எப்போது நீ மனிதனாவாய்?

உன்னுடைய கொடியை
உயர்த்திப் பிடித்துக் கொள்!
எதற்காக
அடுத்தவர் கொடிக்கம்பத்தை
அறுக்கத் துடிக்கிறாய்?

உன்னுடைய மார்க்கத்தில்
பூக்களைத் தூவிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் மார்க்கத்தில்
முட்களைப் பரப்புகிறாய்?

உன்னுடைய படத்தை
ஆணியில் மாட்டிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் படத்தின் மேல்
ஆணி அறைகிறாய்?

உன்னுடைய நிறைகளை
ஊரெங்கும் சொல்லிக் கொள்!
எதற்காக
அடுத்தவர் குறைகளை
ஆராய்ச்சி செய்கிறாய்?

உன்னுடைய தோட்டத்தில்
வேலி போட்டுக் கொள்!
எதற்காக
அடுத்தவர் தோட்டத்தில்
அத்து மீறுகிறாய்?

ஊரை எழுதுகிறாய்!
பேரை எழுதுகிறாய்!
எப்போது
உண்மையில் நீ யாரென்று
எழுதப் போகிறாய்?

மதத்தைச் சொல்கிறாய்!
சாதியைச் சொல்கிறாய்!
எப்போது
மனிதன் என்று நீ
சொல்லப் போகிறாய்?

– கவிவேந்தர் மு.மேத்தா

You might also like