமில்லைன்னு சொல்லி அழுதேன்.

உனக்கு இஷ்டம் இல்லைனா விட்டுடுன்னு அப்பா சொல்ல, நாங்க கிளம்பிட்டோம்.
அவங்க திரும்பத் திரும்ப ஆள அனுப்பிச்சு ஒரு படத்தில மட்டும் பண்ணச் சொல்லுங்க அப்படின்னு கேட்டாங்க.

என்னுடைய அப்பா கும்பகோணத்தைச் சேர்ந்த மாஸ்டர் சீவிவி உடைய சிஷ்யர். என்னை அவர்கிட்ட அழைச்சுட்டுப் போய் இவளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு, சினிமாவில நடிச்சா கல்யாணம் ஆகுமா, ஆகாதா, என்னுடைய மனைவியும் பிள்ளைகளும் ரொம்பவும் பயப்படுறாங்க அப்படின்னு தன்னுடைய குழப்பத்தைத் தெரிவிச்சார்.

“என்னுடைய உறவுக்காரப் பொண்ணு சூரியகுமாரி கூட சினிமாவில் நடிக்கிது. அதனால சினிமாவுல போறது ஒன்னும் தப்பில்லை. தைரியமா நுழைய விடு” என்று குரு சொன்னார். ஆனால் அவளை கண்ணுக்கு இமைபோல பார்த்துக்க அப்படின்னார்.

அவர் சொன்ன பிறகுதான் அப்பா என்னைத் தைரியப்படுத்தி கல்கத்தாவுக்கு ஷூட்டிங்க்காக அழைத்துப் போனார். நினைச்சாலும் இப்ப சிரிப்பு வருது.
அக்ரிமெண்ட் போடும்போது எங்க அப்பா, ஹீரோ என் பெண்ணைத் தொடக்கூடாது, கட்டிப் பிடிக்கக் கூடாது கொஞ்சம் தள்ளி தான் நிக்கணும் – அப்படி எல்லாம் கண்டிசன் போட்டார்.

“இஷ்டமில்லாமல் நுழைந்த சினிமா உலகத்தில் தொடர்ந்து இருந்தது எப்படி?’’
முதல் படத்துல நடிச்சதனால மானம் கப்பலேறிடலை அப்படின்னு எல்லாருக்கும் தைரியம் வந்தது. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாம போச்சு. எனக்குக் கல்யாணம் பண்ணிடனும்னு நினைச்சார். அப்போ ஒரு கிழவன் மூன்றாம் தாரமாக என்னைக் கல்யாணம் பண்ணிக்க வந்தார்.

அப்பறம் என்னைப் பார்த்துட்டு என் பேத்தி மாதிரி இருக்கான்னு போயிட்டார். அப்பறம் பி.ஏ., படிச்ச ஒருத்தன் வந்தான்.

ஆனா அவனுக்கு வேலை இல்லை. இப்படி நிறையப் பேர் வந்து வந்து ஒண்ணும் அமையல. முதல் படத்தில நான் பிரபலம் ஆயிட்டதால மெல்ல மெல்ல ‘செலக்டட் ரோல்’ல நடிக்க ஆரம்பிச்சேன்.

இஷ்டமில்லாமல் நடிக்க ஆரம்பிச்சாலும், எதை செஞ்சாலும் சரியாச் செய்யணும் அப்படிங்கிறது என்னுடைய குறிக்கோள். எந்தக் கேரக்டராக இருந்தாலும் சரி, அந்த கேரக்டருக்குள் புகுந்து என்னால முடிந்த அளவு உசத்தியா செய்வதற்கு முயற்சி பண்ணுவேன்.

எந்த பிக்சர்லயும் ஸ்கிரீன்பிளே விஷயத்துல டைரக்டர் எனக்கு உதவி ஒத்துழைச்சு தான் ஆகணும். சில சமயம் கதையே கூட நான் மாத்தியிருக்கேன்.

உதாரணமா ‘மண்வாசனை’ என்கிற படம். தெலுங்குல ‘மங்கம்மா மனவாடு’ன்னு எடுத்தாங்க. அது எண்ணூறு நாளைக்குப் போச்சு. ஏன்னா நான் அந்தக் கதையையே மாத்திட்டேன். அதை அப்படியே எடுத்திருந்தால் ஒரு நாளைக்குக் கூட ஓடி இருக்காது.

