எம்.ஜி.ஆருக்கு ஆபரேஷன் நடந்த இடம்!

– இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலத்தின் கல்லூரிக் காலம்

இந்தியாவின் தலைசிறந்த ‘கார்டியாலஜி’ நிபுணர்களில் ஒருவர். பத்மஸ்ரீ, பி.சி.ராய் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான டாக்டர் எஸ். தணிகாசலம்.

அவரது சாதனைப் பட்டியல் நீளமானது. அவ்வளவு பிஸியாக இருந்த போதும் ‘கல்லூரி நினைவுகள்’ என்றதும் உற்சாகம் தொற்றிக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்குக் கிளம்பி வந்தார்.

150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கல்லூரி. செங்கல் நிறத்திலான அந்தக் காலத்தியக் கட்டிடங்கள். விரிந்த விளையாட்டு மைதானம். நூற்றாண்டு நினைவுத் தூண்.

முதுமையான மரங்கள் என்று கல்லூரிக்குள் சின்ன ரவுண்ட் போனதுமே அவருடைய முகத்தில் பரவச ரேகைகள். பேச்சில் இளமையின் வேகம்.

“சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் அப்போது எங்களுடைய வீடு இருந்தது. பள்ளியில் நான் படித்து முடித்த பிறகு பி.யு.சி.யை அப்போது தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். நாங்கள் முதல் ‘செட்’. பச்சையப்பன் கல்லூரியில் முதலில் படித்தோம்.

என்னுடைய பாட்டி ஆஸ்துமா நோயாளி. அடிக்கடி மூச்சிரைக்கும். நான்தான் ஓடிப்போய் டாக்டரை அழைத்துக் கொண்டு வருவேன். “நீயாவது டாக்டரா ஆகணும்டா” என்று அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார் பாட்டி.

எங்கள் உறவினரான டாக்டர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து, வெள்ளைக் கோட் போட்டுக் கம்பீரமாகப் போவதை எங்க தாத்தா வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்.

“துட்டு இருந்தாலும் வெளியே காட்டிக்காம எப்படி அடக்கமா நடந்து போறான் பாரு… அவனை மாதிரி வரணும்” என்று என்னிடம் அவர் சொல்வார். அவர்தான் என்னை வளர்த்தார்.

இதெல்லாம் என்னுடைய மனசில் விழுந்து டாக்டர் படிப்பின் மீது ஒரு வித மோகத்தை ஏற்படுத்தியிருந்தன.

பி.யூ.சி. தேர்வில் பயாலஜியில் நல்ல மார்க் வாங்கி இருந்தேன். மார்க்கை வைத்து மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தேன்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் ‘செலக்சன்’. தமிழகம் முழுக்க இருந்து மாணவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 100 சீட்கள் தான்.

அப்போது மருத்துவக் கல்லூரிப் படிப்பு பலருக்கு எட்டாக்கனியாக இருந்த நேரம். நான் ‘செலக்ட்’ ஆனதும் என் பெற்றோருக்கும், தாத்தாவுக்கும் கூடுதல் சந்தோஷம். தமிழ் மீடியத்தில் படித்தவன் எப்படிப் படிக்கப் போகிறானோ என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம்.

ஐரோப்பியர்களே வியக்கும் அளவுக்கு ஆங்கிலத்தில் பேசிய ஏ.எல்.முதலியார் மாதிரி நான் வர வேண்டும் என்று விரும்பினார்கள். எங்களுடைய குடும்பத்திற்கு அவர்தான் அப்போது ரோல்மாடல்.

இதோ பாருங்க.. இது தான் அவருடைய சிலை. இது இங்கே இருக்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” புன்னகையுடன் சொல்கிறார் தணிகாசலம்.

“கல்லூரிக்குப் போனதும் முதலில் மிரண்டு விட்டேன். அதுவரை ஆங்கிலத்தில் வாசிப்பேன் எழுதுவேன். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்குச் சற்றுத் தயக்கமாக இருக்கும். அதனாலேயே சிலரிடம் பேசுவதைக் குறைத்தேன்.

நான்கைந்து மாதங்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டது. பல மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கும் மாணவர்களுடன் இயல்பாகப் பேசிப் பழக ஆரம்பித்து விட்டேன்.

கல்லூரியில் கோ-எஜூகேஷன். பெண்களுடன் அதுவரை பேசுவதற்கே கூச்சப்பட்டு கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் மிரட்சியாக இருந்தது.

