என் நாட்டை இழக்க மாட்டேன்!

 – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.

இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.

பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அங்கு நடைபெற்று வரும் வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் பொதுமக்களுடன் பங்கேற்றார்.

பின்னர் நினைவிட நுழைவு வாயில் பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.

மாலை 4.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

இதனிடையே, தந்தையின் நினைவு குறித்து ராகுல் காந்தி உருக்கமான பதிவொன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

“வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

You might also like