அந்தக் கதாபாத்திரத்தையே மாத்தி ரொம்ப வலுவானதா ஆக்கிட்டேன். எந்தத் தொழில் பண்ணினாலும் கவுரவமா, கம்பீரமா இருக்கிறது நம்ம கையிலதான் இருக்கு. அதுக்காக வாயாடியா இருக்கணும் சொல்லல.

நடைமுறையில் எல்லோரும் என்னைப் பார்த்து பயப்படுவாங்க. ஏன்னு எனக்குப் புரியல. யாரும் என் பக்கத்துல ரொம்ப நெருக்கமா வர்றதுக்கு அனுமதிக்காததும் ஒரு காரணம்.

நான் பணத்துக்காக இந்த ஃபீல்டுக்கு வரலைங்கிறது என்னுடைய பலம். என்னுடைய சொந்த வாழ்க்கைக்குத் தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன்.

யாரோடவும் ரொம்ப நெருக்கமாகப் பழக மாட்டேன். ஷாட் முடிஞ்ச உடனே என்னோட ரூம்ல போய் உட்கார்ந்து விடுவேன். என்னை ராங்கிக்காரின்னு கூட சில பேர் சொல்வாங்க. எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை.
“ஒரு மனைவியாக, ஒரு மருமகளாக…’’

டைரக்டர் ராமகிருஷ்ணா என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்பியபோது எனக்கு 17 வயசு. அவர் ரொம்ப அறிவாளி. அவர் பார்க்க அழகானவர் இல்ல. ஆனா அவருடைய உள்ளம் உலகத்தில உள்ள எல்லா அழகானவர்களுடைய உள்ளதைக் காட்டிலும் உயர்ந்தது.

ரொம்பவும் என்னைப் புரிஞ்சிண்டு அனுசரணையா இருப்பார். எங்க அப்பாவுக்குப் பிறகு எனக்கு அப்பா, கணவர் எல்லாம் அவர் தான். ரொம்பவும் எளிமையானவர். ரொம்பப் பெருசா சாதிக்கனும்கிற பேராசை எல்லாம் கிடையாது. எனக்கும் அப்படித்தான். அதனால தான் எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போச்சு.

யாராவது என்னை ரொம்பவும் பாராட்டினா அவர் வாயே திறக்காமல் அதை ரசிப்பார். என்னை ரொம்பவும் ஊக்கப்படுத்துவார்.

எனக்கு 1966-ல் ‘பத்மஸ்ரீ’ விருது கிடைச்சப்போ, நிறையப் பேர் நான் அரசியல்ல நுழையணும்னு சொன்னாங்க. தேர்தல்ல நின்றிருந்தா அப்ப எனக்கு இருந்த பாப்புலாரிட்டிக்கு நிச்சயமா ஜெயிச்சிருப்பேன். செண்ட்ரல் மினிஸ்டராக் கூட வந்திருப்பேன்.

ஆனா எனக்கு இஷ்டமில்லை. என் கணவருக்கும் இஷ்டமில்லை. அரசியலுக்குப் போனா வீட்ல இருக்குற நிம்மதி போய்டும். அவரும் அப்படித்தான் நினைச்சார்.

அதே மாதிரி மாமியாருக்கும் எனக்கும் எந்தவித டென்ஷனும் கிடையாது. மாமியாரும் நானும் சினேகிதிகள் மாதிரி பழகுவோம். என்னுடைய ஷூட்டிங்கிக்கு எல்லாம் வெளியூர் போகும்போது அவர் தான் கூட வருவார்.

57 வருஷமா சினிமாவில் நடிக்கிற மாதிரி 56 வருஷமா கதையும் எழுதறேன். அனேகமா நான் எழுதறதெல்லாம் எங்க மாமியாரை வச்சி எழுதற கதைகள். அத்தைக்காரு கதாலுங்கிற கதைக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சது.