கல்லூரிக்கு என்னைக் காரில் தான் அழைத்துப் போவார்கள். மாலை நான்கரை மணி ஆனதும் சரியாக என்னை காரில் திரும்பவும் அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். கடுமையான கட்டுப்பாடு.

கல்லூரி நண்பர்கள் எல்லாம் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். வீட்டில் ரொம்பவும் வாதாடியதற்குப் பிறகே என்னை பஸ்ஸில் அனுப்பினார்கள். எனக்கு ஓரளவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. மற்ற நண்பர்களுடன் பேச நேரம் கிடைத்தது.”

– பேசியபடியே போய்க் கொண்டிருந்தவர், காவி படிந்ததைப் போன்ற நிறத்திலிருந்த கட்டிடத்தைக் காட்டியபடி சொன்னார்.

“இது தான் எங்களுக்கு அனாடமிக் வகுப்புகள் நடந்த இடம். இதிலே எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா?

அனாடமி வகுப்பு எங்களை ஆச்சரியப்படுத்திய முதல் இடம். முதலில் இந்த வகுப்பிற்குள் நாங்கள் நுழைந்து ஒரு பதப்படுத்தப்பட்ட சடலத்தை ஆராய்ச்சிக்காகப் பார்க்கிற போது, என்னுடன் வந்த 4 பேர் மயங்கி விழுந்திருக்கிறார்கள்.

அதில் மூன்று பேர் பெண்கள். எனக்கு அப்படி நேரவில்லை.
ஒவ்வொரு சடலத்திற்கு முன்னாலும் நாங்கள் சிறு குழுவாக பத்துப் பேர் நின்று சடலத்தை ஆராய்ந்து கொண்டிருப்போம்.

அங்கத்தை வெட்டி, நரம்புகள் உட்பட பலவற்றை ஆய்வு செய்ய வேண்டியதிருக்கும். கையுறை அணியாமல் வெறும் கையில் தான் வெட்ட வேண்டியதிருக்கும்.

எனக்கு முதலில் அலர்ஜியாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் நுழையும் மாணவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.

இங்கே பாருங்க, இப்ப வேற கேண்டீன் இருக்கிற இடத்தில் அப்போது ‘நைனா கேண்டீன்’ இருந்தது. ஒரு மலையாளி நடத்திக் கொண்டிருந்தார்.

ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் எந்தப் பேதமும் இல்லாமல் இங்கே உட்கார்ந்திருப்போம். ஜாலியா இருக்கும்.

காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணிவரை கிளாஸ் இருக்கும். வகுப்பில் தவறாமல் ஆஜராகி விட வேண்டும். அதில் கண்டிப்பாக இருப்பார்கள். இரண்டாவது ஆண்டிலிருந்து ‘கட்’ அடிப்பதெல்லாம் ஆரம்பித்துவிடும்.

அப்போது ‘ராக்கிங்’ நடக்கும். ஜூனியர்களை அபிநயம் பண்ணச் சொல்லுவார்கள். என்னைக் கூப்பிட்டார்கள். போனேன்.

சேர் இல்லாமல் இருக்கிற மாதிரி பாவனை பண்ணினபடி நிற்கச் சொன்னார்கள். நின்றேன். ஒரே நாளில் கொஞ்ச நேரம்தான். முடிந்ததும் நண்பர்கள் ஆகிவிடுவோம்.

வேறு எந்த அசிங்கமும் நடக்காது.

பிரமாதமான ஆசிரியர்கள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்த கூப்பர் என்பவர் அனாடமி ஆசிரியர். ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் போர்டில் சாக்பீஸால் விரைவாக எழுதுவார். பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருப்போம்.” என்றவர் ஒரு கட்டடத்தைச் சுட்டிக்காட்டினார். உள்ளே சில ஆடுகள்.

“இந்த இடத்தில்தான் பல உயிரினங்களை வைத்து ஆராய்ச்சி பண்ணுவோம். பக்கத்தில் உள்ள மூர் மார்க்கெட்டில் இருந்து நான்கு குரங்குகளை தலா பத்து ரூபாய் விலையில் வாங்கி இங்கே வைத்திருந்தேன். அந்தக் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி பண்ணுவேன்.

சிகரெட் எந்த அளவுக்கு மனிதர்களைப் பாதிக்கிறதுங்கிறதைத் தெரிஞ்சுக்க ஒரு குரங்குக்கு சிகரெட் புகைக்கக் கற்றுக் கொடுத்தோம். சில நாட்களில் அந்தக் குரங்கு ஜம்மென்று சிகரெட்டைப் புகைத்து புகையையும் விட ஆரம்பித்து விட்டது.

மனிதர்களுக்கு இருக்கிற மாதிரியே அதற்கு இதயம் சின்னதாக இருக்கும். அதைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். அதற்குள் எங்க ஆசிரியர் ஒருத்தருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.

நாங்க வெளியே போயிருந்தபோது அடைபட்டிருந்த அந்தக் குரங்குகளைத் திறந்து விட்டு விட்டார். அதோடு அந்த ஆராய்ச்சி போச்சு” – சிரிக்கிறார்.

“பிசியாலஜி வகுப்பில் தவளையின் இதயத்தைப் பிளந்து பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. குறிப்பிட்ட திரவத்தில் தவளையின் சின்ன இதயத்தைத் துடிக்க வைத்துப் பார்க்கும்போது வியப்பு மேலிடும். அப்போதே கார்டியாலஜி தான் நமக்கான துறை என்று முடிவு பண்ணி விட்டேன்.

மூன்று ஆண்டுகள் முடிந்ததும் டாக்டர் சுந்தர வதனத்திடம் வீட்டிற்குப் போய் ஆசீர்வாதம் வாங்க தாத்தாவுடன் போயிருந்தேன்.

எனக்கு முதலில் ஸ்டெதாஸ்கோப் வாங்கிக் கொடுத்து அவர் ஆசிர்வதித்தார். அதன் பிறகு மருத்துவமனை வார்டுக்குப் போக ஆரம்பித்தேன்.

டாக்டர்.கலாநிதி என்னுடன் படித்த சக மாணவர். அவர் இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் இருப்பார். ஆனால் எனக்கு படிப்பைத் தவிர வேறு எந்த ஈடுபாடும் இருந்ததில்லை.

கல்லூரி ஆண்டு மலரில் இதயத்தில் நிகழும் சிக்கலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கிருஷ்ணன் குட்டி என்கிற கார்டியாலஜிஸ்ட், அதைப் பார்த்துவிட்டு ‘வைவாவில் இவரை எதுவும் கேட்க வேண்டாம்’ என்று பாராட்டி அனுப்பிவிட்டார்.”

காரில் வெளியே வரும்போது பக்கத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அரசு மருத்துவமனை. “நாங்க படிக்கிறப்போ இங்கேதான் ‘ஹவுஸ் சர்ஜனா’ இருந்தேன்.

அப்போ இங்கே எம்.வார்டுன்னு ஒரு வார்டு இருக்கும். சிவசுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், கக்கன் என்று எல்லோரும் இங்கே வந்திருக்காங்க. பெரியார் இங்கே அட்மிட் ஆகியிருக்கிறார். ராஜாஜியும் வந்திருக்கார்.

அப்போ எல்லோரும் அரசு மருத்துவமனைக்கு தான் வருவாங்க. தனியார் மருத்துவமனைக்குப் போக மாட்டாங்க. எம்.ஜி.ஆர். குண்டடி பட்டப்போ இங்கே தான் ஆபரேஷன் நடந்தது” என மலரும் நினைவுகளில் மனம் நெகிழ்ந்தவர்,

“அப்போ இருந்த ஆசிரியர்-மாணவர் உறவு அவ்வளவு அருமையா இருந்துச்சு. பரஸ்பரம் மதிப்பு, மரியாதை, அன்பு எல்லாமே இருந்துச்சு.

அது இயல்பாக இருந்தது. அந்த நாட்கள் இப்பவும் மனசுக்குள் பசுமையான ஒண்ணா இருக்கு.
என்னுடைய அனுபவத்தை வைத்து பெரிய ஆஸ்பத்திரி கட்டி சம்பாதிக்கணும் என்கிற எண்ணம் எல்லாம் எனக்கு வரவே இல்லை.

எனக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சிருக்கு. இது போதும் என்ற மனசு தான் இருக்கு. அதுவே நிறைவா இருக்கு” – ஆன்மீகச் சாயல் படிந்தபடி பேசுகிறார் தமிழகத்தில் உள்ள பல பிரபலமானவர்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறவரான டாக்டர்.எஸ்.தணிகாசலம்.

சந்திப்பு: மணா

You might also like