வீட்ல ஏதாவது நடக்கிற ஒரு சின்ன விஷயத்தை வச்சு நான் ஹாஸ்யமா எழுதுவேன். எனக்கு ஹாஸ்யம் ரொம்பப் பிடிக்கும். அது தான் தாமரை இலையில் இருக்கிற தண்ணீர் மாதிரி வாழ்க்கை வாழ எனக்கு கற்றுக் கொடுத்தது.
என்னுடைய சுய சரிதையைக் கூட ‘தாமரை இலையில் தண்ணீர் துளி’ என்ற தலைப்பு வைச்சு எழுதியிருக்கேன்.

“பட இயக்குனராக…’’

ஒரு ஜோசியர் வந்து என் கையைப் பார்த்து நீங்க நிச்சயமா சினிமா டைரக்டராவீங்கன்னு ஒருமுறை சொன்னார். அது ரொம்ப ஆச்சரியமான விஷயம்.

ஏன்னா எனக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லை. மெகபூப் ஜான்சி ராணி படம் எடுக்க முனைந்தபோது எனக்கு அந்தப் படத்தில நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.

ஆனா அதுல நான் நடிக்க முடியாமல் போனது. அதனால் ‘சண்டிராணி’ எடுத்தேன். ஒரு டபுள் ரோல் ஆக்ட் பண்ணனும்னு ஆசை வந்தது.

அந்தப் படத்தை என் கணவர் டைரக்ட் பண்ணணும்னு அவர் கிட்ட கேட்டேன். அப்பத் தான் எங்க சொந்த ஸ்டூடியோ கட்டுவதில் அவர் ரொம்ப பிசியா இருந்தார்.

எனக்கு நேரம் இல்ல, நீயே டைரக்ட் செய்யேன்னார். இரண்டு வேஷத்தை நடிச்சு, டைரக்டும் எப்படி செய்யறதுன்னு நான் பயந்தேன். ஆனா சமாளிச்சு டைரக்ட் செஞ்சேன். ஏதாவது சந்தேகம் இருந்தா என்னை வந்து கேளுன்னார். ஆனா எனக்கு சுய கௌரவம் ஜாஸ்தி. அவர் கிட்ட எதுவும் கேட்கல. தனியாவே டைரக்ட் செஞ்சு முடிச்சேன்.

படம் நல்லா வந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ வந்ததாலே வசூல் பாதிச்சது. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை டைரக்ட் செஞ்சிருக்கேன் அதில் பத்தாவது வெற்றியடைஞ்சிருக்கு.

“மற்ற நடிகர்களைப் பற்றி, இன்றைய சினிமா உலகத்தைப் பற்றி..’’.
சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் பெரிய கலைஞர்கள். எம்.ஜி.ஆரோட ‘அழகான பொண்ணுதான்’ பாட்டு பண்ணிட்டு இருக்கும்போது தான் சிவாஜி செட்டுக்கு வந்தார்.

அப்ப என் நடிப்பைப் பார்த்து “ஐயோ, அந்தப் பொண்ணோட ஒரு ரோலாவது பண்ணனும்”னு சொல்லிட்டு இருந்தார்.

கேமரா மேன் வந்து “உங்க கூட சிவாஜி சார் ஆக்ட் பண்ண ஏங்கறார்”ன்னு சொன்னார். அப்படித்தான் முதன்முதலா அறிமுகமாச்சு.

எம்.ஜி.ஆரோடு நடிக்கும்போது ஒரு விஷயம் ஞாபகம் இருக்கு. கோயம்புத்தூரில் ஷூட்டிங் முடிஞ்சு கள்ளக்குறிச்சி போவதற்கு நானும் என்னுடைய மாமியாரும் தயாராகிக்கிட்டு இருந்தோம்.

அப்ப எம்.ஜி.ஆர் “கள்ளக்குறிச்சிக்கு ராத்திரியில போறது நல்லா இல்ல; திருட்டு பயம்” என்று சொல்லி விட்டார். ரொம்பவும் பயந்து போய்ட்டோம். கடைசில எம்.ஜி.ஆர்., சிரிச்சிகிட்டே “சும்மா சொன்னேன், பயப்படாதீங்க, தைரியமாப் போங்க”ன்னு சொன்னார்.

அதுக்கேத்த மாதிரி நாங்க கள்ளக்குறிச்சி நெருங்கிற சமயத்தில ஏழெட்டு பேர் கையில கொம்போடா எங்களுக்கு முன்னால போயிட்டு இருந்தாங்க. நானும் மாமியாரும் பயந்து செத்தோம். கடைசில அவங்க சாதாரணமாப் போயிக்கிட்டு இருந்தவங்கன்னு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் ஒரே சிரிப்பு.

அப்ப எல்லாம் ஹீரோயின் ஓரியண்டட் படம் அதிகம். ஆனா ஹீரோயின் பாத்திரத்துக்கு ஜாஸ்தி அழுத்தம் இல்லாமப் போனலும் சில சமயங்களில் நான் என்னுடைய நடிப்பினாலே அழுத்தம் கொடுத்திருக்கேன்.

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் என்னுடைய ரோல் அதிகமாகப் பேசப்பட்டது. இப்ப வர படங்களில் ஹீரோயினே இல்ல. செக்ஸ்சும் வயலன்சும் அதிகமா இருக்கிறதனால ஹீரோயின்களுக்கு வேலை இல்லாமல் போயிட்றது.

இப்பவும் நல்ல நடிகைங்க இருக்காங்க. ரேவதி, நதியா, ஊர்வசி, ரோஹிணி, சுகாசினி எல்லோரும் நல்லாப் பண்றாங்க. ஹீரோயின் ஓரியண்டட் படம் பண்ணினா நல்லா வரும்.

“சினிமாவில் இருந்து சின்னத் திரைக்கு பிரவேசம்..”
என்னால சும்மா இருக்க முடியாது. 13 வயசுல இருந்து வேலை செய்கிறேன். இப்பவும் ஏதாவது செய்யணும். அதனால டி.வி படங்கள் நிறைய எடுக்கிறேன்.

மாமியார் கதைகள் இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரிச் செய்யறேன். அதிலே நானே நடிக்கிறேன். வேலை செய்யும்போது உற்சாகமாக இருக்கு.

“பெண் விடுதலை…”

பெண்கள் சுதந்திரம் பற்றி பேசுவதெல்லாம் சுத்த முட்டாள்தனம். பெண் ஒரு சக்தியின் சுயரூபம். அவளே ஒரு சுவதந்திரி. அவளுக்கு இருக்கிற சுதந்திரம் யாருக்கும் இல்ல.

பெண் பிறக்கும்போதே தாயாப் பிறக்குறா. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜென்மம் கொடுக்கிறதே பெண்தான். அவள் ஒரு மகா சமுத்திரம் மாதிரி. யாருமே அவளைத் தடுக்க முடியாது, ஆண்பிள்ளை உள்பட.

மனசுல தைரியம் இருக்கணும். மனசுக்கு எது சரின்னு படறதோ அதை தைரியமாச் செய்யணும். ஆத்ம சுத்தி இருந்தாதான் தைரியம் வரும்.

புருஷன் அடிக்கிறான்னா பயப்படாதே. திருப்பி அடி. குடிச்சி எல்லாத்தையும் நாசம் பண்றானா? வீட்டை விட்டுத் துரத்து. எல்லாத்தையும் எதிர்த்து சமாளிக்கக் கூடிய பெண்கள் இருந்தா ஆண்கள் பயப்படுவாங்க.

“நினைவோட்டத்தின் முடிவில்…”

காலம் மாறுது. அதைப் பார்த்து சிரிச்சுகிட்டே போயிடனும். இந்த பானுமதியைப் பற்றி ரொம்ப பேருக்குத் தெரியாது. எனக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. நான் பூஜிக்கிற அம்பாள் தான் எனக்கு அனுக்கிரகம் செஞ்சிருக்கா.

எனக்குத் திருப்தியான வாழ்வு ஒண்ணு தான் தேவை. என்னுடைய கணவரோட எண்ணமும் அதுதான். பேராசைகள் இல்லாத திருப்தியோட இருந்தா, அதைவிட நிம்மதி வேற ஒன்னுமில்லை.

பெரிய பெரிய பட்டங்கள், விருதுகள் இதெல்லாம் இன்னும் கிடைச்சிருக்கணும்னு சில சமயம் சினேகிதர்கள் சொல்வாங்க. எனக்கு எதுவும் தேவை இல்லை. நான் திருப்தியா இருக்கேன்.

  • நன்றி: 1996 ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் வாஸந்தி எழுதிய கட்டுரை…
You might also like